மணவிழா நாள் மகிழ்வாக பெரியாரியல் பயிலரங்கம் நடத்திய இணையர்கள்

திருப்பூர் – கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறையில், 2017 ஜூன் 11, 12 தேதிகளில் நடத்திய பெரியார் பயிலரங்கில் வினோதினி – மணி ஆகியோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். முதலாம் ஆண்டு மணவிழாவின் மகிழ்ச்சியாக பெரியாரியல் பயிலரங்கை நடத்த விரும்பி அதற்கு நிதி உதவி அளிக்க வினோதினி முன் வந்தார். ஏற்கனவே ஜாதி மறுப்பு திருமணம்செய்து கொண்ட கோவை கழக இணையர்கள் நிர்மல் – இசைமதி மணவிழா நாளும் ஏறத்தாழ இதை ஒட்டியே வருவதால் தோழர் நிர்மல், பயிலரங்கத்துக்கு தங்கள் மணவிழா மகிழ்வாக நிதி உதவி செய்ய முன் வந்தார். உடனே பயிலரங்கம் ஏற்பாடானது.  பொள்ளாச்சி கழகத் தோழர் வெள்ளியங்கிரி இத் தகவலை பலத்த கரவொலிக்கிடையே பயிலரங்கில் அறிவித்தார். கழகத் தோழர் கோவை நிர்மல், “இனி ஒவ்வொரு ஆண்டும் மணவிழா நாளில் இத்தகைய பயிலரங்கை வினோத்-மணி இணையருடன் இணைந்து நடத்துவோம்” என்று அறிவித்தார்.

தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “இப்படி குடும்ப நிகழ்வுகளுக்காக செலவிடும் பணத்தை பயிலரங்குகளுக்காக செலவிட முன் வருவது தோழர்கள் பின்பற்றத்தக்க ஒரு சிறந்த திட்டமாகும். பாராட்டுகிறோம். தோழர்கள் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும். நான் கூட எனது மகள் திருமணத்துக்காக செலவிட வேண்டியதை, திருமணத்துக்கு செலவிடாமல் 100 தோழர்களுக்கு அய்ந்து நாள் பெரியாரியல் பயிற்சி முகாமாக கொளத்தூரில் நடத்தினேன். பயிற்சி முகாம் நிறைவு விழா பொதுக் கூட்ட மேடையில் மகளின் திருமணத்தை நடத்தினோம்” என்று குறிப்பிட்டார்.

பெரியார் முழக்கம் 19072018 இதழ்

You may also like...