ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் (5) விடுதலைப் புலிகளே தங்களை திராவிடர்கள் என்றே பதிவு செய்தனர்
“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
பெரும்பான்மை மக்களாகிய நம்மை, எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களாகிய பார்ப்பனர்களுடன் ஒப்பிட்டு நம்மைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்று கூறுவதா என்று கேட்ட பெரியார். சிதம்பரத்தில் ஒருமுறை பேசும்போது கூட பெரியார் கேட்டார். ”உங்களைப் பார்த்து ஈரோட்டவர் அல்லாதவர்களே (சூடிn நுசடினயைளே) என்று நான் பேச இயலுமா? ஈரோட்டிலிருந்து நான் மட்டும்தான் வந்திருக்கிறேன். நீங்கள் 10,000 பேர் இருப்பீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் இந்த ஊர். அதுபோலத்தான் எண்ணிக்கை யில் குறைவாக இருக்கிற பார்ப்பனர்களை ஒப்பிட்டு நம்மைக் குறிக்க பார்ப்பனர் அல்லாதவர் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது” என்று பேசினார். அதற்கு மாற்றாக ஒரு உடன்பாட்டுச் சொல்லாக, எதிர்மறைச் சொல்லாக அல்லாமல், நேர்மறைச் சொல்லாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிடர் என்ற சொல்லை 1939ஆம் ஆண்டு பெரியார் பரிந்துரைத்தார்.
இதன் தொடர்ச்சியாகத்தான் 1944ஆம் ஆண்டு நீதிக் கட்சியை பெரியார் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றினார். ஆனால் பார்ப்பனர் அல்லாதோர் சங்கம் தொடங்கிய காலங்களிலேயே தன்னுடைய கிளை சங்கங்களுக்கு திராவிடர் சங்கம் என்றுதான் பெயர் வைத்தார்கள். தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் இராயப்பேட்டை கிளைக்கு திராவிடர் சங்கம் என்றுதான் பெயர் வைத்தார்கள். ஜார்ஜ் டவுன் திராவிடர் சங்கம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இவையெல்லாம் 1917, 1918ஆம் ஆண்டு களிலேயே இருந்தது. பின்னாளில் அவற்றின் பெயர்களை மாற்றினார்கள், அது ஒருபக்கம் இருக்கட்டும். 41 1/2 மில்லியன் (4 கோடியே 15 லட்சம்) மக்கள் பார்ப்பனர் அல்லாதார் இருக்கிறோம் என்று பார்ப்பனர் அல்லாதார் அறிக்கையில் சொன்னார்கள்.
அதில் 1 1/2 மில்லியன் கூட இல்லாத வர்கள்தான் 40 மில்லியன் மக்களை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். உற்பத்தியில் எந்தத் துறையிலும் ஈடுபடாத அவர்கள்தான் சுகமான வாழ்க்கையை, உழைப்பில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ’விதைக்காமல் விளையும் கழனி’ என்று இதற்கு அண்ணா மிக சுருக்கமான வரியில் விளக்கம் கொடுப்பார். இதுதான் திராவிடர் இயக்கத்தின் தொடக்கம். இன்றைக்கும் அப்படி இருக்க விரும்புகிறார்கள். எனவே பெரியார், அண்ணா, கலைஞருக்கு முன்பே திராவிடர் என்ற சொல் வழக்கில் இருந்தது என்பதற்காகவே இதைச் சொன்னேன்.
அயோத்திதாசரைப் பற்றியும் சொல்லு வார்கள். ஆங்கிலேயர் கொண்டுவந்த ஆட்சிப் பொறுப்புகளில் எல்லாம் இந்தியர்களுக்கும் பங்கு வேண்டுமென்று கேட்டு காங்கிரசுதான் முதலில் ஒரு சங்கம் வைத்தது. இந்திய வேலைகளை இந்தியர்களுக்கு கொடு என்று ஆங்கிலேயர்களிடம் அவர்கள் மனு கொடுத் தார்கள். அந்த மனுவின் அடிப்படையில் ஆங்கிலேயர்களும் வேலை கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த வேலைகளை எல்லாம் பார்ப் பனர்களே வைத்துக் கொண் டார்கள். இதைப் பலபேர் எதிர்த்தார்கள். முதல் எதிர்ப்பு தமிழ்நாட்டி லிருந்துதான் வந்தது.
தமிழ்நாட்டில் அப்போது விசுவகர்மா சங்கம் என்று ஒன்று இருந்தது. அவர்களை ஐம்பொன் தொழிலாளர்கள் என்று சொல்லுவார்கள். அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். திராவிட மகாசன சபை என்று பெயர் மாற்றப்பட்ட ஆதிதிராவிடர் மகாசன சபை இதை எதிர்த்தது. இதனுடைய தலைவராக இருந்தவர் அயோத்திதாசர். 156 அடி நீளம் உள்ள மனு என்று நினைக்கிறேன். அதில் கையெழுத்து வாங்கி அவர் அந்த மனுவை அளித்தார். எல்லா வேலைகளையும் பார்ப்பனர்களே வைத்துக்கொள்கிறார்கள். எனவே வேலைகள் அனைத்தையும் பிரித்துக் கொடுங்கள் என்று அந்த மனுவில் அயோத்திதாசர் கோரிக்கை வைத்திருந்தார்.
ரிவரன்டு ஜான் ரத்தினம் என்று ஒருவர் இருந்தார். 1890களில் இவர் திராவிடர் கழகம் என்ற அமைப்பை வைத்திருந்தார். அதிலும் அயோத்திதாசர் இருந்துள்ளார். அங்கிருந்து வந்தவர்தான் தனியாக ஒரு அமைப்பைத் தொடங்கி, பத்திரிகையும் நடத்தி வந்தார். அதற்குப் பின்னால் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வந்தபின்னால் கோவில்பட்டியில் 1927ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசுகிறார். அது திராவிடர் கழகத்தின் 18ஆவது ஆண்டு விழா. சிவஞான யோகி என்ற ஒருவர் அங்கு போய் ஒரு அமைப்பை நடத்திக் கொண் டிருந்தார். இவர் கோவை மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர். அவர் ஒரு துறவியும்கூட. ஆனாலும் பார்ப்பனர் அல்லா தோர் இயக்கமாக இதை நடத்திக்கொண்டு வந்தார்.
நீண்ட நெடிய காலமாக பார்ப்பனர் அல்லாதாரைக் குறிக்கிற ஒரு சொல்லாக திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்காக இவற்றைச் சொல்கிறேன். அந்த சொல்லைப் பற்றி இந்த வேளையில் இன்னும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். இப்போது சிலர் எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழன், நாங்கள் எப்படி திராவிடன் என்று கேட்கின்றனர். முதலில் இதிலிருந்து தொடங்க வேண்டுமென்று நினைக்கிறேன். சிறியவர்களிலிருந்து மூத்தவர் களுக்குப் போவோம். ஈழத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசு கட்சி உள்ளது. மாவை. சேனாதிராஜா அதனுடைய பொதுச் செயலாளராக உள்ளார். சம்மந்தம் தலைவராக உள்ளார்.
’அவர் தமிழீழம் மலர’ என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ”இலங்கை ஒரு தீவு, ஆனால் இலங்கை இரு நாடு. அதுவும் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குப் பின்னர்தான். அதற்கு முன்னர் இலங்கை முழுவதும் ஒரு திராவிடர் நாடு” என்று அவர் அந்த நூலில் சொல்கிறார். ஈழத் தமிழர்களுடைய நாட்டை அவர் ஒரு திராவிடர் நாடு என்று சொல்கிறார். “இந்த நாட்டிற்கு இப்போது வந்த சிங்கள இனம் நம்மைக் கைப்பற்ற பார்க்கிறது. இலங்கை உட்பட தென்னாடு வரையில் பரந்து வாழ்ந்த திராவிட இனத்தின் வழித் தோன்றலே தமிழினம்” என்பதை யெல்லாம் சொல்லி அவர் இந்த நூலை அவர் தொடங்கியுள்ளார்.
1940ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லியில் ஒரு மாநாடு நடக்கிறது. ஆங்கிலேயர்கள் நடத்திய மாநாடு அது. அந்த மாநாட்டில் இலங்கையில் இருக்கிற ஈழத்தமிழர்கள் சார்பாக ஒரு மனு அளிக்கப்பட்டது. வரலாற்றுக் காலத்திலிருந்து திராவிடர் களாகிய தமிழர்கள் இங்கு வாழ்கிறோம் என்று அந்த மனுவில் அவர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் எல்லாம் பழைய தமிழர்கள். அவர்களுக்கு அறிவு சற்று குறைவு; புலிகளுக்குத்தான் அறிவு உள்ளது என்றும்கூட இவர்கள் சொல்லு வார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பின்னால், 1978ஆம் ஆண்டு கியூபாவில் உலகம் முழுக்க இருக்கிற விடுதலைப் போராளிகள் எல்லாம் சேர்ந்து (மாணவர்கள், விடுதலை உணர்வுமிக்க போராளிகள் இணைந்து) ஒரு மாநாட்டை நடத்தினார்கள்.
அந்த மாநாட்டில் விடுதலைப் புலிகள் ஒரு அறிக்கையை அளித்தார்கள். “சிலவற்றை நாங்கள் உலக நாடுகளுக்கு அறிவிக்க விரும்புகிறோம் என்று தொடங்கும் அந்த அறிக்கையில் றுhடி ஹசந கூயஅடைள (னுசயஎனையைளே), என்ற துணைத் தலைப்பில் இலங்கையில் வாழ்கிற திராவிடர்களாகிய நாங்கள்” என்று கூறியிருக்கிறார்கள். மேலும், அங்கு தமிழ்த் தேசிய உணர்வுகொண்ட பல அறிஞர்கள் இருந்தார்கள். தாராக்கி சிவராம் என்ற பெரிய பத்திரிகையாளர், இராணுவ முறைகளில், படை மரபியலில் பெரிய அறிஞராகக் கருதப்பட்டவர். உலக நாடுகளில் நடந்த படையெடுப்பு பற்றியெல்லாம் எழுதியவர். அவரை அடையாளம் தெரியாத அளவுக்கு சிங்களர்கள் சுட்டுக்கொன்று விட்டனர். இன்றளவிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.
அவர் எழுதியிருக்கிறார். “தமிழர் களுடைய, புலிகளுடைய தமிழ்த்தேசிய சிந்தனை எங்கிருந்து வந்தது? திராவிட மரபிலிருந்து வந்த தமிழ்த்தேசிய உணர் வோடு போராடியவர்கள்” என்று தொடங்கி கட்டுரை எழுதியுள்ளார். புலிகளுக்கு முன்னால் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் பலர் இருந்தார்கள். அதில் நவரத்தினம் என்பவர் குறிப்பிடத்தக்க ஒருவர். ஈழத்தமிழர் களின் வேண்டுகோள் என்று ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். அது சிங்களர் களுக்குப் போய்ச் சேர வேண்டுமென்பதற்காக சிங்களத்திலும் வெளியிடுகிறார். அந்த அறிக்கையில் சிங்கள மொழியிலும்கூட திராவிட என்ற வார்த்தையையே அவர் பயன்படுத்தியுள்ளார்.
தொகுப்பு: ர.பிரகாசு
பெரியார் முழக்கம் 08112018 இதழ்