குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (8) இந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.
“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
எந்தவிதமான மரியாதைக்குரிய பண்பும் இல்லாத தலைவராகத்தான் ம.பொ.சி. வாழ்ந்திருக் கிறார். காங்கிரசுக்கு உள்ளேயே இருந்துகொண்டு 1946ஆம் ஆண்டு தமிழரசுக் கழகத்தை ம.பொ.சி. உருவாக்கினார். 1938ஆம் ஆண்டிலேயே பெரியார் தனித் தமிழ்நாடு கேட்டார். ஆனால் அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து அமைப்பு தொடங்கிய ம.பொ.சி.தான் முதன்முதலில் தமிழ்நாடு கேட்டார் என்று தமிழ்தேசியவாதிகள் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். அப்போது முதலில் சுதந்திரத் தமிழரசு அமைப்பதே என் லட்சியம் என்றார். பிறகு 1953ஆம் ஆண்டில் வெளியாட்கள் சுரண்டல் இல்லாத தமிழ்நாடு அமைந்தாலே போதும் என்றார்.
இந்து பார்ப்பன நாளேட்டுக்கு ம.பொ.சி. எழுதிய கடிதத்தில், ‘என் ஆயுளில் இதுவரை சுதந்திரக் குடியரசு தேவை என்று நான் பேசியதே இல்லை’ என்று எழுதினார். இந்த மாதிரியான பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக் கழகம் தொடங்கப்பட்டது என்று தான் தனிநாடு கேட்பதாக இந்து வெளியிட்ட செய்தியை மறுத்தார். ”என் தலைமையை எதிர்ப்பவர்கள் என்னை விட கிராமணியை (ம.பொ.சி.) அதிகம் தாக்குகிறார்கள். அதற்குக் காரணம் உண்டு. கிராமணியார் வீர அபிமன்யூ போன்றவர். என்னால் உடைக்க முடியாத எதிரிகளின் வியூகத்தை உடைத்து, என்னை உள்ளே அழைத்துச் செல்பவர்” என்று ம.பொ.சியைப் புகழ்ந்து ராஜாஜி தனது வாழ்க்கை வரலாறு போன்ற ஒரு நூலில் எழுதியிருக்கிறார்.
உடனே ம.பொ.சியும் தன்னை ராஜாஜியின் கையாள் என்பதை ஒப்புக்கொள்வதைப் போல எழுதுகிறார். தேசிய ஒருமைப்பாட்டைக் கருதியேனும் இந்துக்கள் குறிப்பாக தமிழகத்தார் இந்து மதத்தை உறுதியாகக் கடைபிடித்து வரவேண்டியிருக்கிறது என்றும் ம.பொ.சி பேசினார். இப்போது தமிழிசையும், ராதாகிருஷ்ணனும் பேசியதை, அவர்கள் ஆளாக அப்போதே பேசியவர்தான் இந்த ம.பொ.சி. ஒருமுறை சமஸ்கிருத தினத்தில் ம.பொ.சி. பேசுகையில், “இந்தியாவில் ஆதி மதமான இந்து மதம்தான் இந்திய ஒருமைப்பாட்டின் ஆணிவேராக இருந்து வருகிறது. தமிழ் மொழி எனது தாய் மொழி. ஆனால் இந்தியன் என்ற முறையில், இந்து என்ற வகையிலே சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழி” என்கிறார். ம.பொ.சி. எழுதிய தமிழும், சமஸ்கிருதமும் என்ற நூலில் இந்தத் தகவல் இருக்கிறது.
1951 ஆகஸ்ட் 1, 1952 ஆகஸ் 1, 1953 ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று ஆண்டுகளும் ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை பெரியார் நடத்துகிறார். இதையடுத்து 1954ஆம் ஆண்டில் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். அதற்குப்பிறகு 1957ஆம் ஆண்டில் அரசியல் சட்டம் எரிப்புப் போராட்டம் நடத்தினார். ஆனால் 1951 மார்ச் முதல் நவம்பர் வரை நாடு முழுவதும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை ம.பொ.சி. நடத்தினார். அந்த மாநாடுகளில் விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு (இந்தக்காலத்து எஸ்.வி.சேகர் போன்றவர்கள்) போன்ற பேச்சாளர்கள் மிகவும் தரம் தாழ்ந்து பெரியாரையும், அவரது கொள்கைகளையும் சாக்கடை மொழியில் ம.பொ.சி. முன்பாகவே பேசி வந்தனர்.
அப்பன் தொழிலை பிள்ளைகள் செய்ய வேண்டு மென்று தொடக்கப் பள்ளிகளில் ஆச்சாரியார் அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து பெரியார் போர்க்கொடி உயர்த்தினார். ஆனால் அந்த குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்து தமிழரசுக் கழகத்தின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி னார்கள். மற்ற எல்லோரும் இந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தார்கள். குறிப்பாக காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அப்போதைய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருந்த காமராசர் எதிர்த்தார். பொதுச் செயலாளராக இருந்த சேலம் சாரதா கல்லூரியின் அதிபர் பாரிஸ்டர் எஸ்.வி.ராமசாமி (பின்னாளில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர்) எதிர்த்தார். இந்த நாட்டின் தொற்றுநோய் போல வந்தவர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று எஸ்.வி.ராமசாமி பேசினார். ஆனால் குலக்கல்வித் திட்டம் எங்களுக்கு வேண்டும், அப்பன் தொழிலைத்தான் நாங்கள் செய்வோம் என்று ம.பொ.சி. யின் தமிழரசுக் கழகத்தின் தலைமை செயற்குழு ராஜாஜியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது.
இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை பெரியார் நடத்திய போது, தார்பூசி மறைத்த இந்தி எழுத்துகளை மண்ணெண்ணெய் ஊற்றி அழித்து ம.பொ.சி. தனது இந்தி ஆதரவை வெளிப்படுத்தினார். எனவே இந்தி எதிர்ப்பு உணர்வும் இவருக்கு இல்லை. ம.பொ.சியின் வாழ்க்கை வரலாற்றை இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற பெயரில் பெ.சு.மணி என்ற ஆய்வாளர் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை காங்கிரஸ் பெயரால் நடத்தாமல், திராவிட இயக்க எதிர்ப்பு முன்னணி என்ற பெயரால் ம.பொ.சி நடத்தினார் என்று அந்த நூலில் பெ.சு.மணி கூறுகிறார். பகுத்தறிவுவாதம், மூட நம்பிக்கைகளை ஒழித்தல், இன உணர்ச்சி என்ற பெயரால் தமிழக மரபு, பண்பாடு, ஆன்மீகம் ஆகியவற்றிலிருந்து திசை திருப்பி தவறிச் செல்லாமல் கட்டிக் காத்தன திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகள் என்றும் அந்த நூலில் அவர் எழுதியிருக்கிறார்.
“நான் தமிழன் என்னும் உணர்வுடையவன், தமிழ் பேசும் எல்லா மக்களுக்கும் இந்த உணர்வு வரவேண்டும் என்று எண்ணுபவன். ஆயினும் தமிழன் என்ற வகையிலே எனக்கு இந்த உலகில் உள்ள உறவுகள் சுமார் 4 1/2 கோடி பேர்தான். ஆனால் இந்துவாக இருப்பதால் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களோடு உறவு கொள்ள முடிகிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்த உறவுக்காகத்தான் நான் இந்துவாக இருக்கிறேன். இனியும் அப்படியே இருக்கப்போகிறேன். சமஸ்கிருதம் இந்துக்களின் பொது மொழியாக இருப்பதன் காரணமாக இம்மொழியில் அர்ச்சனையை விரும்புவோருக்கு தடை சொல்லக்கூடாது. இது இந்து மதத்தவரின் ஒருமைப்பாட்டுக்கு உதவிபுரியும்” என்றெல்லாம் பேசினார் ம.பொ.சி.
இப்படி எல்லா வகையிலும் திராவிட இயக்கக் கொள்கைக்கு எதிராகவே இருந்த ம.பொ.சி.தான் உதயசூரியன் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினரானர். பதவிக்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். திமுக ஆட்சிக் காலத்தில் மேலவைத் துணைத் தலைவரானார். அடுத்து அதிமுக வெற்றிபெற்ற போது எம்.ஜி.ஆர். ஆட்சியில் மேலவைத் தலைவராகிவிட்டார். எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு மீண்டும் காங்கிரசுக்குப் போய்விட்டார். அப்போது இந்திய அமைதிப்படை ஈழத்துக்குப் போனது. அதையொட்டி அமைதிப் படை ஆதரவு பரப்புரைப் பயணம் என்ற ஒன்றை நடத்தினார்கள். அதில் ஜெயகாந்தன், தா.பாண்டியன், ம.பொ.சி ஆகிய 3 பேரும்தான் முக்கியப் பேச்சாளர்கள்.
இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து அமைதிப் படைக்கு ஆதரவு மாநாடுகளை நடத்தினார்கள். கலைஞர் தெலுங்கர், தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று பேசும் இன்றைய தமிழ்த்தேசிய தலைவர்கள் தமிழர்களுக்கு இவ்வளவு துரோகம் செய்த ம.பொ.சியைப் பற்றி என்றாவது ஒருநாள் பேசியிருப்பார்களா? மணியரசன் போன்றவர்களைத்தான் கேட்கின்றோம். தமிழ்த் தேசிய தலைவர்கள் என்றால் இப்போது வந்த நடிகர்களைப் பற்றி நான் பேசவில்லை. தமிழ்பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் இவர்கள் பேசும் தமிழ் தேசியக் கொள்கை. இது தான் கொள்கை எனில், பன்னீர்செல்வம் முதலமைச்சரான போதே கோரிக்கை நிறைவேறிவிட்டது என்று கட்சியைக் கலைத்து விட்டு சென்றிருக்கலாம். இப்போது இரண்டாவது முதலைமைச்சரும் தமிழ்பேசும் குடும்பத்திலிருந்தே வந்துவிட்டார். ஆனால் தான் முதலமைச்சராக வேண்டுமென்பதுதான் தமிழ் தேசியம் என்கின்றார். இதைத் தமிழ்தேசியம் என்று சொன்னால் நாம் கேட்டுக்கொள்ள வேண்டுமாம். இப்படிப்பட்டவர்கள்தான் திராவிடர் இயக்கத்தைப் பற்றி, திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பற்றி, திராவிடம் என்ற சொல்லைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிடம் என்பதை பாரதிதாசன் மறுத்து விட்டார் என்றும் இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் இரண்டு திராவிடம் பேசப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணா பேசிய திராவிட நாடு வேறு. 4 மாநிலங்களின் கூட்டரசாக திராவிட நாட்டை அறிவித்தார். ஆனால் பெரியாரோ சென்னை மாகாணத்தைதான் திராவிட நாடு என்றார். முன்பே சொன்னதுபோல கன்னடமும், மலையாளமும் பிரிந்துசென்ற பிறகு திராவிட நாடு திராவிடருக்கே என்று சொல்ல வேண்டாம், தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லுங்கள் என்றார் பெரியார். ஆனால் திராவிடம் என்ற கொள்கையை தவறு என்று சொல்லவில்லை.
பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற நூலில் இருக்கிற கவிதை ஒன்றை இங்கு சொல்ல வேண்டும். 15.07.1958இல் குயில் ஏட்டில் இந்தக் கவிதையை எழுதுகிறார்.
திராவிடம் இது தமிழகம் என்பதன் திரிபு; ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவை களில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! – மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் – தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க – தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் – தமிழின்
திரிபே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேர்தான்
பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு.
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? – தெரிந்த
பழத்தைப் பயம்பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! – திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.
தென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் – மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப் பெயரே பூண்டு.
திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் – திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப் பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று -திராவிடம்
வெல்க என்று சொன்னால் நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்க என்று விண்டதுவே யாம்.
– என்று எழுதினார் பாரதிதாசன்.
ஆனால் பாரதிதாசன் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று மணியரசன் பேசுகிறார். ஆனால் பாரதிதாசனோ 1958ஆம் ஆண்டில் திராவிடமும், தமிழும் ஒன்றுதான் என்று வலியுறுத்தி பாடியுள்ளார். ஆனால் பெரியார் 1956ஆம் ஆண்டிலேயே திராவிடநாடு என்ற முழக்கத்தை ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று மாற்றி அமைத்தார்.
தொகுப்பு : ந. பிரகாசு
பெரியார் முழக்கம் 29112018 இதழ்