பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்
பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்
என்று பார்ப்பன நீதிபதியின் முன்பாகவே முழக்கமிட்ட போராளி!
21 மாதங்கள் சிறை சென்ற ஜாதி ஒழிப்புப் போராளியின் நினைவலைகள்
25ஆவது அகவையில் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் தொண்டர் இடையாற்றுமங்கலம் முத்து செழியன். பெரும் பண்ணையார் குடும்பத்தில் பிறந்தவர். இப்போதும் சொந்த கிராமத்தில் கொள்கை உறுதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வயது 86. சிறையிலிருந்த காலத்திலேயே திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டப்படிப்புக்கான தேர்வுகளை காவல்துறை பாதுகாப்புடன் எழுதியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் மெய்சிலிர்க்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
தஞ்சாவூரில் 1957 நவம்பர் 3இல் நடந்த சாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டில் மிகப் பெரிய ஊர்வலம் நடந்தது. அதில் எம்.ஆர். ராதா அவர்கள் வெள்ளைக் குதிரையில் வந்தார். அவருக்கு ஜோடியாக திருச்சி வீ.அ. பழனி இன்னொரு குதிரையில் வந்தார். இலட்சக்க ணக்கான மக்கள் மாநாட்டில் திரண்டிருந் தார்கள். அப்பொழுதெல்லாம் ஆயிரக்கணக்கில் கூட்டத்தைப் பார்ப்பதே அதிசயம். மாநாட்டில் சாதியை ஒழிப்பதற்காக, சூத்திரப் பட்டம் ஒழிவதற்காக சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவோம் என்று பெரியார் அறிவித்தார். கூடியிருந்த இலட்சக் கணக்கான மக்கள் முழு மனதோடு ஆதரித்து விண்ணதிர முழக்கமிட்டனர்.
அப்பொழுது காமராஜர் முதல்வராக இருந்தார். அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை அளிப்பது என்று அதுவரை சட்டத்தில் இல்லை. உடனே போலீஸ் மந்திரியாக இருந்த பக்தவத்சலம் அரசியல் சட்டம் போன்றவற்றிற்கு அவமரியாதை செய்தால் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கலாம் என்று புதிய சட்டம் ஒன்றை அவசர அவசரமாகக் கொண்டு வந்தார்.
உங்க வீட்டுச் சோற்றைத் தின்னுவிட்டு இயக்கவேலை செய்ய வாருங்கள், ஓய்வு நேரத்தில் வாருங்கள் என்றுதான் பெரியார் மக்களை அழைப்பார். பக்தவத்சலம் புதுச்சட்டம் கொண்டு வந்தவுடன், நீங்கள் இந்தச் சட்டத்தைப் பார்த்து பயந்துவிட மாட்டீர்கள், அதுபோல மற்றவர்களும் இதைப் பார்த்து பயந்து கொள்ளும்படி நீங்கள் நடந்து கொள்ளாதீர்கள் என்று பெரியார் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை மிகப் பெரிய சவாலாக, அழைப்பாக அமைந்துவிட்டது. வாய்ப்பிருந்தால் போராட்டத்திற்கு வரலாம் என்று நினைத்திருந்தவர்களும், வீட்டில் வேலையிருந்தவர்களும் அதையெல்லாம் மறந்துவிட்டு சட்டத்தை எரிக்க வீதிக்கு வந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் பயமற்ற தன்மையில் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் சட்டத்தை எரித்தார்கள். இதற்கு பெரியாரின் அந்த அறிவிப்பே முக்கிய காரணமாக இருந்தது.
சட்ட எரிப்புப் போராட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல், உடல்நிலையைப் பற்றியோ, பொருளாதாரத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ எந்தவிதமான கவலையும் இல்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசியல் சட்டத்தைக் கொளுத்தியது வியக்கத் தக்கது. காவல் துறையினர் சட்டத்தை எரித்த எல்லோரையும் கைது செய்யாமல் நான்காயிரம் பேரை மட்டும் கைது செய்தனர்.
இடையாற்றுமங்கலத்தில் நாங்கள்
இ.ச. தேவசகாயம், முத்துசெழியன், மா.வேலு, அ.சுயம்புராஜ், யா. சூசை, மை. ஜெகநாதன்,
ம. அருள்தாஸ், அ. மோசஸ், அ. சவரிமுத்து,
ஆ. அருளானந்தம், மா. சுப்பிரமணியன்,
வே. துரைராஜ், பு. அய்யனார், ரா. ராயப்பன்,
மு. நாகமுத்து, அ. அம்மாசி, சூ. மதலைமுத்து,
செ. நாகராஜ், பே. மாவடியான், மா. தங்கையன், ப. மாரிமுத்து, ப. கலியபெருமாள், சவரிமுத்து, லெ. மாவடியான், வே. காசியம்மாள்வேலு,
த. முத்தம்மாள், வே. தெய்வானை ஆகிய 27 பேர் சட்டத்தைக் கொளுத்தினோம்.
சிறையில் இருந்து விடுதலையான சில நாட்களில் தோழர்கள் நாகமுத்துவும், வே. தெய்வானையம்மாளும் சிறை தந்த நோய்க்குப் பலியானர்கள்.
எங்களைக் கைது செய்த போலீஸார் நீங்கள் லால்குடி காவல் நிலையத்திற்கு வந்து விடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்கள். காலை 10 மணிக்கு தபால் நிலையத்திற்கு அருகில் சட்டத்தைக் கொளுத்திய நாங்கள் மதியம் வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு மாலையில்தான் லால்குடி காவல் நிலையத்திற்குச் சென்றோம்.
மேலவாளாடித் தோழர்கள் மண்ணச்ச நல்லூரில் சட்டத்தை எரித்துவிட்டு ஊருக்குத் திரும்பி விட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்யவில்லை.
இதுபோலத்தான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நடைபெற்றுள்ளது. சட்டத்தைக் கொளுத்தியவர்கள் அனைவரையும் உடனுக்குடன் கைது செய்திருந்தால் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் அன்றைய தினம் மக்கள் பெருந்திரளாகத் திரண்டு சட்டத்தைக் கொளுத்துவதில் பேரார்வம் காட்டினார்கள்.
திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் கழகத்தின் வலுவான மாவட்டங்கள் என்பதால் இந்த மாவட்டங்களில் மட்டும் சட்டத்தை எரித்தவர்கள் எண்ணிக்கை 2000 பேருக்கு மேல். நவம்பர் மாதம் 27, 28 தேதிகளில் எங்களை திருச்சி சிறையில் அடைத்தார்கள். அங்கு எங்கு பார்த்தாலும் கருப்புச் சட்டைதான். தோழர் களின் கூட்டம் பார்ப்பதற்கு கடல் மாதிரி காட்சியளித்தது.
எல்லோரையும் 15 நாள் ரிமாண்ட் செய்திருந்தனர். விசாரணை ஒரு மாதம் வரையில் நடந்தது. விசாரணை முடிந்து டிசம்பர் மாதம் 24ஆம் தேதிக்கு மேல் தண்டனை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். எங்களுக்கு 30ஆம் தேதி தண்டனை கொடுத்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சென்னை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் ஆறு மாதம், மூன்று மாதம், ஒரு மாதம் என்று தண்டனை கொடுத்தார்கள். ஆனால் திருச்சி கோர்ட்டில் வேணுகோபாலாச்சாரி என்கிற நீதிபதி, திருச்சி நகரத் தோழர்களுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், லால்குடித் தோழர் களுக்கு ஒன்றரை ஆண்டு, இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கினார். லால்குடிப் பகுதியில் திராவிடர் விவசாயத் தொழிலாளர் கழகத்தினர் கடுமையாக பணியாற்றியதால் பார்ப்பன மிராசுதாரர்கள் மிகவும் கஷ்டப்பட்டதாக அந்த மாஜிஸ்திரேட்டிடம்சொல்லியிருக்கிறார்கள். அதன் காரணமாக எங்களுக்கு மட்டும் அதிக தண்டனை வழங்கப்பட்டது.
திருச்சி சிறையில் மொத்தக் கொள்ளளவே இரண்டாயிரம் பேர்தான். ஏற்கனவே அங்கு இரண்டாயிரம் கைதிகள் இருந்தனர். கருப்புச் சட்டைத் தோழர்கள் இரண்டாயிரத்திற்கு மேல் புதிதாக வந்து சேர்ந்தோம். சிறையே நிரம்பி வழிந்தது. ஒருவர் இருக்கக்கூடிய அறையில் 7 பேர், 9 பேர் என்று எங்களை அடைத்திருந்தனர். நாங்கள் இருக்கும்போது ஓடு போட்ட கட்டிடங்கள்தான் இருந்தது. அதற்கு கேம்ப் ஜெயில் என்று பெயர். இது 1957ஆம்ஆண்டில்.
ஏழு பேர், ஒன்பது பேர் என்று எங்களை அடைத்திருந்த அந்த அறையில் ஒரேயொரு தண்ணீர்ப் பானையும் ஒரேயொரு மூத்திரப் பானையும் இருக்கும். நாங்கள் எங்கள் ரூமில் காலையும் தலையையும் மாற்றி மாற்றி வைத்துப் படுத்துக் கொள்வோம். ஏனென்றால் ஒரே மாதிரி படுத்தால் இடம் போதாது, வசதி போதாது. காலையில் அய்ந்தே முக்கால் மணிக்கு விசிலடிப்பார்கள். உடனே நான்கு, நான்கு பேராக பைல் உட்கார வேண்டும். கணக்குகளைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் அறையில் வைத்து பூட்டி விடுவார்கள். எல்லோருடைய கணக்கு களையும் முடித்து விட்டுத்தான் எங்களை வெளியில் விடுவார்கள். மாலை 6 மணிக்கு மேல் அறைக்குள் வைத்துப் பூட்டி விடுவார்கள். பாட்டுப் பாடத் தெரிந்தவர் பாட்டுப் பாடுவார், பேசத் தெரிந்தவன் பேசுவார். இப்படியே இரவு போய்விடும்.
அப்போது மதுவிலக்கு அமுலில் இருந்த நேரம். அதனால் அப்போது சிறையிலிருந்தவர் களில் ஆயிரம் பேருக்குமேல் சாராயம் காய்ச்சி யவன், சாராயம் குடித்தவன்தான். காவல் துறையினர் அவர்களை நாயை விரட்டுவது போல் விரட்டி வேலை வாங்குவார்கள்.
முப்பது நாட்களில் ஜெயிலே திணறிப் போனது. வாய்தாவிற்கு எங்களை கோர்ட்டுக்கு கூட்டிக் கொண்டு போக லாரி வரும். 100 பேர் ஏறக்கூடிய லாரியில் 150, 200 பேரை ஏற்றிக் கொண்டு போய் கோர்ட்டில் இறக்கி விடுவார்கள். காபி, டீ சாப்பிடப் போனவர்கள் லாரி கிளம்புவதற்குள் வர முடியாமல் தாமதமானால் திமுதிமுவென ஜெயிலுக்கு ஓடி வருவார்கள். ஒரு கைதியை கோர்ட்டுக்குக் கூட்டிப் போகும்போது விலங்கு போட்டு கூட்டிப் போனாலே அவனை திரும்ப அழைத்து வருவது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் இவர்கள் மட்டும் மாமியார் விட்டிற்குப் போவதுபோல ஜாலியாகப் போகிறார்கள். ஜாலியாக வருகிறார்கள் என்று சிறை அதிகாரிகள் வேடிக்கையாகப் பேசிக் கொள்வார்கள். நம்முடைய தோழர்கள் அதை சிறையாகவே கருதவில்லை என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.
எங்களோடு நாகராஜ், மாவடியான் என்கிற சிறுவர்கள் சிறையிலிருந்தவர்கள். அதில் நாகராஜ் என்பவர் ஒன்றே முக்கால் ஆண்டுகள் சிறையிலிருந்தார்.
எனக்கு தீர்ப்பு சொல்லப்பட்ட நாளன்று வக்கீல் மூலம் என் தந்தையார் ஒரு மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில், நான் பி.ஏ. படித்திருக்கிறேன், இந்து மதத்தைச் சார்ந்தவன், உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று வக்கீல் எழுதியிருக்கிறார். எனக்குத் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, மாஜிஸ்திரேட் தனது அறைக்கு என்னை அழைத்தார். நான் சென்று மாஜிஸ்திரேட்டைப் பார்த்தபோது, நீங்கள் சாதி, மதம் ஒழியணும் என்று பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் மனுவில் இந்துமதம் என்று தானே போட்டிருக்கிறீர்கள் என்று என்னைக் கேட்டார். உடனே நான், இது ரொம்பத் தப்புங்க! நான் இதைக் கேட்கவில்லை. நான் சிறையிலிருந்து வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும். இந்த மனுவைப் போட்டது எங்கப்பா, இருந்தாலும் இது தப்புங்க! அதோடு எனக்குக் கொடுக்கிற பி கிளாஸ் வசதியை இரத்து செய்து விடுங்கள் என்றேன்.
பார்ப்பானைப் பற்றி மட்டும் குறை சொல்கிறீர்கள். பார்ப்பனரில் எவ்வளவு ஏழைகள் இருக்கிறார்கள் தெரியுமா? என்று மாஜிஸ்திரேட் கேட்டார். இதில் ஏழை, பணக்காரன் பிரச்சினை எல்லாம் இல்லீங்க! அவர்களுடைய திமிர் புத்தியைப் பற்றித்தான் பேசுகிறோம் என்றேன். என்ன திமிர் புத்தி என்று திருப்பி கேள்வி கேட்டார். எனக்கு கோபம் வந்துவிட்டது. சட்டத்தை எரித்தவர்களை மூன்று ஆண்டு வரை தண்டிக்கலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், மற்ற எல்லா மாவட்டத்திலும் ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் என்று தண்டித்திருக்கிறார்கள். நீங்கள் மட்டும் ஒன்றே முக்கால் வருஷம் தண்டித்திருக்கிறீர்கள். இதைப் பார்க்கும்போது டி.எம். நாயர் சொன்னது சரியென்று எனக்குத் தோன்றுகிறது என்று சொன்னேன். என்ன சொன்னார் நாயர் என்று கேட்டார் மாஜிஸ்திரேட். ஒரு நீக்ரோ தன் நிறத்தைக்கூட மாற்றிக் கொள்ளக் கூடும். சிறுத்தை தன் புள்ளியைக்கூட மாற்றிக் கொள்ளக் கூடும். ஆனால், ஒரு பார்ப்பான் தன் சாதிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாடடான் என்று நாயர் சொன்னதைச் சொன்னேன். இப்படி மாஜிஸ்திரேட்டுக்கும் எனக்கும் வாக்குவாதம் நடந்ததது. பிறகு என்னை சிறைக்கு கொண்டு சென்றார்கள்.
சிறையிடைக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னால் நான் பரோலில் வெளியே வந்தேன். அப்போது நமது தோழர் ஒருவர் இந்து ஆங்கிலப் பேப்பரை என்னிடம் காட்டினார். அதில் சாதியை ஒழிக்கச் சட்டம் எரித்தோம் என்பவர்களைப் பார்த்து, சாதி, மதத்தை ஒழிப்போம் என்ற நீங்கள் மனுவில் இந்துமதம் என்று மதத்தைக் குறிப்பிடலாமா? என்று நீதிமன்றத்தில் நீதிபதி கேட்டார். அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் என்னைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். நீதிபதி அவர் அறையில் என்னிடம் பேசியதையும் அதற்கு நான் அளித்த விளக்கத்தையும் மறைத்து சாதி ஒழிப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டிருந்தார்கள். அன்று கோர்ட்டில் நடந்தவை எல்லாம் அய்யாவிற்கு நன்றாகத் தெரியும். நான் அந்த இந்துப் பேப்பரை எடுத்துக் கொண்டு சென்று அய்யாவிடம் காட்டி, இந்து பேப்பர் மேல் வழக்குப் போடப் போகிறேன் என்றேன். இந்து பேப்பரில் என் பெயரே போட மாட்டான், உன்னை செழியன் என்று போட்டிருக்கிறான். அதோடு விட்டுவிட்டுப் போவியா? அதை விட்டுவிட்டு கேஸ் போடுறீயா? அதெல்லாம் வேண்டாம் என்றார் பெரியார். அதை அப்படியே விட்டு விட்டேன்.
தண்டனை அறிவிக்கப்பட்ட அன்றே திருச்சி வீ.அ. பழனி, டி.டி.வீரப்பா, தேவசகாயம் போன்றவர்களை கோயமுத்தூர் சிறைக்கு அனுப்பி விட்டார்கள். பிரான்சிஸ், ஆனை முத்து, என்னைப் போன்றவர்களையெல்லாம் வேலூர் சிறைக்கு மாற்றி விட்டார்கள். கோர்ட்டிலிருந்து நாங்கள் வந்ததும் இன்று இரவே எங்களை வேலூருக்குப் புறப்பட வைத்தார்கள். முப்பது நாட்கள் பழகியிருந்த சிறையை விட்டு பிரிவதற்கு எங்களுக்கு வருத்தமாக இருந்தது.
திருச்சி சிறையிலிருந்து எங்களை அழைத்து வந்து தூத்துக்குடி எக்ஸ்பிரசில் ஏற்றி இரவு ஒரு மணிக்கு விழுப்புரத்தில் இறக்கினார்கள். அங்கிருந்து அடுத்த நாள் காலை 11 மணிக்குத்தான் வேலூருக்குச் செல்லும் இரயில் புறப்படும். அதுவரைக்கும் விழுப்புரம் இரயில் நிலையத்திலேயே இருந்தோம். நாங்கள் விழுப்புரத்திலிருக்கிற செய்தியறிந்த கேபின் மாஸ்டர் இராகவானந்தம் (எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். அவர் திருச்சியில் இருந்தபோதே 1952-லிருந்தே எனக்கு நல்ல பழக்கம்) இரவே வந்து எங்களைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போனார். காலையில் 7 மணிக்கு நான், பிரான்சிஸ், ஆனைமுத்து ஆகியோர் இரயில் நிலையத்திலிருந்து கிளம்பிப் போய் அங்கிருந்த பெரியார் தொண்டர் டாக்டர் தியாகராஜன் அவர்களுடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் எங்களுக்கு காலை டிபன் வாங்கி கொடுத்தார். பிறகு இரயில் நிலையம் வந்து 11 மணிக்கு இரயிலேறி வேலூர் போய்ச் சேர்ந்தோம்.
வேலூர் சிறை திருச்சி சிறையைவிட நன்றாக இருந்தது. அங்கு கூட்டமும் குறைவு. அங்கிருந்த மூன்று மாதமும் பி. கிளாஸ் வகுப்பு கொடுத்திருந்தார்கள். துணைக்கு ஆட்கள் இல்லை. திருச்சியில் பல தோழர்களோடு கலந்து பழகுகிற வாய்ப்புக் கிடைத்தது.
ஆனைமலை ஏ.என். நரசிம்மன், பி.ஏ. படித்தவர். அய்யாவோட உறவினர். உலகத்திலேயே ரொம்ப மரியாதை தெரிந்தவர். அடக்கமாகவே கடைசி வரை வாழ்ந்தவர். கழகக் கட்டுப்பாடு, ஆர்ப்பாட்டமின்மை என அனைத் திற்கும் சிறந்த, உயர்ந்த அடையாளமாகவே இருந்தவர். அவரையும் வேலூருக்கு மாற்றி யிருந்தார்கள். அவர் சிறை உணவைத் தவிர வேறெந்த உணவையும் சாப்பிட மாட்டார். இயக்கத்தில் அய்யாவிற்கு அடுத்த நிலையி லிருந்த பெரியவர் வேலூர் திருநாவுக்கரசு எங்களை அடிக்கடி சிறையில் வந்து பார்த்து ஆறுதல் சொன்னார்கள். பழங்கள் வாங்கிக் கொடுத்தார்கள். என்னைவிட எத்தனையோ மடங்கு பெரியவர்கள் எங்களை சிறையில் வந்து பார்த்தார்கள்.
பி.ஏ. படிப்பில் தேர்வை நான் எழுத வேண்டியிருந்ததால், தேர்வெழுத அனுமதி வேண்டும் என்று மனுக் கொடுத்தேன். அதற்கு பரோல் கிடைக்குமென்று எதிர்பார்த்தேன், கிடைக்கவில்லை. ஆனால் என்னை திருச்சி சிறைக்கு மாற்றி, அங்கிருந்து காவலரின் கண்காணிப்போடு திருச்சி தேசியக் கல்லூரியில் தேர்வெழுத அனுமதித்தார்கள். எனக்கென்று ஒரு வேன், அதில் நான்கு போலீஸார் பாதுகாப்பு வருவார்கள். கல்லூரிக்குள் நான் தேர்வெழுதச் சென்றவுடன் போலீஸார் வாசலில் நின்று காவலிருப்பார்கள். தேர்வெழுதி முடித்ததும் மாலையில் சிறைக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். திரும்பவும் அடுத்த நாளும் இதே வேலை தொடரும். இப்படியே அய்ந்து நாட்கள் காலையில் வந்து தேர்வெழுதிவிட்டு மாலையில் சிறைக்குச் சென்று கொண் டிருந்தேன். அன்றைய நாட்களில் இந்தச் செய்தி திருச்சி முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், நான் ஒரு சாதாரண ஆள், ஜமால் முகமது கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கிற போது, இதே தேசியக் கல்லூரி வாசலில் இந்தியை எதிர்த்து பல மறியல்கள் செய்திருக்கிறேன். அப்போது போலீஸ்காரர்கள் என்னைத் தூக்கி லாரியில் பொத்தென்று வீசியிருக்கிறார்கள். அதே கல்லூரியில் போலீஸாரின் பலத்த பாது காப்போடு தேர்வெழுதும் நிலை ஏற்பட்டது எனக்கு வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததில் வியப்பில்லை.
தேர்வெழுதுவதற்குக் கேட்ட பரோல் லீவு, தேர்வெழுதி முடித்ததிற்குப் பிறகு பதினைந்து நாட்கள் கழித்து எனக்குக் கிடைத்தது. ஒரு மாதம் பரோல் கொடுத்தார்கள். பரோல் கொடுத்தால் வெளியே போய்த்தான் தீர வேண்டும். பரோலில் நான் வெளியே இருந் தபோது அய்யா சிறையிலிருந்து விடுதலை யானார். அன்று சென்னைக் கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு நான் போயிருந்தேன்.
நமது தோழர்கள் சிறைக்கு வந்து ஆறுமாதங்களாகிவிட்டது. சிறை அதிகாரி களிடம் நமது தோழர்கள் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டிருந்தது. சிறையைப் பொறுத்தவரை அவர்கள் கொடுக்கிற உணவு வெந்ததோ, வேகாததோ அதை கைநீட்டி தட்டில் வாங்கிக் கொள்ள வேண்டும், மறுக்கக் கூடாது. கஞ்சிதான் கொடுத்தார்கள். அது எப்படி இருக்கிறதோ மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். நமது தோழர்கள் சிறை விதிகளுக்கேற்ப நடந்து கொண்டதே சிறை அதிகாரிகளின் எண்ணத்திற்குக் காரணம். அவர்கள் கொடுப்பதில் மோர் மட்டும்தான் ஓரளவிற்கு நன்றாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை நான் சோற்றை வாங்கி தண்ணீரில் ஊறப்போட்டு விடுவேன். திருச்சிச் சிறையில் கொடுத்த உணவில் புழு, பூச்சிகள் இருக்கும். புழு, பூச்சிகளை எடுத்து வெளியே போட்டுவிட்டு சோற்றைத் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கிடைக்கும் மோரில் கரைத்து சாப்பிட்டு விடுவோம்.
தேர்வு எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சிறையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. சிறை டாக்டர் எனக்கு ஊசி போட்டபோது நான் மயக்கமாகி விட்டேன். நான் இறந்து விட்டதாக எண்ணி உடனே ஜெயில் கதவை மூடி விட்டார்கள். பிறகு வேறொரு டாக்டர் வந்து பார்த்து மற்றொரு ஊசி போட்டு மயக்கம் தெளிவித்தார். சாவிற்கு அருகில் சென்று திரும்பி விட்டேன். என்ன காரணம் என்று கேட்டபோது, நல்லா சாப்பிட்டீர்களா? என்று கேட்டார்கள். நன்றாகச் சாப்பிட்டு இரண்டு நாளாகிறது என்றேன். அதுதான் வெறும் வயிற்றில் ஊசி போட்டதால் இப்படி ஏற்பட்டது என்று சொன்னார்கள்.
நாங்கள் கேம்ப் ஜெயிலில் இருந்தபோது அங்கு ஓட்டுக் கட்டிடங்கள்தான் இருக்கும் காம்பௌண்ட் சுவர் கிடையாது. 1986இல் மீண்டும் நான் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டபோது சிறிய அளவில் காம்பௌண்ட் சுவர் கட்டியிருந்தார்கள். சிறைக் கட்டிடங்கள் மாடிகளாக மாறி ஹாஸ்டல் போல இருந்தது. நவீன கழிப்பிடங்கள்கூடக் கட்டியிருந்தனர். 2012இல் சிறீரங்கம் பிராமணாள் கபே ஓட்டல் பெயர் அழிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள் விடுதலையானபோது வரவேற்கச் சென்றேன். அப்போது பார்த்தால் வெளியிலேயே பெரிய காம்பௌண்ட் சுவர் கட்டியிருந்தார்கள். காங்கிரஸ்காரர்கள் காலத்தில் வேலியாக இருந்தது. தி.மு.க., அ.தி.மு.க. காலத்தில் காம்பௌண்ட் சுவராக மாறிவிட்டது. அப்போது காலையில் கஞ்சி கொடுப்பார்கள். இப்போது காலையில் சப்பாத்தி, இட்லி கொடுக்கிறார்கள். எவ்வளவோ மாறுதல்கள் செய்து விட்டார்கள்.
எங்கள் காலத்தில் சிறைக் கொடுமை சொல்ல முடியாத கொடுமை. காலையில் கஞ்சி, மத்தியானம் பட்டைச் சோறு, சாம்பார், ஒரு காய், மோர், இரவு கஞ்சி, பட்டைச் சோறு கொடுப்பார்கள். திருச்சியில் கொடுக்கும் சோற்றில் தண்ணீரை ஊற்றினால் சோறு மிதக்கும். புழு கீழே இருக்கும். கோயமுத்தூர் சிறையில் சோறு நன்றாக இருந்தது. நன்றாக இருந்தது என்றால் ஒசத்தியான உணவல்ல. திருச்சியைப் போல அவ்வளவு மட்டமாக இருக்காது. வேலூரிலும் கோயமுத்தூரைப் போலவே இருந்தது.
திருச்சி சிறையிலிருக்கும்போது ஒருமுறை ஆனைமுத்து மற்றும் நாங்களெல்லாம் உண்ணாவிரதம் இருந்தோம். பிறகு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டோம். ஏழு வேளை உணவை உண்ண மறுத்து போராட்டம் செய்தோம்.
திருச்சி சிறைக்கு என்னை மாற்றியபோது பி கிளாஸ் கொடுப்பதாகச் சொன்னார்கள். எனக்கு பி கிளாஸ் வேண்டாம், நான் எங்கள் தோழர்களோடே இருக்கிறேன் என்று கூறிவிட்டேன். சில சமயங்களில் அங்கிருந்த ஓட்டு வீடுகளின்மீது பாம்புகள் வந்துவிடும். அது எங்களைப் பார்த்து ஒதுங்கிப் போனது. நாங்கள் அதைப் பார்த்து ஒதுங்கிப் போனோம். அங்குதான் சிலம்பாட்டம், மான்கொம்பு விளையாடக் கற்றுக் கொண்டோம். அங்கேயே நாடகங்கள் நடத்தினோம். சிறை அதிகாரிகளும் நாங்களும் சண்டை போடாமல் உறவு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதால் அவர்களால் எங்களுக்கு எந்தத் தொல்லையும் வரவில்லை. அதிகாரிகள் நமது தோழர்களைத் திட்டியதில்லை, அவர்கள் திட்டுமாறு நாங்களும் நடந்து கொண்டதில்லை.
இந்த சமயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நேரு, அரசியல் சட்டம் பிடிக்காது என்று சொல்லுபவர்கள் நாட்டைத் துண்டாட நினைக்கிறார்கள். இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறட்டும் நான்சென்ஸ் என்றும், இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் பேசினார். அதற்கு பெரியார், நாங்கள் இந்த நாட்டின் சொந்தக் காரர்கள், நாங்கள் எதற்கு இந்த நாட்டை விட்டுப் போக வேண்டும். நீங்கள் வேண்டுமானால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று பதில் சொன்னார். நேருவின் பேச்சைக் கண்டித்து தி.மு.க.வினர்கூட கருப்புக்கொடி காட்டினார்கள்.
நேரு பேசிய கூட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் மாஜிஸ்திரேட்டும் கலந்து கொண்டார். நேர்மையானவர் என்று சொல்லப்பட்ட நேரு, நாத்திகவாதி என்று சொல்லப்பட்ட நேரு, சோசலிசவாதி என்று சொல்லப்பட்ட நேரு சட்ட எரிப்பு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டை வைத்துக் கொண்டே பேசினார். சொல்லக்கூடாத ஒன்றை நேரு சொன்னார். அதன் விளைவாக நீதிபதி பெரியாருக்கு ஆறுமாத தண்டனை விதித்தார்.
1957இல் முதுகுளத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்றும் அவர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் பெரிய கலவரம் நடந்தது. அப்போது இந்தக் கலவரத்திற்கு மூலகாரணமாக இருந்த முத்து ராமலிங்கத்தேவரை முதலில் கைது செய்யுங்கள், ஆனது ஆகட்டும் என்று முதல்வர் காமராஜரை பெரியார் வற்புறுத்தினார். வெளிப்படையாக அறிக்கை யாகவும், பொதுக் கூட்டத்திலும் இதை அய்யா மிகவும் வலியுறுத்தினார். முத்துராமலிங்கத் தேவர் சொல்லுகிற – காட்டுகிற ஆள்தான் அய்ந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அதற்குட்பட்ட பாராளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெறுவார்கள். அதனால் அவ்வளவு செல்வாக்கு இருந்த அவரை விமர்சிக்க எல்லோரும் தயங்கினார்கள். இதுதான் 1957ஆம் ஆண்டு நிலவரம். ஆனால் அந்த நிலையை அய்யாதான் போட்டுடைத்தார். அதற்குப் பிறகு காமராஜர் முத்துராமலிங்கத் தேவரைக் கைது செய்து திருச்சி சிறையிலடைத்தார். இரண்டு நாட்கள் அங்கிருந்த முத்துராமலிங்கத் தேவரை பாதுகாப்புக் கருதி கடலூர் சிறைக்கு மாற்றி விட்டார்கள்.
தண்டனை பெற்ற பின்பு எங்களுக்கு கை வைத்த பனியனும், டவுசரும் கொடுத்தார்கள். பி கிளாஸ் கைதிகளுக்கு முழுக்கை பனியனும் முழுக்கால் பைஜாமாவும் கொடுத்தார்கள். மேலும் ஒரு கட்டிலும் வேலை செய்ய ஆடர்லியும் கொடுத்தார்கள். இதுதான் அங்கிருந்த சலுகைகள்.
1959ஆம் ஆண்டு மார்ச் மாதமோ, ஏப்ரல் மாதமோ நான் விடுதலையானேன். நாங்கள் விடுதலையான பின்பும் கீழவாளாடித் தோழர்களும் திருமங்கலம் தோழர்களும் சிறையிலிருந்தார்கள். இவர்கள்தான் அதிக காலம் தண்டனைக்குள்ளானவர்கள்.
சிறையில் பட்ட கஷ்டங்கள் சிறைக்குள் இருக்கும்போது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், வெளியே வந்து பார்த்தால் வருமானம் இன்றியும், தொழில் நசிந்தும் பலருடைய குடும்பமே நிலைகுலைந்து போயிருந்தது. அதனால் கழகத் தோழர்கள் பட்ட துன்பங்களை வார்த்தைகளால் சொல்லி மாளாது.
ஆனால் கழகத்தினரின் இந்த சிறை வாழ்க்கைக்குப் பிறகு தமிழ்நாட்டில் சில பயன்கள் உண்டாயிற்று. ஒன்று, கையை வெட்டினால் ஒன்றரை ஆண்டுகள்தான் சிறைத் தண்டனை. ஆனால், சாதியை ஒழிக்க வேண்டும் என்று ஒரு பேப்பரைக் கொளுத்திவிட்டு இவர்கள் இரண்டாண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார்களே என்கிற பயம் உண்டாயிற்று. அதனால், தாழ்த்தப்பட்டவர்கள் தெருவில் நடக்கக் கூடாது என்று சொல்லப்பட்ட பல இடங்களில் எல்லோரும் தெருவில் நடக்கலாம் என்ற நிலை தானாகவே ஏற்பட்டது.
இப்போராட்டம் இன்றைய தலைமுறையினர் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய சமுதாய மாற்றம்.
இரண்டாவது, பெரியாரைத் திட்டினால், சாதியைச் சொல்லித் திட்டினால் உதைவிழும், ரோட்டில் வைத்து வெட்டுவார்கள் என்கிற பயம் அப்போதுதான் வந்தது. எங்களுக்கு மரியாதை இருந்ததா? இல்லையா? என்பதெல்லாம் வேறு சங்கதி.
பெரியாரை விமர்சனம் செய்தவனின் குடுமி அறுக்கிற நிகழ்ச்சி, பூணூல் அறுக்கிற நிகழ்ச்சி நடந்தது. இதை நாங்களா செய்தோம்? அப்போது கழகத்தின் முன்னணித் தோழர்களெல்லாம் சிறையிலிருந்தோம். சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்து ஆண்டுக்கணக்கில் தண்டனை பெற்று கழகத் தோழர்கள் சிறைக்குச் சென்றதால் உண்டான உணர்ச்சி, அனுதாபம் மக்களை இப்படிச் செயல்பட வைத்தது. மக்கள் மனத்திலே சாதி ஒழிப்பு எண்ணத்தை உறுதிப் படுத்தியது. அவசியத்தைப் புரிய வைத்தது. எங்களைப் போன்றோர் செய்த போராட்டத் தின் பலனாகவே இதை நாங்கள் பார்த்தோம்.
காமராஜர் அரசு சட்ட எரிப்புப் போராட்ட வீரர்களுக்கு எதிராக இவ்வளவு கடுமையாக நடந்திருக்க வேண்டியதில்லை. பின்னாளில் திருவாரூர் கே. தங்கராசு அவர்கள் கழகக் குடும்பங்களை அழித்தவரே காமராஜர் தான் என்று குறிப்பிட்டார். அய்யா அவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை.
இந்தப் போராட்டம் மக்கள் மத்தியில் கழகத்திற்கு பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. ஆனால், கழகத் தோழர்களின் குடும்பத்திற்கு பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தியது, பெரிய சுமையை ஏற்படுத்தியது, மிகப் பெரிய வலியை ஏற்படுத்தியது என்பது நிலையான உண்மை யாகும்.
பின்னாளில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருவாரூர் கே. தங்கராசு அவர்களின் வேண்டுகோளை ஏற்று சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறையிலிருந்த தோழர்களுக்கு உதவி செய்யப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.
நன்றி :
உடுமலைப்பேட்டை சுயமரியாதைப் பதிப்பகம் சார்பில்
கா. கருமலையப்பன், இரா. மனோகரன், ந. பிரகாசு தொகுத்த சட்ட எரிப்புப் போராளியின் நினைவுகள் நூலிலிருந்து
நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்