மனிதம் ஒன்றே எம்மொழி!
ஆதியில் ஒலி இருந்தது எனவும்
ஓங்காரமே முதல் ஒலி என்கிற புனைவே..
மனிதம் அந்தமிக்க எறியப்பட்ட முதல் ஆயுதம்!
கதை மாந்தர்கள்
கடவுளர்களாய் நடவு செய்யப்படுவது மண்
மேலல்ல.
மனித உயிர்கள் மேல்.!
வழிபாடென்னும் மரணவாய்,
அருவமாகவும்..
உருவமாகவும் வெறிகொண்டு திரிகிறது
புவியெங்கும்.மனித ரத்தம் பூசிய முடை
வாடையோடு!
புனிதங்களும், மோட்சங்களும்
ரட்சிப்பும், வரங்களும்
பிணக்குவியல் மேல் முளைத்த
நச்சுச் செடி!
இன்று வேர்பரவி..
கிளை பரப்பி முகடு துளைக்க நிற்கிறது.
கொலையுண்ட மனிதனின், வெறித்த விழிகளை ..
இலைகளாய்
கொண்டு.!
உயிர்ப்பலி கேட்டு நெறிபடும்
மதங்களின் பற்களில்..
“ஜெய் காளீ” என்ற அலறல் கேட்கிறது.
சில சமயம் “அல்லாகூ அக்பர்” என்றும்..
“அல்லேலூயா”எனவும்,
வெறிமிகுக் கூச்சல் வெளியேறுகிறது.!
அருளுகிற.. ஆசிர்வதிக்கிற கரங்களுக்குள்ளே,
கூர்வாள் உள்ளது காணாது..
மதத்தை தலையேந்தி
மடிந்து சவமாகிறது மனித இனம்.!
இதை மறுத்தோம்.
தளை அறுத்தோம்.
மதங்களின் குரல்வளை மிதித்தோம்.
சிதைத்தோம்.!
மனிதம் ஒன்றே எம் மொழி!
அதன் நேயம் காப்பதே எம் வழி!
நீ கத்தியைப் பாய்ச்சு.
தலை கொய்து வீசு.
உடல் கொத்தி எறி.
உயிர்தன்னைக் குடி!
சாயும் வரைச் சொல்லுவோம்.!
சாகும் வரைச் சொல்லுவோம்.!
கடவுள் இல்லை.!! கடவுள் இல்லை!!
கடவுள் இல்லவே இல்லை.!!
கடவுளை நம்புவன் முட்டாள்.!!
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!!
ஒருக் கருப்பை வீழ்த்தினால் நடுங்கிடுமோ
எங்கள் முழக்கம்?
முடங்கிடுமோ எங்கள் இயக்கம்?
இது பெரியாரின் “கருப்பை” யில்
சூள் கொண்டு பிறந்தக் கருப்பு.!
மதங்களும், கடவுள்களும் புதைபடும்வரை ..
ஓய்ந்திடாது இந்தக் கருப்பு!
பெ.கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு
நிமிர்வோம் மே 2017 இதழ்