வாசகர்களிடமிருந்து…
‘கருப்பும் காவியும் இணைந்தபுள்ளி’ கட்டுரை பல அரிய தகவல்களைத்தந்தது. பார்ப்பனியத்தை முதன்மையான எதிரியாக தமிழினத்துக்கு அடையாளம் காட்டிய பெரியார், அதற்குக் கருத்தியலை வழங்கும் பார்ப்பனர்களைக்கூட அவர்கள் மேலாதிக்கத்தை எதிர்த்தாரே தவிர, தனிப்பட்ட பார்ப்பனர்களிடம் பகைமை பாராட்டியதில்லை. அனல் வீசும் கருத்துக் களங்களும் அதன் வழியாக நடந்த உரையாடல்களுமே தமிழ் நாட்டைப் பண்படுத்தி உயர்ந்தன. பெரியாரின் அத்தகைய அணுகுமுறைக்கு சான்றாக பெரியார்-அடிகளார் உறவு நிலவியது.
1971ஆம் ஆண்டு சேலத்தில் “இராமனை செருப்பாலடித்த” திராவிடர் கழக ஊர்வலத்தைத் தொடர்ந்து பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் எழுச்சியைத் தமிழகம் பார்த்தது. அப்போது பெரியார் உருவப் படத்தை பார்ப்பன சக்திகள் பல பகுதிகளில் செருப்பாலடித்தபோது பெரியார் ஆத்திரப்படவில்லை. குறைந்த விலையில் எனது செருப்பையும் படத்தையும் அனுப்புகிறேன்; நன்றாக அடியுங்கள்; அதன் வழியாக எனது கொள்கைதான் பரவும் என்றார். அக்காலகட்டத்தில் காவி உடை தரித்த குன்றக்குடி அடிகளார் கூறியதுதான் மிகவும் முக்கியமானது. “இன்று ஆத்திகம் என்பது உயர்சாதி நலன் காப்பது; நாத்திகம் என்பது ஒடுக்கப்பட்டோர் நலன் காப்பது” என்று அடிகளார் கூறினார். பெரியார் பேசிய நாத்திகத்தின் உள்ளடக்கத்தை அப்படியே எதிரொலித்தார் அடிகளார்.
பெரியார்-அடிகளார் உறவு அடிகளாரை பெரியார் பக்கமே இழுத்து வந்தது என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன். இன்று ‘காவிப்படை’ தரம் தாழ்ந்த, வன்முறையைத் தூண்டும் பேச்சுகளைப் பேசுகின்றன. பெரியார் சிலை மீது செருப்பு வீசுகிறார்கள். ஆனால் பெரியார் கட்டமைத்த சமூகப் பண்பாடு இமயமாய் உயர்ந்து நிற்கிறது. இளைய தலைமுறைக்குத் தேவையான வரலாற்றுச் செய்திகளை வழங்கி வரும் ‘நிமிர்வோம்’ இதழைப் பாராட்ட வேண்டும்.
– பெரியார் தொண்டன், பெருஞ்சேரி
‘பெண் விடுதலைக்கு வலிமை சேர்க்கும் தீர்ப்புகள்’ தலையங்கம் மிகவும் சிறப்பு. தண்டனைச் சட்டத்தின் 377 மற்றும் 497ஆவது பிரிவுகளை நீக்கி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பெரியாரியல் பார்வையில் சிறப்பாக தலையங்கம் படம்பிடித்துக் காட்டியது. இந்தத் தீர்ப்புகள் குறித்து தமிழ்நாட்டின் கட்சிகளோ, இயக்கங்களோ, கருத்து தெரிவிக்கக்கூட முன் வராமல் தயங்கி நிற்கும்போது ‘நிமிர்வோம்’ பெரியாரியக் கண்ணோட்டத்தில் அதைப் பொருத்திக் காட்டி வரவேற்று எழுதியதைப் பாராட்ட வேண்டும்.
– மகேசு, மயிலாடுதுறை
பெல்காமில் பெரியார்-காந்திஜி-ராஜாஜி உரையாடலில் பார்ப்பனர் குறித்து காந்தி எழுப்பிய கேள்விக்கு பெரியார் தந்த பதில் அருமையிலும் அருமை! அவர் தான் பெரியார்.
– இனியவன், இளையாங்குடி
‘பரியேறும் பெருமாள்’ திரைப்பட விமர்சனம் சிறப்பாக இருந்தது. “ஆணவக் கொலைக்கு பதில் மற்றொரு கொலை என்று பழிவாங்கும் உணர்வுகளை நோக்கி நகராமல் சமூகத்தில் ஜாதி வெறிக்கு எதிரான உரையாடலையும் அந்த உரையாடலைக் கூர்மைப் படுத்தும் இயக்கங்களுக்கான தேவைகளையும் படத்தில் தீர்வாக முன் வைப்பதே இப்படத்தின் மிகச் சிறப்பு” – என்ற வரிகள் படத்தின் நோக்கத்தைத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டிவிட்டன.
– மணிகண்டன் கோவை
நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்