‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல!
வேத மதம் என்று அழைக்கப்பட்ட பண்டைய ஆரிய மதத்திற்கு மூன்று தனிப்பட்ட குணாம்சங்கள் இருந்தன. மாட்டிறைச்சி உண்பது, குடிப்பது மற்றும் கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடுவது, இவை அன்றைய வேத மதத்தின் கூறுகளாகவே இருந்தன. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவற்றைப் பின்பற்றினார்கள். இப்போதும்கூட சில பார்ப்பனர்கள் அந்த நாட்களுக்குத் திரும்பிப் போய் விடமாட்டோமா என்ற ஏக்கத்தோடு கனவு காண்கிறார்கள். அந்தப் பண்டைய மதத்தோடு மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமிருந்திருந்தால் எதற்காக இந்திய மக்கள் அன்று இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, புத்த மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்? எதற்காக அவர்கள் வேத மதத்தை உதறித்தள்ளிவிட்டு, சமண மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்? நம்முடைய முன்னோர்கள் அந்த மதத்திற்குள்ளேயே இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு அந்த மதத்திற்குள் இருந்தார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நால்வர்ண அமைப்பு என்பது இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக நிலவிய ஓர் அமைப்பு. அதில் பார்ப்பனர்கள் கல்வி கற்பதற்கும் சத்திரியர்கள் போர் புரிவதற்கும் வைசியர்கள் பொருள் சேர்ப்பதற்கும் சூத்திரர்கள் ஏவல் செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதுதான் அந்நாளைய நடைமுறைச் சட்டம். அப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் சூத்திரர்களிடம் கல்வி இல்லை, பொருள் இல்லை, ஆயுதங்களும் இல்லை. உங்களுடைய முன்னோர்கள் இது போன்றதொரு வறிய, கையறு நிலையில் வாழ்வதற்குத்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மதத்தை அவர்கள் தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டார்கள் என்று எந்த அறிவுள்ள மனிதனும் சொல்ல மாட்டான்.
இந்த இடத்தில், இப்படிப்பட்ட இந்து மதத்தை ஏற்று கிளர்ச்சி செய்யும் வாய்ப்பு உங்கள் முன்னோருக்கு இருந்திருக்க முடியுமா என்று எண்ணிப் பார்ப்பது அவசியம். அப்படி ஒரு வாய்ப்பு இருந்து அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சொன்னால் அந்த மதத்தை அவர்கள் தாங்களாகவே ஏற்றுக் கொண் டார்கள் என்று சொல்லலாம். ஆனால் உண்மை நிலவரங்களை ஆராய்ந்தால் அந்த மதத்திலேயே வாழுமாறு நம் முன்னோர்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆகவே, இந்த இந்து மதம் என்பது நம்முடைய முன்னோர்களுடைய மதம் அல்ல. மாறாக அவர்கள் மீது அடிமைத்தனத்தை வன்முறையாகத் திணித்த மதம். இதை எதிர்த்துப் போராட நம் முன்னோர்களிடம் எந்தவொரு வழி வகையும் இல்லை என்பதால்தான் அவர்களால் எதிர்த்துப் போராட முடியவில்லை. அதனால்தான் இந்த மதத்திற்குள்ளேயே இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்களுடைய இந்த கையறு நிலையை யாரொருவரும் குற்றம் சொல்லிவிட முடியாது. மாறாக பரிதாபம்தான் கொள்வார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் மீது இதுபோன்ற எந்த வகையான அடிமைத்தனத்தையும் எவரொருவரும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது. அவர்களுக்கு அனைத்து வகையான சுதந்திரமும் இருக்கிறது. இந்த சுதந்திர வழிகளைக் கொண்டு அவர்கள் தங்களை விடுதலை செய்து கொள்ளத் தவறுவார்களேயானால் அவர்களை இந்த பூமியில் வாழ்வதிலேயே மிகக் கேவலமான, அடிமைப்புத்தி கொண்ட, அண்டிப் பிழைக்கும் பிறவிகள் என்று மிகுந்த வருத்தத்தோடு அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
1936, மே 30, 31 தேதிகளில் அம்பேத்கர் நடத்திய பம்பாய் மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து
பெரியார் முழக்கம் 13122018 இதழ்