திராவிட இயக்க ஆய்வு நூல் கூறுகிறது அடக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரத்தில் அமர்த்தியது திராவிட இயக்கம்
1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநிலக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்தது. முதலில் மாணவராகவும், பிறகு மாநில நிர்வாகத்தில் அதிகாரியாக இடம்பெற்றும் அப்போதைய மாற்றங்களை நேரிலேயே பார்த்தவர் எஸ்.நாராயண். “தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கை யாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” என்று தன்னுடைய புதிய நூலில் எழுதியிருக்கிறார். ‘தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகள்:
அண்ணாவுக்குப் பிறகு…
தமிழக முதலமைச்சராக இருந்த சி.என்.அண்ணா துரை 1969-ல் மறைந்தார். மு.கருணாநிதி முதலமைச்சராக அடுத்து பதவிக்கு வந்தார். இந்தியை எதிர்த்தவர்கள், டெல்லிக்கு எதிராக இயக்கங்கள் நடத்தியவர்கள், இளைஞர்கள், மெத்தப் படித்தவர்கள், ஆற்றொழுக்காக அடுக்கு மொழியில் பேசுகிறவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றனர். முந்தைய அரசுகளுக்கு இணையாக மட்டுமல்ல, அதைவிடச் சிறப்பாக மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தங்களால் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் அவர்கள். 1969 தொடங்கி 1976 வரையிலான அரசின் கொள்கைகள் அனைத்தும் இத்தகையோரின் கருத்துக் கலவைகளால் விளைந்தவை.
ஆள்பவர்களின் அரவணைப்பு, கட்சித் தொண்டர் களின் பங்களிப்பு ஆகியவை வளர்ச்சிக்கு உதவின. மக்களுடைய கோரிக்கைகளை ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியதை இளம் அதிகாரியாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். இது முக்கியமான மாற்றம். அதற்கு முன்னால், ஊராட்சி ஒன்றியத் தலைவர் அதிகாரிகள் சூழ இருக்கும்போது வளர்ச்சித் திட்டங்களை அவர்களுடன் விவாதித் திருக்கிறேன். இப்போதோ பாசனத்துக்கான தண்ணீர், ரேஷன் அரிசி, பள்ளிக்கூடச் செயல்பாடுகள் ஆகியவை தொடர்பாக மாவட்ட, வட்ட கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளைச் சந்தித்து மக்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து நடவடிக்கைகளை எடுக்கவைத்தனர். மேல் அதிகாரிகள் வழிகாட்டுதலின் படி நடவடிக்கை எடுக்கும் வழக்கம் மாறி, ஆளும் கட்சி நிர்வாகிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடங்கினோம்.
சமுதாயப் படிநிலையில் முன்னேற நினைத்த குழுக்கள் உருவாகி ஆளும் கட்சியின் ஆதரவை நாடின. தொடக்ககாலத்தில் அவர்கள் மக்களுடைய குறைகளை மட்டுமே அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். ஏற்கெனவே இருந்த நிர்வாகச் சங்கிலித் தொடர்கள் மீறப்பட்டன. ஆண்டுகள் செல்லச்செல்ல இந்தக் குழுக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகிகளிடம் வலியுறுத்தத் தொடங்கின. அரசு நிர்வாகத்துக்குக் கட்சித் தொண்டர்களிடமிருந்து கோரிக்கைகள் வருவது எப்போதாவது நிகழும் நிகழ்ச்சி என்பது மாறி, அன்றாட வழக்கமாகிவிட்டது. இதனால், மக்களுடைய கோரிக்கைகளும் குறைகளும் அரசு நிர்வாகத்தின் கவனத்தை உடனுக்குடன் ஈர்த்தன. அது ஒருவகையில் பின்னடைவாகவும் மாறியது.
மேலே வந்த கீழ்நிலைச் சமூகங்கள்
அரசு வேலைகளிலும் கட்சியிலும் கீழ்நிலைச் சமூகங்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் கிடைக்கத் தொடங்கியது. தமிழ்நாடு பொதுத் தேர்வாணை யத்தின் தரவுகளின்படி 1960 தொடங்கி 1980 வரையிலான காலத்தில் அரசு வேலைக்கு வந்தவர்களின் சாதிப் பின்னணி அடியோடு மாறியிருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசு வேலைகளைப் பெற்றனர். பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனச் சாதிகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்ந்ததால் அதிகாரவர்க்கக் கட்டமைப்பே அடியோடு மாற்றம் கண்டது.
மக்கள்தொகையில் குறைவாக இருந்தாலும், அதற்குப் பொருத்தமில்லாத வகையில் அபரிமிதமாக அரசு வேலைகளைப் பிராமணர்கள் ஆக்கிரமித் திருந்த நிலை சீராக்கப்பட்டது. புதிய வேலை வாய்ப்புகளில், முற்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைந்தது. அத்துடன் அரசு வேலையில் பிற்படுத்தப் பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக, அதுவரை அரசு வேலைக்கே வந்திராத பல சாதியினர் வேலைகளைப் பெற்றனர். இது அரசின் நிர்வாகத்தில் பன்மைத்துவத்தை வலுப்படுத்தியது. இது மிகமிக முக்கியமான மாற்றம்.
1925இல் நடந்த காஞ்சிபுரம் மாநாடு முதல் பெரியார் வலியுறுத்திவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம், 1967இல் தொடங்கி வலுவாக அமலானது. திராவிடக் கட்சிகளின் எண்ணங்கள், லட்சியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான சாதிகளை, பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அரசு வேலையில் சேர்ந்தனர். இதனால், அரசு நிர்வாகத்தில் பிரதிநிதித்துவ சமநிலை ஏற்பட்டது. அதனால், சமூகநலத் திட்டங்களையும் சமூகங் களுக்குப் பலன் தரக்கூடிய சேவைகளையும் அடுத்தடுத்த அரசுகளால் வழங்க முடிந்தது. அரசு ஊழியர்களின் சமூகப் பிரதிநிதித்துவம், 1965-ல் நான் பணியில் சேர்ந்தபோது இருந்ததைப் போல அல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் அனைத்துத் தரப்பையும் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இருக்கிறது.
நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது மாவட்ட ஆட்சியரையும் மாவட்ட அரசு நிர்வாகங்களையும் சார்ந்துதான் எல்லாமே இருந்தன. அரசின் கொள்கைகளை அமல்படுத்தும் கரங்களாக ஆட்சியர்கள் இருந்தனர். காலனியாதிக்கக் காலத்திலிருந்து தொடர்ந்த அந்தப் பாரம்பரியம் அரசு நிர்வாகம் என்பதை அதிகார வர்க்கத்துக்குக் கட்டுப்பட்டதாக வைத்திருந்தது.
மாற்றிக் காட்டிய தமிழகம்
1967க்குப் பிறகு தமிழ்நாட்டில் நிலைமை மாறியது. மக்களோடு இணைந்து பல இயக்கங்களை நடத்திய, மக்களின் பேராதரவைப் பெற்ற கட்சியாக திமுக இருந்தது. எனவே, பதவியில் இருக்கும்போது மக்களுடைய கோரிக்கைகளைச் செவிமடுப்பதும் அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றுவதும் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. திமுக கட்டுக்கோப்பான தொண்டர்களைக் கொண்ட ஜனநாயகக் கட்சியாக இருந்ததால் மாவட்டச் செயலாளர்களால் கட்சியின் உயர் தலைவர்களுடன் நேரடியாக எளிதில் தொடர்புகொள்ள முடிந்தது.
அன்றாட அரசு நிர்வாகம் தொடர்பாகக்கூட மாவட்ட ஆட்சியர்களுடன் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கலப்பது வழக்கமாகி விட்டது. மாவட்ட ஆட்சியர் பதவி அதிகாரம் மிக்கதாகவும், அனைவராலும் அடையப்பட வேண்டிய லட்சியப் பதவியாகவும் திகழ்ந்தது.
1971-க்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவும் மாறத் தொடங்கியது. கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததால், கட்சிக்குள்ளும் அரசு நிர்வாகத்திலும் தொண்டர் களின் கை ஓங்கியது. மாநில அரசின் வலுவான இரு கரங்களாக மாவட்ட ஆட்சியரும் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளரும் செயல்பட்டனர். அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றில் மாநில அரசின் பங்களிப்போடு அரசியலுக்கும் முக்கிய செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. இதனால், நிர்வாகம் அரசியல் மயமானது. இந்தக் காலத்தில்தான் அரசின் உயர் அதிகாரிகளில் பலர் ஓய்வு பெற்றனர், பலர் மத்திய அரசுப் பணிக்கு அயல்பணி அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டனர். மாநில அரசு நிர்வாகத்தின் அடித்தளத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் எளிதில் உணரக்கூடியதாக இருந்தது. அடுத்து அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தபோதும் இதுவே நடந்தது.
– ‘இந்து’ ஏட்டிலிருந்து
பெரியார் முழக்கம் 02082018 இதழ்