‘நிமிர்வோம்’ கவிஞர் தாரை வடிவேலன், தாரமங்கலம்
- சாதிமுறைக் கல்யாணம் சாய்த்திடுக ஆணோடு
பாதி எனநின்ற பெண்ணோடு – நீதி
நயந்தே சுதந்திரத்தை நல்கிடுக போற்றிச்
சுயமரியா தையாய் நிமிர்.
- அந்தணர்க்கு நீயடிமை அல்லவென நின்றிடுக
வந்தமொழி ஓட்டிடுக வண்டமிழை – வந்தனைசெய்
அயல் மொழிக்(கு) ஆட்பட்(டு) அடிமையாய் நில்லாச்
சுயமரியா தையாய் நிமிர்.
- கடவுளில்லை என்றுபெரி யார்சொன்ன காரணத்தை
நடைமுறையில் வைத்துப்பார் நன்றே – மடமை
பயக்கும் இடமாகக் கோவிலை நீக்கி
சுயமரியா தையாய் நிமிர்.
- சூத்திரராய் நம்மைவைத்துச் சோதரரில் சாதிவைத்த
ஆத்தியத்தில் நம்பெரியார் அந்திமகா லத்தும்
அயர்ச்சி சிறிதுமின்றி ஆற்றினார் தொண்டு
சுயமரியா தையாய் நிமிர்.
நிமிர்வோம் பிப் 2018 இதழ்