ஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள் மனுஷ புத்திரன்
என் மதத்தைச் சார்ந்தவன் என்ற காரணத்துக்காக அவனுக் குத் தகுதியில்லாவிட்டாலும் நான் அவனை மேலே கொண்டு வருவேன் என்பதை விட பெரிய ஊழல் இந்த நாட்டில் எதுவுமே இருக்க முடியாது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழகத் தினுடைய வரலாறாக தமிழகத்தினுடைய அடையாளமாக படுகொலைகளும், சாதிப் படுகொலைகளும், வன்முறைகளும் தான் ஒவ்வொரு ஊரினுடைய அடையாளமாக மாறிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
இப்படியே போனால் தமிழகத்தினுடைய வரலாறு சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜாதிப் படுகொலைகளுடைய வரலாறாக இருக்கப் போகிறது என்ற அச்சம் எழுகிறது. முக்கியமாக இந்துத்துவாவை வேரறுக்க வேண்டும். பிராமணியத்தை வேரறுக்க வேண்டும் என்று நண்பர்கள் சொன்னார்கள். நானும் அந்த கருத்துக்களை தீவிரமாக முன் வைக்கக்க கூடியவன் தான். ஆனால் இந்துத்துவா என்பது இந்துத்துவா என்கின்ற இந்த சமூகத்தில் இல்லை . அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு முகமூடிகளில் இருக்கிறது. அதேபோல் பார்ப்பனியம் என்பது பெயரில் இல்லை அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு முகமூடிகளில் இருக்கிறது. அது திடீரென ஊழல் எதிர்ப்பு என்ற போர்வையை போர்த்திக் கொண்டு வரும். மக்கள் நீதி என்ற போர்வையை போட்டு கொண்டும் வரும். அல்லது வேறுஏதாவது சமூகக் காரணத்தை கொண்டு வரும். ஏனென்று கேட்டால் சாதி தான் இந்த சமூகத்தினுடைய உண்மையான அதிகாரமாக இருக்கிறது. சாதியின் மூலமாகத் தான் இந்த சமூகத்தினுடைய பெரும்பாலான அனைத்து கட்டுமானங்களும் உருவாக்கப்பட் டிருக்கின்றன. ஆகவே சாதியைப் பற்றிப் பேசும்போது கூட சாதியை ஒழிப்போம் என்று பேசுவார்களே தவிர, சாதி எப்படி அணி சேர்க்கிறது என்று பேச மாட்டார்கள். ஜாதிய உறவுகள் நம் சமூகத்தில் எப்படி நிலவுகிறது என்று பேசமாட்டார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு கிராமமும் அது ஜாதிய அதிகாரத்தினுடைய மையமாக இருக்கிறது.இந்த நாட்டில் தனியாக நீதிமன்றம்,சட்டம், அரசியல் சாசனமிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ஊருக்கென்று ஜாதி ரீதியான அரசியல் சாசனமிருக்கிறது. ஜாதி ரீதியான அரசாங்கமிருக்கிறது . ஜாதி ரீதியான ஒரு போலீஸ் இருக்கிறது. இவர்கள் தான் அந்த ஊரினுடைய அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கிறார்கள். அப்படி பார்க்கிற போது ஒரு ஜாதி கிராமம் என்பது ஒரு விதத்தில் ஒரு தனி நாடாக இருக்கிறது. நாம் இந்த உண்மையை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். அது தான் ஒரு அரசாங்கமாக இருந்து கொண்டிருக்கிறது.
அரசாங்கத்தை நாம் எப்படி உடைக்கப் போகிறோம் என்பது மிக முக்கியமான ஒரு கேள்வி. ஒரு சாதியப் படுகொலையை கண்டிப் பதற்காக இல்லை இந்த கூட்டம். மாறாக இந்த ஒட்டு மொத்த அமைப்பைப் பற்றியும் விழிப் புணர்வு எவ்வளவு தூரம் ஆழமாக இருக்கப் போகிறது என்பதற்கான கூட்டமாக இதை நினைக்கிறேன். சாதிய அமைப்பைப் புரிந்து கொள்வதற்கும் அதை எதிர்ப்பதற்கும் உண்மை யான ஒரு விரிந்த செயல்திட்டமென்பது யாரிட மிருக்கிறது என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்கிற போது நம்மை விட பல நேரங்களில், சாதிய படுகொலையை செய்யக் கூடியவர்கள் நுட்பமான செயல்திட்டத்துடன் செயல்படு கிறார்கள் விரிவான திட்டத்தோடு செயல்படு கிறார்கள் எப்படி ஒவ்வொரு விசயத்தையும் திசை திரும்புவது என்று அவர்களுக்கு தெரியும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த நாட்டில் பல விதமான குற்றங்கள் நடக்கின்றன. உதாரணமாக இரயில் நிலையத்தில் ஒரு பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிடுகிறார்கள். அது மிக கொடூரமான செயல் அல்லது பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்கிறார்கள். அதெல்லாம் ஒட்டுமொத்த சமுகத்திலும் பதட்டத்தை உருவாக்குகிறது. எல்லோரும் அதற்காக கவலைப்படுகிறோம். ஒரு பாதுகாப்பின்மையை உணர்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் எந்த சாதியப் படுகொலை நடந்தாலும் தமது சமூகத்தினுடைய மன சாட்சியை உலுக்குவதேயில்லை. அந்த புகைப் படங்கள் யாருக்கும் பதட்டத்தை உருவாக்குவ தில்லை. அது மிகவும் மவுனமாக கடந்து செல்லப்படுகிறது. இளவரசனின் புகைப்படம் கூட எந்த பதட்டத்தையும் பெரும்பாலோருக்கு ஏற்படுத்தவில்லை. இந்த மனோபாவம் தான் கொலை செய்கிறவனின் மனோபாவத்தை விட ஆபத்தானது என்று நினைக்கிறேன் ஏனென்றால், நம் ஒட்டுமொத்த மனோ பாவமும் இந்த படுகொலைக்கு உடந்தையாக இருக்கிறது என்கிற மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. எப்போது இது போன்ற சாதி, மத வன்முறைக்கோ ஒரு சாதாரண மனிதன், பொது மனிதர்கள், பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று நினைக்கக் கூடியவர்கள் மவுனமாக கடந்து செல்கிறவர்கள் என்றால் அங்கு பாசிச சமூகம் உருவாவதற்கான ஒரு அடித்தளம் உருவாகிறது. ஒவ்வொரு குற்றத்தின் மீதும் இந்தச் சமூகம் எப்படி எதிர்வினையாற்று கிறது என்பதை நாம் கவனிப்பது என்பது நம்முடைய சமூகம் எப்படி உருமாறி கொண் டிருப்பதை கவனிப்பதாகும். இவ்வளவு பெரிய கொலை நடக்கிறது; இயல்பாக வரவேண்டிய பதட்டம் பெரும்பாலானோருக்கு வருவதில்லை அவர்கள் அந்தக் கொலையை நியாயப்படுத்தக் கூடிய ஒரு உளவியல் அவர்களுக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறது. இதை நான் என்னுடைய பல வருட அனுபவங்களில் நான் அதிர்ச்சி அடைந்த பல விசயங்கள் இருக்கின்றன.
யாரையெல்லாம் நான் சிந்தனையாளன் என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ, சமூக மாற்றத்திற்காக வேலை செய்து கொண்டிருந்த பலர் அவர்களுக்குள் உறைந்து போயிருந்த சாதிய உணர்வு என்பது அவர்களை நெருங்கிச் சென்று தொடுகிறபோது என்னை அதிரச் செய்திருக்கிறது. எவன் ஒருவன் சுயசாதி மறுப்பாளனாக இல்லையோ, எவன் ஒருவன் சுயமத மறுப்பாளனாக இல்லையோ அவன் பேசுகிற அனைத்து அறங்களும், அறிவியலும் போலித்தனமானது என்று நம்புகிறேன். அந்த சுயசாதி மறுப்பை இங்கு செய்யாமல் நீங்கள் பொதுவாக தலித்துகளை சமமாக நடத்த வேண்டும், தாழ்த்தப்பட்டவனை மனிதாபி மானமாக நடத்த வேண்டும் என்று சொன்னால், அவன் பொய் சொல்லுகிறான் என்று அர்த்தம். அவன் ஏமாற்றுகிறான் என்று அர்த்தம். நீங்க யாரையும் மனிதாபிமானமாக நடத்த வேண்டியதில்லை. நீங்கள் யார் சமத்துவமாக நடத்துவதற்கு, நீங்கள் மனிதர்களாக நடந்து கொள்கிறீர்களா என்பது தான் தான் முக்கியமானது. நீங்கள் விழிப்புணர்ச்சி பெற்ற மனிதர்களாக நடந்து கொள்கிறீர்களா என்பது தான் முக்கியமானது.
எனக்கென்று சாதி, மத உணர்வு இருக்கிறது என்று சொன்னால் அது எனக்கென்று ஒரு அவமானத்தை ஏற்படுத்த வேண்டாமா? அது என்னைப் பற்றி எனக்குக் கீழ்மையான ஒரு எண்ணத்தை ஏற்படுத்த வேண்டாமா? பலருக்கு ஏற்படுத்தவில்லை. நாம் ஒரு விசயத்தை எடுத்துப் பார்த்தால் பொதுவாக சாதிக் கொடுமைகளைப் பற்றி யார் எழுது கிறார்கள். எந்த சாதி கொடுமையினால் பாதிக்கப்பட்ட அல்லது அதுபோன்ற அரசியல் இயக்கங்களினால் விழிப்புணர்வு பெற்ற தலித் எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட குறிப்பிட்ட சில எழுத்தாளர்களே, கலைஞர்களே தான் இதைப் பற்றி எழுது கிறார்கள். சமூக வரலாறு என்று எழுது கிறவர்களே தங்களுடைய பாரம்பரிய பெருமையை எழுதுகிறார்கள்.
அது என்ன சாதிக் கொடுமையை எழுது வதற்கு மட்டும் தனிப்பட்ட எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இருக்க வேண்டும். ஏன் மற்றவர்களுடைய பிரச்சனை இல்லையா இது? இன்னும் சொல்லப் போனால் சாதி சமூகத் தினுடைய இழிவுகள் தலித்துகளை மட்டுமல்ல எல்லா மனிதர்களையுமே விடுதலையற்ற மனிதர்களாக வைத்திருக்கிறது. அதைத் தான் அண்ணல் அம்பேத்கர், பெரியார் திரும்ப திரும்பப் பேசினார்கள். இடைநிலைச் சாதிக் காரனாகவோ, உயர்நிலைச் சாதிக்காரனாகவோ இருப்பதினால் நீ மனிதனாக இருக்கக் கூடிய பல சுதந்திரங்கள் உனக்கு இல்லாமல் தான் போகும். சாதி உன்னையும் தன் இழிவில் ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. உங்களுடைய பெண்களை ஒடுக்குகிறது. உங்களுடைய அடிப்படையான சிந்தனையை ஒடுக்குகிறது. நீங்கள் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் ஒடுக்கவில்லை. தன்னைத் தானே ஒடுக்குகிறவன் எவனோ அவன் தான் சாதி வெறியனாக இருக்கிறான்.
அவர்கள் தன்னுடைய விடுதலையையும், மற்றவர்களுடைய விடுதலையையும் மறுக் கிறார்கள். நம்முடைய கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் திரைப்படத்தில் எடுக்கப்படுகிற சாதிய வன்முறைகளைப் பற்றியெல்லாம் இங்கு பேசினார்கள். இதையெல்லாம் மிக எளிதாக சினிமா வர்த்தகத்திற்காக செய்கிறார்கள் என்று புரிந்து விடக் கூடாது. சினிமாவில் முதலீடு செய்பவர்கள் யார்? அங்கு பணத்திற்கு, குறிப்பிட்ட சாதியினுடைய அதிகாரமிருக்கிறது. அவர்கள் சாதிகளை உயர்த்துவதற்கான ஒரு காலத்தை இங்கே உருவாக்குகிறார்கள். அதே போல், இலக்கிய அமைப்புகள், கலை இயக்கங்கள் என்று எடுத்து கொண்டால் சாதிரீதியான ஏராளமான கொடுக்கல், வாங்கல் இருக்கின்றன. நம் நாட்டில் இலஞ்சம், ஊழல் என்று பேசுவார்கள். இந்த நாட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய ஊழல் சாதி தான். இந்த ஊழலுக்கு நிகராக எதுவுமே இல்லை. என் சாதிக்காரன் என்பதால் ஒருவரை ஆதரிப்பேன், உதவிகள் செய்வேன். என் மதத்தைச் சார்ந்தவன் காரணத்துக்காக அவனுக்குத் தகுதியில்லா விட்டாலும் நான் அவனை மேலே கொண்டு வருவேன் என்பதை விட பெரிய ஊழல் இந்த நாட்டில் எதுவுமே இருக்க முடியாது. இந்த நாட்டில் ஊழலைப் பேசுகிற, பேச விரும்புகிற ஒரு முதன்மையான ஊழல் சாதி தான். இவ்வளவு சாதிக் கொடுமைகள் நடக்கிறது. காவல்துறை என்ன செய்கிறார்கள், ஏன் செயல்படவில்லை யென்றால் சாதி என்பது நிலத்தோடு சம்பந்தப் பட்டது. அது மூலதனத்தோடு சம்பந்தப்பட்டது. அது காவல்துறையோடு சம்பந்தப்பட்டுத் தான் இருக்கும். நீதித்துறையோடு சம்பந்தப்பட்டுத் தான் இருக்கும்.
நிலமும், மூலதனமும் தொடர்பில்லாத அமைப்போ, நீதித்துறை அமைப்போ, அராசங்க அமைப்போ செயல்பட முடியுமா? பணம், நிலம் தான் அதற்கு பின்னால் நிற்கக் கூடிய மிகப் பெரிய அதிகாரம். நிலம் வைத்திருக்கக் கூடிய அல்லது மூலதனம் வைத்திருக்கக் கூடிய ஒரு சாதியினுடைய அதிகாரத்தை நிலமற்ற அதிகாரமற்ற ஒரு சாதியினாரல் எதிர்கொள்ள முடியாது. இது தான் யதார்த்தம். அவர்கள் எந்த நீதி அமைப்பையும் விலைக்கு வாங்க முடியும். காவல்துறையில் இருக்கக் கூடிய உயர்சாதி செல்வாக்கு, இடைநிலை சாதியினுடைய செல்வாக்கு பற்றி நாம் வெளிப்படையாக புள்ளி விவரங்களோடு பேச வேண்டும். எந்த காலத்தில் இதையெல்லாம் அதிகம் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த சாதி கலவரத்துக்கும், தமிழ்நாடு காவல்துறையும் சில குறிப்பிட்ட சாதிகள் அதிகமாக உள்ளே வந்ததற்கு உள்ள தொடர்புகளையெல்லாம் விரிவாகப் பேச வேண்டும். ஏராளமான, நுட்பமான விசயங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டிருக்கின்றன. சாதி ஒழிய வேண்டும் என்பது சுலபமான ஒரு வார்த்தை. ஆனால் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஏனென்றால், சாதிதான் குடும்பமாக, அறமாக, நீதியாக, வாழ்க்கைப் பண்பாடாக இருக்கிறது. சாதியை முதலில் சனநாயகப்படுத்த முடியுமா என்று தான் நாம் யோசிக்கிறோம். சனநாயக முறையாக நடந்து கொள் என்று கேட்கும் இடத்தில் தான் இருக்கிறோம். சாதியை எப்படி ஒழிப்பது எங்கிருந்து ஒழிப்பது அதற்காக எத்தனை நூற்றாண்டுப் போராட்டம் தேவைப்படும் என்று தெரியவில்லை.
பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்ளக் கூடிய பழக்கம் என்பது பல மாநிலங்களில் பரவலாக இருக்கிறது. மிகப் பெரிய முற்போக்குத் தலைவர்கள் கூட சாதிப் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வார்கள். ஆனால், நாம் தொடர்ச்சியாக நடத்திய சாதி ஒழிப்பு இயக்கங்கள் வழியாக அது போன்ற சில விசயங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால், கடக்க முடியாத ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரு சாதிப் பெயரோடு கடையிருப்பது மட்டும் பிரச்சனையல்ல. அந்த கடையில் வேலை செய்பவர்கள் எல்லாம் குறிப்பிட்ட சாதி சார்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தான் அந்தப் பணியைக் கொடுப்பார்கள். அவர்கள் அங்கே ஒரு யூனியனை உருவாக்குவார்கள். இப்படி எந்த சாதி பெயரில் எந்த கடையிருக்கிறதோ, அந்த சாதிக்காரர்களை தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வரவழைத்து அவர்களுக்கு அந்த வாழ்வாதாரத்தை உருவாக்குவார்கள்.
ஒருமுறை சமூகவியல் அறிஞர் காஞ்சா அய்லையா முக்கிய கட்டுரை எழுதி யிருந்தார். அதில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இங்கு உள்ளே வருகிறபோது, கடும் எதிர்ப்பு நிலவும் போது அதையொட்டி எழுதியிருக்கிறார். நிச்சயமாக அவர்கள் இங்கிருக்கக் கூடிய சிறு வணிகத்தை பாதிக்கிறார்கள். இங்கு இருக்கக் கூடிய சிறிய வர்த்தகத்தை பாதிக்கிறார்கள் எல்லாம் உண்மை தான். ஆனால், இச் சிறு வர்த்தகம், சிறு வணிகம் என்பது சனநாயக பூர்வமாக செயல்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறார். அங்கு தலித்துகள் கடைநிலை வர்த்தகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்தப் படுகிறார்கள். அவர்கள் அதைத் தாண்டி எந்தப் பொறுப்புகளும் கொடுப்பதில்லை. ஆனால் பெரிய நிறுவனம் வருகிற போது அதை சாதி சார்ந்து எந்த விசயமும் பார்க்கப்படுவதில்லை. யூனிபார்ம் கொடுத்துவிட்டால் அங்கு எல்லோரும் ஒரே மாதிரி. இந்த கருத்து என்னை சிந்திக்க வைத்தது. நானும் வால்மார்ட் நிறுவனங்களுக்கு எதிரானவன் தான். ஒரு காலத்தில் இங்கு சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் செயல்பட்டிருக்கும்போது இங்கு நவீனமய மாக்கல் நடந்தது. இங்குப் பேருந்து, இரயில், திரைப்பட அரங்குகள் வந்தபோது அதுவரை சாதியக் குறியீடுகளை கட்டிக் காத்தவர்கள் அதை விட்டுவிட்டு எல்லோருடனும் வந்து உட்கார வேண்டிய நிலை வந்தது. இதை சகித்துக் கொள்ள முடியாமல் தான் இவன் என்னை மாதிரியே எனக்கு சமமாக இருக்கிறான், எனக்கு சமமாக நடந்து வருகிறான். இவை எல்லாம் உயர் சாதியினரை, இடைநிலை சாதியினரை ஆத்திர மடைய வைக்கிறது. இது தான் எங்கேயாவது ஒரு படுகொலையாக மாறுகிறது. நம்முடைய கிராமங்களை துரிதப்படுத்துவது, கடந்த காலத்தை துரிதப்படுத்துவது, நம்முடைய கிராமங்கள் எல்லாம் எளிமையுடைய வடிவமாக இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குவது இதுபோன்ற போலித்தனங்களைவிட வேண்டும். என்னைப் பொறுத்தவரையில், சாதி அமைப் பினுடைய கொடூர வடிவங்கள் நம்முடைய கிராமங்கள் தான் என்று நினைக் கிறேன். கிராமத்திலிருந்து தப்பி ஓடி வந்தவரில் நானும் ஒருவன். சாதிரீதியாக, மதரீதியாக ஏராளமான இளைஞர்கள் ஏன் நகரங்களை நோக்கி ஓடி வரு கிறார்கள் என்றால், அது வெறும் பிழைப்புக்காக மட்டுமல்ல, சுய மரியாதையையும், சாதிய கொடுமையிலிருந்து விடுபடுவதற்காகவும் தான் அவர்கள் வருகிறார்கள்.
(சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் ஜாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து, தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற் பாட்டாளர்கள் – சென்னையில் 2018, ஜூன் 3 அன்று நடத்திய கருத்தரங்கம் நிகழ்த்திய உரைச் சுருக்கம்.
தொகுப்பு : மா. தேன்ராஜ்)
நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்