வெறுப்பு அரசியலை வளர்க்கும் ‘குஜராத் மாடல்’
பீகார் – உத்திரப்பிரதேச இந்திக்காரர் களையே விரட்டி அடிக்கிறது, மோடியின் குஜராத். இவர்கள் ‘இந்து’ தேசத்தை உருவாக்கப் போகிறார்களாம். உண்மையில் ‘குஜராத்’ என்பது மோசமான உணர்ச்சியின் உதாரணம்தான்.
பிரதமர் நரேந்திர மோடியாலும், பாஜக வினராலும் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘குஜராத் மாடல்’, பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங் களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குஜராத்திலிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருப்பதன் மூலமாக மீண்டும் ஒருமுறை தன் கோர வடிவத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிக் கொண் டிருக்கிறது. அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்களின் காரண மாகவும், அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் மூலமாகவும் மோடியின் ‘குஜராத் மாடல்’ எந்த அளவிற்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது என்பதை இன்னும் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குஜராத்தி லிருந்து அச்சத்துடன் மீண்டும் தங்கள் மாநிலங் களுக்குத் திரும்பும் தொழிலாளர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உண்மையில் இவர்கள் அனைவரும், 2014 மக்களவைத் தேர்தலின் போது மோடிக்காகவும் பாஜக விற்காகவும் ‘குஜராத் மடலை’ப் பிரச்சாரம் செய்வதற்காக குஜராத் வந்தவர்கள். புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் தற்போதைய வன்முறை வெறியாட்டங்களின் விளைவாக, வெளியேறுவது என்பது, எப்படித் தொடங்கியது? குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் ஹிம்மத்நகர் அருகில் 14 மாதப் பெண்குழந்தை வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளானது. இதற்கு பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர்தான் காரணம் என்றுகுற்றம் சாட்டப்பட்டு, “அயலார்களை விரட்டியடிப்போம்” என்று வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதுதான் காரணமாகும்.
கடந்த நான்கு நாட்களாக, புலம் பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வட குஜராத்தி லிருந்து, இரயில்கள், பேருந்துகள், லாரிகள் என எந்தவிதமான போக்குவரத்து கிடைத்தாலும் அதன்மூலம் தங்கள் ஊரை நோக்கிச் சென்று கொண் டிருக்கிறார்கள். மீண்டும்தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ள ஒருசிலர் மட்டும் வஸ்த்ரால் என்னுமிடத்தில் உத்தர்பாரதிய விகாஸ் பரிஷத் என்னும் அமைப்பின் தொண்டர்களால் அமைக்கப் பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருக் கிறார்கள். குஜராத் காவல் துறைத் தலைவர் சிவானந்த் ஜா, செய்தியாளரிடம் கூறுகையில், வன்முறையாளர்களுக்கு எதிராக இதுவரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 342 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். தொழிலாளர்கள் நவராத்திரி, தீபாவளி மற்றும் தங்கள் மாநிலத்தில் நடைபெறும் சில பண்டிகை களைக் கொண்டாடுவதற்காகத் தான் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறிக் கொண்டார், அது பொய் என்பது அவருக்கே தெரியும்.
குஜராத் மாநிலத்தில் சமீப காலங்களில் வன்புணர்வுக் கொடுமைகள் ஏராளமாக அரங்கேறி யிருக்கின்றன. எனினும் இப்போது ஒரு குழந்தை வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறது. கடந்த சில ஆண்டு களாகவே, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் ‘குஜராத் மாடலை’ இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள். பாஜகவின் வெறுப்பு அரசியலின் ஓர் அங்கமாக, குஜராத்திற்கு புலம்பெயர்ந்து வந்தவர் களுக்கு எதிராகவும்பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தவர்கள் வேலையில்லா இளைஞர்கள் தான். ஆனால் அவர்களுக்கும்கூட கவுரவம hன வேலை எதுவும் கிடைத்திடவில்லை. இவர்கள் தங்கள் கோபத்தை, இதற்குக் காரணமான ஆட்சியாளர் களுக்கு எதிராகத் திருப்பாமல், எவ்விதத்திலும் காரணமற்ற, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகத் திருப்பி இருக்கிறார்கள். இவ்வாறாவது தங்களுக்கு வேலை கிடைக்கலாம் என நம்புகிறார்கள். அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சலுகைகள் பெற்றுநிறுவனங்களை அமைத்திடும் தனியார் தங்கள் நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு – அதாவது 80 சதவீதம் – உள்ளூர் ஆட்களுக்கு வேலை அளித்திட வேண்டும் என்பதுமாகும். இதனை அவர்கள் நிறைவேற்றத் தவறியதும் இப்போது ஏற்பட் டிருக்கிற பிரச்சனைக்குக் காரணமாகும்.இந்த அம்சத்தை, காங்கிரஸ் எம்எல்ஏ அல்பேஷ் தாகூர் என்பவர் சமீபத்தில் பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர்தான் வன்முறையைத் தூண்டிவிடுகிறார் என்று தற்போது சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. குஜராத்தில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் குறித்து சமூக விஞ்ஞானியும், எழுத்தாளருமான அச்யுத் யக்னிக் கூறுகையில், “இதன்மூலம், அரசாங் கத்தின் பொருளாதாரக் கொள்கையின் தோல்வி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. வேலையற்ற இளைஞர்களின் பிரச்சனை களைத் தீர்த்திட, அரசாங்கம் தவறிவிட்டது. மாநிலத்தில் மிகவும்வலுவாக உள்ள தாகூர்கள் என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கூட இன்றைய தினம் வேலையின்மை மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது” என்கிறார். அவர் மேலும் கூறுகையில், “சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகள், ‘குஜராத் மாடல் என்பதன்கீழ் வளர்ச்சி’ என்கிற மாயைக்குப் பலியாகி, தங்கள் நிலங்களை விற்றுவிட்டு, தொழிலாளியாக மாறத் தயாரானார்கள். எனினும், பிற மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் எந்த வேலையையும், எந்த சம்பளத்திற்கும் செய்யத் தயாராய் இருந்த நிலையில், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளால் அவர்களுடன் போட்டி போட முடியவில்லை. இதுவும் பிற மாநிலத்த வருக்கு எதிராக உள்ளூர்வாசிகளுக்கு கோபம் ஏற்படுவதற்குக் காரணமாகும்” என்கிறார்.
வெறுப்பு அரசியல்
குஜராத் மாநிலத்தில் இப்போது ஏற்பட் டிருக்கும் மோசமான நிலைமைக்கு காரணம் ‘குஜராத் மாடலின்’ பொருளாதாரத் தோல்வி மட்டுமல்ல; மாறாக, கடந்த முப்பதாண்டு காலமாக இந்துத்துவா அமைப்புகளும், பாஜகவும் அங்கு முஸ்லிம்கள் உட்பட மதச் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் இப்போது புலம்பெயர்ந்து வந்துள்ளஅயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொண்டுவந்த வெறுப்பு அரசியல் பிரச்சாரமும் காரணங்களாகும். இவ்வாறான ‘வெறுப்பு அரசியல்’ என்னும் பூதம்தான் குஜராத்தை இப்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.“வெறுப்பு அரசியல் இப்போது புதியதொரு வடிவத்தில் வந்திருக்கிறது. 1980களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உருவான கிளர்ச்சிப் போராட்டங்கள், 1985வாக்கில் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் வகுப்புவாத மோதல்களாக மாற்றப்பட்டன. பின்னர் 1986-87 மற்றும்1990-92களில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பிரச்சனையைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறி வன்மம் நிறைந்த சம்பவங்களாக மாற்றமடைந்தன. பின்னர் 2002 கலவரங்கள் வெடித்தன,” என்று யாக்னிக் விளக்குகிறார். 2002 கலவரங்களுக்கு முன்னர், 1998களில் தெற்கு குஜராத்தின் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டன. இவர்களுடைய வெறுப்பு அரசியலானது கடந்த இரண்டு ஆண்டுகளாக, தலித்துகளுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்திருப்பதை நன்குகாண முடிகிறது. இதற்கு உனா சம்பவம் முக்கிய எடுத்துக் காட்டாகும். இப்போது பிற மாநிலத்தவர் களை “வெளிநபர்கள்” என்று முத்திரை குத்துகிற பிரச்சாரமாக உருவெடுத்திருக் கிறது.‘குஜராத் மாடலின்’ இருண்ட பக்கம் இப்போது தெளிவாகத் தெரியத் தொடங்கி விட்டது. விவசாய நெருக்கடி, வேலை யின்மை, வெறுப்பு அரசியல் ஆகியவற்றால் குஜராத் பீடிக்கப்பட்டிருக்கிறது. இதரபகுதி மக்களுக்கு இது ஓர் எச்சரிக்கை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாது, ‘குஜராத் மாடலை’ இன்னமும் மக்கள் நம்பினார்கள் என்றால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இதுபோன்ற பதற்ற நிலைமைகள் இன்னும் உருவாக்கப்படக் கூடும்.
‘தி ஒயர்’ இணைய இதழில் வெளி வந்த கட்டுரை
பெரியார் முழக்கம் 08112018 இதழ்