வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2இல் இரயில் மறியல்: தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
பட்டியல் இன பழங்குடி மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப் பதிவு செய்ய முடியாமலும், கைது செய்ய முடியாமலும் தடுத்திருப்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமின் கேட்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி வன்கொடுமை சட்டத்தை மீறும் ஜாதி வெறியர்கள் சட்டப் பாதுகாப்பு வந்து விட்டதால் மேலும் வன்கொடுமைகளை நடத்துவதற்கு வழி திறந்து விட்டுள்ளது இந்தத் தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி., ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் போராடிய பட்டியல் இன மக்ககள் மீது அம்மாநில பா.ஜ.க. ஆட்சி துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி விட்டனர்.
இந்நிலையில் இந்தச் சட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பாதுகாப்பு கூட்டியக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நமது திராவிடர் விடுதலைக் கழகமும் இணைந்திருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட தமிழர் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து எதிர் வரும் ஜூலை 2ஆம் தேதி தமிழகம் முழுதும் இரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை செல்லாமல் ஆக்கக் கூடிய அவசர சட்டத்தை, நடுவண் அரசு உடனே பிறப்பிக்க வேண்டும்.
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்.
- துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
கழகத் தோழர்கள் ஜூலை 2 அன்று நடக்கும் இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கொளத்தூர் மணி
தலைவர்
திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 28062018 இதழ்