உயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

மத்திய அரசு உயர்கல்வி தொடர்பாக விவாதத்திற்கு முன்வைத்துள்ள மசோதா முன்வரைவு முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டும். இந்த மசோதா பல்கலைக்கழக மானியக்குழுவை அழித்தொழிக் கிறது. உயர்கல்விக்கு மானியம் வழங்கும் அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கையில் கொடுக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவிற்குப் பதிலாக உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்க ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ என்ற புதிய அமைப்பை முன் மொழிகிறது. உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகளில் அரசு தலையிடாது என்று கூறும் மசோதா இந்நிறுவனங்கள் எந்த ஒழுங்காற்று முறையுமின்றி தம் விருப்பப்படி செயல்பட வழி வகுக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் அம்சங்களை கண்காணிக்கவும் பொதுவாக உயர்கல்வி பற்றியப் பரிந்துரைகளை அவ்வப்பொழுது தேவை கருதி உருவாக்கி அரசுக்கு அளிக்கவும் புதிதாக அமைக்கப்படும் இந்திய உயர்கல்வி ஆணையத்திற்கு (ழiபாநச நுனரஉயவiடிn ஊடிஅஅளைளiடிn) தலைவர், துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். தலைவரையும் துணைத் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் முறை மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

இது முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்த ஆணையம் நாடு தழுவிய அளவில் பட்டங்கள், பட்டயங்கள் வழங்கும் கல்லூரிகள், மத்திய மாநில மற்றும் இதர பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் அனைத்தினுடைய உயர்கல்விசார் அம்சங்களையும் செயல்பாட்டையும் கண்காணித்து அவற்றை மூடவும் அவற்றிற்கு ஆணையிடவும் அதிகாரம் படைத்தது என்றாலும் இதன் தலைவர்மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதில் மாநிலஅரசுகள் எந்த பங்கையும் ஆற்ற முடியாது என்பது குறிப்பிடத் தக்கது. 12 உறுப்பினர்களில் ஒரு தொழிலதிபர் இருப்பார். மற்ற உறுப்பினர்கள்: மத்திய அரசின் மூன்று உயர் அதிகாரிகள் (உயர்கல்வித் துறை செயலர், திறன் வளர்ப்புத் துறை செயலர், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை செயலர்); தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் தலைவர்; அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவின் தலைவர்; இன்னும் இருவர் தரநிர்ணய அமைப்புகளின் தலைவர்கள்; இரண்டு பேர் துணை வேந்தர்கள், இன்னும் இரண்டு பேர் பேராசிரியர்கள். இந்த ஆணையத்தின் கட்டமைப்பே மத்திய அரசின்அதிகாரத்தை நிலை நாட்டுவதை மட்டுமே நோக்கமாககொண்டுள்ளது என்பது தெளிவு. சுயேச்சையாக சிந்திக்கவோ,

அரசின் உயர்கல்வி சார் கொள்கைகளை சமூகத்தின், மக்களின் கண்ணோட்டத்தில் இருந்துவிமர்சன பூர்வமாக ஆய்வு செய்து உயர்கல்வி கொள்கைகளை நெறிப்படுத்துவது என்பதோ இத்தகைய ஆணையத்தின் மூலம் நடப்பது சாத்தியமல்ல. அதே நேரத்தில் தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள் மூலமாகவும் நேரடியாகவும் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது செல்வாக்கு செலுத்த முடியும். உயர்கல்வி ஆணையத்தின் தலைவரை தேர்வு செய்யும் முறை மிகுந்த ஆட்சேபத்திற்கு உரியது. அரசு அதிகாரிகள் கொண்ட தேர்வுக்குழு தான் அவரை தேர்வு செய்யும். அவர் அயல்நாட்டில் வாழும் இந்தியராகவும் இருக்கலாம் என்கிறது மசோதா. அவர் கல்வியாளர்களால் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை. பல்கலைக்கழக மானியக்குழுவின் பத்து உறுப்பினர்களில் நான்கு பேராசிரியர்கள். ஆனால், புதிதாக அமைக்கப்படவுள்ள ஆணையத்தில் இரண்டே பேராசிரியர்கள் தான். இணைச் செயலாளர் மட்டத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிதான் ஆணையத்தின் செயலராக இருப்பார்.

அரசின் கைப்பாவையாகவே, எந்த தன்னாட்சி உரிமையும் இல்லாத அமைப்பாக ஆணையம் இருக்கும். ஆணையம் நாடுமுழுவதும் உயர்கல்வியில் அடையப்படவேண்டிய கற்றல் விளைவுகளை (டநயசniபே டிரவஉடிஅநள) அறிவிக்கும் என்றும் கல்வி கற்பித்தல்/மதிப்பீட்டுமுறைகள்/ஆய்வு ஆகியவற்றிற்கான நெறிமுறைகளையும் முடிவு செய்யும் என்றும் சட்ட வரைவு சொல்கிறது. நாடு முழுவதும் உள்ள முற்றிலும் வேறுபட்ட பன்முக நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல் நாடு முழுமைக்கும் ஒரே வகையான வரைமுறைகளை திணிக்கும் இந்த நடைமுறை பெருநகரங்களில் வாழும் வசதி படைத்த செல்வந்தர் களுக்குத் தான் சாதகமாக இருக்கும். கல்விகளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வான நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாத இந்த அணுகுமுறை ஜனநாயக விரோத மானது. இந்த ஆணையத்திற்கு நாடுமுழுவதும் உள்ள எந்த உயர்கல்வி நிறுவனத்தையும் மூட உரிமை உண்டு.இத்தகைய வானளாவிய அதிகாரங்களை மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஆணையத்திற்கு தருவது மிகுந்த ஜனநாயக விரோதத்தன்மை கொண்ட செயலாகும். அரசியல் விருப்பு வெறுப்பு, தத்துவார்த்த இணக்கம் போன்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவது உட்பட பல தாக்குதல்களுக்கு இட்டுச்செல்லும். மேலும் அரசின் செலவைக்குறைக்கும் நோக்குடன் பல அரசு துறை கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு அரசு இந்த ஆயுதத்தை பயன்படுத்த முடியும். கல்வியை முழுமையாக தனியார்மயமாக்கும் தந்திரம் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது. மையப்படுத்தப்பட்ட ஆணையம் நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான உயர்கல்வி நிறுவனங்களை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்வது என்பது இயலாத காரியம். ஆனால், அதைத்தான் ஆணையத்தின் பணிகளில் ஒன்றாக வரைவு சட்டம் முன்வைக்கிறது. இதுமட்டுமின்றி இன்னும்பல பணிகளை ஆணையம் செய்யுமாறு பணிக்கப்படு கிறது. இவை அனைத்தும் தேவையற்ற மையப் படுத்துதலாகும். ஒட்டுமொத்தமாக கூறினால், இந்த சட்ட வரைவு உயர்கல்வியில் மாநில உரிமைகளை முற்றாக அழிக்கிறது. ‘தரம்’ என்ற கவர்ச்சிகரமான சொல்லைப் பயன்படுத்தி உயர்கல்வியில் ஒரு சில செல்வாக்குமிக்க நிறுவனங்களும் சமூக-பொருளாதார வகையில் வலுமிக்கவர்களும் மட்டுமே இருக்க முடியும் என்றார் நிலையை நோக்கி உயர்கல்வியை தள்ளுகிறது.

கல்வியாளர்களின் பங்கை குறைத்து உயர் கல்வியில் மத்திய அரசின் அதிகாரிகள், அதிகாரம் செலுத்தவும் மத்திய அரசு தனது தத்துவார்த்த நிலைப்பாட்டையும் பார்வையும் உயர்கல்வியில் திணிக்க வகை செய்கிறது.பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல்பாட்டில் உரிய திருத்தங்கள் கொண்டுவந்து, மைய அதிகாரக்குவிப்பை தவிர்த்து, மாநிலங்களின் உரிமைகளை அங்கீகரித்து, கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்பை அதிகப்படுத்தி, உயர் கல்வியை ஜனநாயகப்படுத்தி, அதை மேம்படுத்துவது அவசியம். ஆனால், அரசு முன்மொழிந்துள்ள சட்டவரைவு இதற்கு நேரான எதிர்திசையில் பயணிக்கிறது. நிதி அதிகாரம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையிடம் முழுமையாக ஒப்படைக்கப்படுவது ஆபத்தானது. மொத்தத்தில் இந்த மசோதா நிராகரிக்கப்படவேண்டும்.

கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர்

பொருளாதார அறிஞர்

பெரியார் முழக்கம் 11102018 இதழ்

You may also like...