திருமலைக்கவுண்டன்பாளையத்தில் ஜாதியாதிக்க வெறி – போராட்டம்

11 மணி நேரம்
40 பெண்கள் உட்பட 100 பேர்
3 முறை சாலை மறியல்
சத்துணவு சமையலர் பாப்பாள் அவர்களின் தளராத போராட்டம்
திருப்பூர் அவிநாசி வட்டம் சேவூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை
ஜாதி மனநோயாளிகளுக்கு முதல் அடி

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் சமையல் செய்பவராக பணியாற்றி வரும் பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சமையல் செய்யக்கூடாது என்று கூறி பள்ளியை திறக்க விடாமல் உள்ளூரை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்த தகவலை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு பாப்பாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து திருமலைகவுண்டம்பாளையம் அரசுபள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சமைக்க தடைவிதிக்கும் சாதிவெறி கும்பலை கைது செய்யக்கோரியும்சத்துணவு ஊழியர் அந்த அரசு பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும்
பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய மற்றும் தோழமைகள் இயக்கங்கள் சார்பில் அந்த பள்ளி அருகே உள்ள சேவூர் நால்ரோட்டில் சாலை மறியல் நடைபெற்றது

இதையடுத்து மாவட்ட உதவி ஆட்சித்தலைவர் ஆதிதிராவிடர்நலத்துறை அதிகாரி,காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியதில் சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் அதேபள்ளியில் பணியாற்றவும்அவர் பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்த சாதிவெறி கும்பல் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்கவும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆதரவாக செயல்பட்ட தலைமை ஆசிரியர், கல்விஅதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது

அந்த கோரிக்கையை ஏற்பதாக மாவட்ட உதவி ஆட்சித்தலைவர் உறுதியளித்ததால் சாலைமறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது

இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர்கழகம், தலித்விடுதலைகட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி, ஆதிதமிழர்பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகளோடு திராவிடர் விடுதலைக் கழகமும் கலந்து கொண்டன

அடுத்து பாதிக்கப்பட்ட சத்துணவு சமையலர் பாப்பம்மாள் அவர்கள் சேவூர் காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி புகார் மனு அளித்தார். அதற்கு மேலகதிகாரிகளிடம் ஒப்புதல் கேட்காமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யமுடியாது என்று சேவூர் காவல்நிலையத்தில் தட்டிக்கழிப்பதாலும் கால தாமதம் செய்வதாலும் அனைத்து தோழர்களும் மீண்டும் மறியல் போராட்டம் சேவூர் காவல் நிலையம் முன்பு செய்தனர். 40 பெண்கள் உட்பட 100க்கும் அதிகமான தோழர்கள் கலந்துகொண்டனர்.
30 நிமிடத்தில் முதல் தகவல் அறிக்கை தருகிறோம் என்று சேவூர் காவல்நிலையத்தில் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்ட தோழர்கள் எந்த நடவடிக்கையும் நடக்காததால் பொறுமை இழந்து அணியாக சென்று அவிநாசி நோக்கி செல்லும் முக்கிய சாலையில் மறியல் போராட்டம் தொடங்கினர். கைது செய்ய தயார் நிலையில் காவல்துறை நின்றது.
மக்கள் எழுச்சி முன் எதுவும் செய்யமுடியாத காவல்துறை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எப் ஐ ஆர் கொடுத்தது
அடுத்த கட்ட நிகழ்வாக நாளை வெள்ளி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தவும் 23.07.18 திங்கள் மாலை 5 மணியளவில் அனைத்துக் கட்சி சார்பில் சேவூர் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது
தோழர் பாப்பம்மாள் அவர்களுக்கு துணை நிற்போம்
ஜாதி வெறியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம்
திவிக சார்பில் மாவட்டத் தலைவர் தோழர் முகில்ராசு, விஜய்குமார் மற்றும் ஹரீஷ் கலந்துகொண்டனர்

You may also like...