சமூக நீதி என்பதும் பண்பாடுதான் விடுதலை இராசேந்திரன்
பார்ப்பனியம், இந்துமதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஊடாக மனித உணர்வுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜாதிய வேர்களை எதிர்க்க வேண்டும்.
ஆதித் தமிழ்ச்சமூகம் சாதி, மத அடையாளமற்றதாக இருந்தது. இடையில் புகுந்த ஆரியப் பண்பாட்டை தமிழ்ச் சமூகம் எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தான் தமிழகத்தில் நான்கு வருணமுறை முழுமையாக இல்லை. சத்திரியர், வைசியப் பிரிவு தமிழகத்தில் கிடையாது. வேதத்திலும் சாதிகள் இல்லை. நெகிழ்ச்சித் தன்மையுடன் இருந்த வருணாசிரமத்தை பார்ப்பனியம் சூழ்ச்சியால் கெட்டிப்படுத்தியது. வர்ணா சிரமத்தில் 4 பிரிவுகளுக்குள் ஏற்பட்ட இனக்கலப்பு, வாழ்ந்த இடம், தொழில் அடிப்படையில் சாதி முறை உருவானது. தமிழகத்தில் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழர்கள். தெலுங்கு, கன்னடம் பேசுகிறவர்கள் தமிழர்கள் இல்லை என்று சில அமைப்புகள் பிளவை ஏற்படுத்துகின்றன. பேசுகிற மொழியைவிட சாதி அடையாளமற்ற அல்லது சாதியற்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களையே தமிழன் என்பதற்கான அடையாளமாக முற்போக்குவாதிகள் பார்க்கிறோம். சாதியற்ற தமிழரையும், சமூகத்தையும் உருவாக்க முடியுமா? சாதி அற்ற அல்ல சாதி கரைப்பு என்பது சாத்தியம் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். சொந்த சாதியில் திருமணம் செய்து கொடுத்த பிறகு, விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு வேறுசாதி பையனை மறுமணம் செய்கிறார்கள். சாதியின் பயன் குறைய குறைய சாதிய உணர்வும் குறைந்து விடுகிறது. சாதி என்பதற்கான பலன், பயன், தேவை இல்லாமல் போனால் சாதியும் காணாமல் போகும் அல்லது காட்சிப் பொருளாக இருக்கும். சாதி கடந்த தோழமை, சகோதரத்துவம், ஒருவருக்கொருவர் உதவுதல் என்ற பண்பாட்டை வளர்த்தெடுக்கும்போது, சாதி அதன் பயனை இழக்கிறது. வலுவிழந்து கொண்டிருக்கும் சாதி கட்டமைப்பை, வாக்கு வங்கி தேர்தல் அரசியலுக்காக உயிர்கொடுக்க ராமதாஸ் போன்றவர்கள் முயற்சித்தார்கள். அதற்காக சாதி கூட்டமைப்பை உருவாக்கினார்.
சாதி அமைப்பு உள்ளுக்குள்ளேயே பல முரண்பாடுகள் கொண்டிருப்பதால் அந்த அமைப்பையே தகர்த்துவிட்டது. சென்னையில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக சாதி இருக்கிறது; முரண்பாடுகளற்றதாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் குறிப்பிட்ட சாதி ஆதிக்க இறுக்கத்தில் இருக்கிறது. எனவே, மாவட்டத்திற்கேற்ப செயல்திட்டத்தை வகுத்து, சாதி எதிர்ப்பு முற்போக்கு சக்திகள் செயலாற்ற வேண்டும். தலித்திடம் உள்ள சாதிப் பற்றை, அவர்களின்பாதிப்போடு ஒப்பிட்டு அணுக வேண்டும். தலித் அல்லாத சாதியைச் சேர்ந்தவர்கள் சுயசாதியை எதிர்க்கிற போது சாதியவாதிகளுக்கு கடும் நெருக்கடி உருவாகும். தமிழகத்தில் முற்போக்கு இயக்கங்களின் செயல்பாடுகளினா லும், சமூகநீதி என்கிற இடஒதுக்கீட்டினாலும் இடைநிலை சாதிகளுக்குள் பகைமை குறைந்துள்ளன. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் சாதிமாறி திருமணம் செய்து கொண்டாலும் பெரிய அளவில் எதிர்ப்பு எழுவதில்லை. ஆனால், தலித் மக்களோடு திருமண உறவு கொள்கிறபோதுதான் பெருமளவு சாதியத் தாக்குதல் நடக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களிடையே சுயசாதி மறுப்பு என்ற செயல் திட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும். பார்ப்பனியம், இந்துமதம், வேதம், சாஸ்திரம், புராணம் இவைகளின் ஊடாக மனித உணர்வுகளில் சாதி கட்டமைப்பு நிலைநிறுத்தப்பட் டுள்ளது. இந்த சாதியக் கட்டமைப்பின் வேர்களை எதிர்க்க வேண்டும். தீண்டாமை ஒழிப்போடு, அடுத்தகட்டமாக சாதி ஒழிப்பை நோக்கி செல்வோம் என்று பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் கூறுகின்றனர். சாதி ஒழிப்பு திட்டத்தோடு அவற்றின் ஊற்றுக்கண்களையும் எதிர்க்க வேண்டும். சாதிய அமைப்பின் கட்டமைப்பை ஓரளவு தொளதொளக்கச் செய்திருப்பது இடஒதுக்கீடு கொள்கைதான். சாதிய சமத்துவத்தை தாண்டி சாதியை கடக்க, சாதி மறுப்பு திருமணங்களை நோக்கிச் செல்வதை ஊக்குவிக்க வேண்டும். காவி ஆதிக்கத்தால் தமிழகத்தின் வேலைவாய்ப்பு உரிமை பறி போகிறது. அனைத்துத் துறைகளிலும்வட மாநிலத்தவரைப் புகுத்துகிறார்கள். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 2013-16 காலத்தில் தமிழகத்தில் உள்ள வருமானவரித் துறை, கலால்துறை, சுங்கத்துறையில் ஆட்கள் நியமிக்கப் பட்டனர். அதன்படி, தமிழகத்தை சேர்ந்தவர்கள் 116பேரும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் 1988 பேரும் பணியமர்த்தப் பட்டுள்ளனர். நீட் தேர்வு மூலம் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் சமூக நீதியையும், கல்விச் சூழலையும் ஒழித்து விட்டால், எளிதாக காவிகள் காலூன்ற முடியும் என்று சதி செய்கின்றனர்.
சாதியற்ற தமிழகத்தில் வர்ணாசிரமத்தை புகுத்தியது போல், தமிழகத்தை வடமாநிலத்தவரை கொண்டு வந்து சமூக நீதியை சீர்குலைக்கின்றனர்.கிராமப்புற மாணவர்கள் பயில மருத்துவக்கல்வியில் மாவட்ட ரீதியாக ஒதுக்கீடு வைத்திருந்தோம், யூனிட் முறை (வேலூரில் மருத்துவக் கல்லூரி என்றால் அந்த மாவட்டத்தை சுற்றியுள்ளவர்கள் தான் சேர்க்க முடியும்) கொண்டிருந்தோம், கிராமப்புற மாணவர் களுக்கு இடஒதுக்கீடு வைத்திருந்தோம். இவற்றை யெல்லாம் நீதிமன்றங்கள் தடுத்துவிட்டன. இடஒதுக்கீட்டை கூட ஜனநாயகப்படுத்தினோம். 50 விழுக்காட்டில் 20 விழுக்காட்டை எம்.பி.சி.க்கு ஒதுக்கினோம். மேலும் ஜனநாயகப்படுத்தும் வகையில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்தோம். இப்படிப்பட்ட சமூகநீதி கொள்கையை கொண்ட மாநிலத்தை முற்றிலும் சீர்குலைக்கிறார்கள். பல்கலைக் கழக துணைவேந்தர்களை பிற மாநிலத்தவரை கொண்டு வந்து குவிக்கிறார்கள்.தமிழகத்தில் உள்ள பினாமி அரசை பயன்படுத்தி பாஜக நுழைய சாலைஅமைக்கிறது. தமிழகத்தின் சமூகநீதி கொள்கை என்பதை விட சமூக நீதி பண்பாட்டை தகர்க்கிறது. சாதி ஒழிப்பு என்ற முற்போக்குப் பண்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பது சமூகநீதி பண்பாடு தான். பெண்மையை மதிக்கக்கூடிய, சமத்துவத்தை பேசக் கூடிய சமூகநீதி பண்பாடே சாதிகளுக்குள் சமத்துவத்தைக் கொண்டு வந்துள்ளது. சாதிய இயங்கியலையும், அதனைக் கடக்கவும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. தமிழகத்தை காவிமயமாக்கலுக்கான நடவடிக்கைகளை தடுக்கவும், அவர்களிடமிருந்து மக்களை விலக்கவும் இணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. உலகமயமாக்கலும், ஆரியமய மாக்கலும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. பன்மைத்து வத்தை அழித்து ஒருமைத்துவத்தை திணிக்கிறது. இவற்றை முறியடிப்பது என்ற இணைப்புப் புள்ளியில் அம்பேத்கரிய, பெரியாரிய, இடதுசாரி இயக்கங்கள் கைகோர்த்து நிற்கின்றன. சாதியற்ற தமிழகம், காவியற்ற தமிழகம் என்ற முழக்கத்திற்கு பின்னால் சமூகப்பணியும், அரசியல் பணியும் இணைந்து இருக்கிறது. இதை இணைந்து முறியடிப்போம்.
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில், ‘சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம்’ எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம்)
‘தீக்கதிர்’ நாளேட்டிலிருந்து
பெரியார் முழக்கம் 28062018 இதழ்