நீதியின் புதைச் சேற்றில்…. மனுஷ்ய புத்திரன்
‘என் மகனை
கருணைக்கொலை செய்துவிடுங்கள்’
என்று மன்றாடுகிறாள்
அற்புதம் அம்மாள்.
`என் மகனைத்
தூக்கு மேடையிலிருந்து
காப்பாற்றுங்கள்’ என்று
மன்றாடிய
அதே அற்புதம் அம்மாள்.
இப்போது
‘என் மகனைக் கொன்றுவிடுங்கள்’
என்று கேட்கிறாள்
மரணத்தைவிடவும்
கொடிய மரணங்கள் இருக்கின்றன
தண்டனைகளை விடவும்
கொடிய தண்டனைகள் இருக்கின்றன
ஒருவனைக் கொல்லவேண்டும் என்பதில்லை
ஆனால் அழிக்கலாம்
நிதானமாக
எந்தக் குழப்பமும் இல்லாமல்
சட்டத்தின் சிலந்தி வலைக்குள்
தன் மகனை ஒப்புக்கொடுத்தாள்
அற்புதம் அம்மாள்.
நீதியின் புதிர்ப் பாதைகளுக்குள்
அவளுக்கு வழி தவறிவிட்டது
எங்கும் போய்ச் சேராத
கருணையின் இருட்டில்
மீட்சியின் திசைகள்
அவளுக்குப் புலப்படவில்லை
இருபத்தேழு வருடங்களாக
வீடு திரும்பாத மகனுக்காக
சிறிய மெழுகுவத்திகளின் துணையுடன்
காத்திருக்கிறாள் அற்புதம் அம்மாள்.
அவள் மகனுக்குப் பின்
நிறையபேர் குற்றம் சாட்டப்பட்டார்கள்
நிறையபேர் விடுதலையானார்கள்
நிறையபேருக்கு
நிறைய கருணை கிடைத்தது
மனிதர்களைக் கொன்றவர்கள்
மானைக்கொன்றவர்கள்
ஆயுதங்களை விநியோகித்தவர்கள்
கலவரங்களில் கர்ப்பத்திலிருந்த
சிசுவைக் கீறியவர்கள்
வெடிகுண்டுகளைப் பற்ற வைத்தவர்கள்
துப்பாக்கி ஏந்திய சன்னியாசிகள்
என இந்த தேசத்தில்
அனைவர்மீதும்
கருணை வெள்ளமாக ஓடியது.
அற்புதம் அம்மாள் மகன்
நீதியின் புதைசேற்றில்
சிக்கிக்கொண்டுவிட்டான்
கொஞ்சம் கொஞ்சமாக
அவனது தலை வரை மூழ்கிவிட்டான்
அந்தக் காட்சியை
அற்புதம் அம்மாளோடு சேர்ந்து
நாமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்
அற்புதம் அம்மாளுக்கு வயதாகிவிட்டது
அற்புதம் அம்மாளின் மகனுக்கும் வயதாகிவிட்டது
27 ஆண்டுகளில் இந்தியா
எவ்வளவோ மாறிவிட்டது
ஸ்மார்ட் போன்கள்
அதிவேக இணையத் தொடர்புகள்
சமூக வலைதளங்கள்
24 மணி நேர தொலைக்காட்சிகள்
டிஜிட்டல் பணம்
பழைய ஆட்சிகள் போய்
புதிய ஆட்சிகள் வந்தன
பழைய தலைவர்கள் போய்
புதிய தலைவர்கள் வந்தார்கள்
பழைய தலைமுறைகள் கடந்து
புதிய தலைமுறைகள் வந்துவிட்டன
அற்புதம் அம்மாளின் மகனுக்கு
இதெல்லாம் எதுவும் தெரியாது
ஒன்பது வோல்ட் பேட்டரி
எதற்கு வாங்கப்பட்டது என
அவனுக்குத் தெரியாது
என்பதை நிரூபிக்க
ஏராளமான ஆவணங்கள்
இந்த இருபத்தேழு ஆண்டுகளில்
சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன
அவை நீதியரசர்களின் கழிவறையில்
குடியரசுத்தலைவர்களின் கழிவறையில்
டிஷ்யூ காகிதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
‘என் மகனைத் தூக்குமேடையிலிருந்து காப்பாற்றுங்கள்’ என்று கேட்ட
அதே அற்புதம் அம்மாள்தான் கேட்கிறாள்
`என் மகனைக் கொன்றுவிடுங்கள்’ என்று.
நம்முடையதைப் போன்ற
ஒரு கொடுமையான காலம்
இனி வரப்போவதில்லை.
அற்புதம் அம்மாளின் மகனைக்
கருணைக்கொலை செய்துவிடுங்கள்
அது ஒரு நியாயமான தீர்வு
உங்கள் போலி நீதியைக் காப்பாற்ற
உங்கள் போலி மனசாட்சியைக் காப்பாற்ற
அதுதான் மிஞ்சியிருக்கும் ஒரே வழி
அற்புதம் அம்மாள்
தன் மகனுக்கு
அப்போது கேட்டது விடுதலை
இப்போது கேட்பதும் விடுதலை
அப்போது கேட்டதும் கருணை
இப்போது கேட்பதும் கருணை
உங்களுக்குத் தேவையான கொலையும்
அற்புதம் அம்மாளுக்குத் தேவையான கருணையும்
ஒரே நேரத்தில் நிகழும் அற்புதத் தருணம் இது.
அற்புதம் அம்மாளின் மகனைக்
கருணைக்கொலை செய்துவிடுங்கள்.
நிமிர்வோம் ஜுன் 2018 இதழ்