கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

இராசிபுரம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்காட்டில் ஜூன் 23, 24ஆம் தேதிகளில் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம், கருத்துக் களமாகவும், விவாத அரங்கமாகவும் சிறப்புடன் நடந்து முடிந்தது.

இந்தப் பயிலரங்கில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன் பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பங்கேற்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவனச் சிதைவு மற்றும் ஏற்பாட்டு வசதிக் குறைவு கருதி எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு முதல் முறையாக பெரியாரியல் குறித்து அறிய விரும்பு வோருக்கு முன்னுரிமை தரப்பட்டு, பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஏற்கனவே பயிலரங்கில் பங்கேற்ற கழகத் தோழர்கள் இதில் பங்கேற்காது தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் புதிய தோழர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்தார். மொத்தம் பங்கேற்ற 51 பயிற்சியாளர்களில் பெண்கள் 21 பேர் என்பது இப்பயிலரங்கின் சிறப்பாகும். கிராமத்தி லிருந்து முதல் தலைமுறையாகப் படித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் இளம் பெண் தோழர்கள் முனைப் புடன் பங்கேற்று கருத்துகளை குறிப்பெடுத்து கேள்விகளை எழுப்பி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஏற்காடு, கிளியூர் அருவிப் பகுதியில் ‘ஸ்கை ரெசிடன்சி’ அரங்கில் குளிர்ச்சியான இடையூறு இல்லாத இயற்கையான அமைதிச் சூழலில் பயிலரங்கம் நடந்தது. அலைபேசித் தொடர்புகள் ஏதும் கிடைக்கப் பெறாத பகுதி என்பதால் இரண்டு நாளும் அலைபேசியின் குறிக்கீடுகள் முற்றாக விடை பெற்றிருந்தன.

முதல் நாள் நிகழ்வு – காலை உணவுக்குப் பிறகு 9 மணியளவில் அறிமுகத்துடன் தொடங்கியது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் அறிமுக உரையைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் – அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் பேசினார். பெரியாரின் கலகங்களோடு தொடங்கிய இளம்பிள்ளை பருவம்; குடும்பச் சூழலுக்கு எதிராகப் பயணித்த அவரது குடும்ப வாழ்க்கை; குடும்பத்துக்குள்ளே அவர் உருவாக்கிய கொள்கைக் கலகம்; பணக்கார சொகுசு வாழ்க்கையை முற்றாக உதறித் தள்ளித் தொடங்கிய அவரது பொது வாழ்க்கைப் பயணம்; தலைமை தாங்கிய கட்சிகளில் அவர் நடத்திய கொள்கைப் போராட்ட வரலாறுகளை – முதல் பகுதியாகவும்; தேனீர் இடைவேளைக்குப் பிறகு பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை – சமூக நீதி பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, தனிநாடு விடுதலைக்கான இன்றைய பொருத்தப்பாடு குறித்தும் பேசினார்.

தொடர்ந்து தேனீர் இடைவேளைக்குப் பிறகு வீரா கார்த்திக், ‘கடவுள் மறுப்புத் தத்துவமும் பெரியாரும்’ என்ற அமைப்பில் புராண ஆபாசங்கள், கடவுள்கள் குறித்த கற்பனைப் புனைவுகள், கடவுள் மறுப்பு தத்துவம் குறித்து விளக்கினார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, ‘இந்துத்துவம்-பெரியார்-அம்பேத்கர்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாகப் பேசினார். பெரியார், அம்பேத்கர் இருவருமே சாதி-தீண்டாமை ஒழிப்புக்கு – இந்துமதம், பார்ப்பனியம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலக்கு நோக்கியே அவர்கள் போராட்டம் இருந்ததை அவர்களது கருத்துகள் வழியாக எடுத்துக்காட்டி,  பெரியார் – அம்பேத்கரை முறையே பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் தலைவர்களாக மட்டும் குறுக்கிப் பார்ப்பது சரியான புரிதல் அல்ல என்பதை விளக்கினார்.

பட்டியல் இனப் பிரிவினருக்கு இடஒதுக்கீட்டு எண்ணிக்கையை  வரையறுப்பதற்கு அவர்கள் குறித்த மக்கள் தொகை எண்ணிக்கை ஏற்கனவே எடுக்கப் பட்டிருந்தது – சட்டத்தில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அம்பேத்கருக்கு உதவியது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்டோர் குறித்த மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் என்பவை இல்லாத காரணத்தால், பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய முடியாத நிலையில் அம்பேத்கர் இருந்தார். ஆனாலும், எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைவதற்கும் அதன் வழியாக அவர்களுக்கான இடஒதுக்கீடு உரிமைகள் பெறுவதற்குமான வாய்ப்புகளைச் சட்டத்தில் உருவாக்கி வைத்தவர் அம்பேத்கர். அதேபோல் பட்டியல் இனப் பிரிவினருக்கு வேலை வாய்ப்புக்கான ஒதுக்கீடு மட்டும் முதலில் சட்டத்தில் இடம் பெற்றிருந்ததே தவிர, கல்விக்கான இடஒதுக்கீடு இல்லை. தொட்டிகளில் தண்ணீர் நிரப்பினால்தான் குழாய்களில் தண்ணீர் வரும் என்பதுபோல, முதலில் படித்தவர்கள் உருவானால் தானே வேலை வாய்ப்பு கிடைக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார் பெரியார்.  வகுப்புவாரி உரிமையை உச்சநீதிமன்றம் செல்லாது என்று கூறிய நிலையில், பெரியார் தமிழ்நாட்டில் நடத்திய போராட்டம் காரணமாக அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்ட போதுதான் பட்டியல் இனப் பிரிவினருக்கும் கல்வியில் இடஒதுக்கீட் டுக்கான உரிமை சட்ட வடிவம் பெற்றது என்று விளக்கியதோடு பயிற்சியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கம்

அளித்தார்.

மாலை தேனீர் இடைவேளையைத் தொடர்ந்து, மடத்துக்குளம் கழகத் தோழர் மோகன்,‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடந்தது. தோழர்களின் பங்கேற்போடு நடந்த இந்நிகழ்வின் வழியாக மூடநம்பிக்கைகளையும், ஜாதி வர்ணாஸ்ரமக் கொடுமைகளையும், நீட் திணிப்பையும் சிறப்பாக விளக்கினார்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் பயிலரங்கம் காலை 7.30 மணியளவில் தொடங்கியது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், ‘இடஒதுக்கீடு வரலாறு’ குறித்து விரிவாகப் பேசினார். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பிறகு சுப்பரயான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முத்தையா முதலியார் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது பிற்படுத்தப் பட்டோருக்கான தனி இடஒதுக்கீடாக உறுதி செய்யப்பட்டு, பிறகு படிப்படியாக இடஒதுக்கீடு கொள்கை தீவிரமாக செயல்பட்டதையும், 1935ஆம் ஆண்டிலேயே மத்திய அரசுப் பணிகளில் தமிழ் நாட்டுக்கு மட்டும் பட்டியல் இனப் பிரிவினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு அமுலில் இருந்ததையும் ‘சதந்திரம்’ கிடைத்த உடனேயே அது நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியதோடு, மத்திய அரசு நியமித்த காகாகலேல்கர் ஆணையம், மண்டல் ஆணையம், தமிழ்நாடு அரசு நியமித்த ஏ.என்.சட்ட நாதன் ஆணையம் பரிந்துரைகளையும் எடுத்துக் காட்டி, இடஒதுக்கீட்டு வரலாற்றை முழுமையாக விளக்கினார். தனியார் துறை இடஒதுக்கீட்டின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழர்- திராவிடர்’ குறித்துப் பேசினார். அரசியலில் தமிழர் அடை யாளத்தையும் பண்பாட்டில் பார்ப்பனிய எதிர்ப்புக் கான திராவிடர் அடையாளத்தையும் பெரியார் முன் வைத்ததையும், பெரியார் பேசிய திராவிடத்துக்கு எதிராக, ஒருசில அமைப்புகள் முன் வைக்கும் எதிர்ப்புகளுக்கு பதிலளித்தும், திராவிடர் அடையாளம் தொன்னாட்டில் சமஸ்கிருதப் பார்ப்பன பண்பாட்டை ஏற்க மறுத்தவர்களே திராவிடர்கள் என்ற அம்பேத்கர் தந்த விளக்கத்தையும் சோவியத் நாட்டின் மானுடவியல் ஆய்வாளர் ‘திராவிடர்’ என்று ஒரு இனம் இருந்ததை சான்றுகளோடு நிறுவியதையும் எடுத்துக்காட்டி விரிவாக விளக்கமளித்தார்.

தேனீர் இடைவேளைக்குப் பிறகு, ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், ‘உலகமயமாக்கலும் சுற்றுச்சூழலும்’ என்ற தலைப்பில் பேசினார். உலகமயமாக்கல் என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல, அதில் வளரும் நாடுகளின் வளங்களைச் சுரண்டும் ஆபத்துகளே முதன்மையானவை என்பதை சுட்டிக்காட்டி, மக்களின் சுயசார்புத் தன்மையைப் பறித்து தன்னைச் சார்ந்து நின்றே வாழ வேண்டும் என்ற பொருளாதார அரசியலுக்கு இழுத்துச் சென்று, மக்களை பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிமைகளாக்கும் ஆபத்துகளை ஏராளமான உதாரணங்களோடு சுட்டிக்காட்டினார். ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற போர்வையில் மனிதகுலத்தையே அழிக்கும் திட்டங்கள் திணிக்கப்படுகிறது மனித குலமே அழிந்த நிலையில் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. ‘வளர்ச்சி வேண்டுமா? அழிவு வேண்டுமா?’ என்ற கேள்வி நம் முன் நிற்கிறது. இரண்டில் எதற்கு நாம் முன்னுரிமை தரப் போகிறோம் என்ற கேள்வியை எழுப்பினார்.

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் நீர் மாசு, காற்று மாசு படும், ஆபத்துகளை எதிர் கொண்டிருக்கும் நமது மக்கள் உயிரைக் கொல்லும் வியாதிகளால் பாதிக்கப்படுவதை விரிவாக எடுத்துரைத்தார். பயிற்சியாளர்கள் எழுப்பிய ஏராளமான சந்தேகங்களுக்கு விரிவான விளக்கமளித்தார்.

இடைவேளை உணவுக்குப் பிறகு ‘அய்யம் போக்குதல்’ என்ற நிகழ்வு தொடங்கியது. பங்கேற்பாளர்கள் எழுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாகப் பதிலளித்தார்.

பெரியார் இயக்கம் தலித் மக்களுக்காகப் போராடவில்லை என்றும், அது பிற்படுத்தப்பட்டோருக்கான இயக்கம் என்றும், அயோத்திதாசப் பண்டிதரை இருட்டடிப்பு செய்து விட்டது என்றும், பட்டியல் இனப் பிரிவினரை பயன்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளையே பேசியது என்றும், பெரியார் இயக்கத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி, பயிற்சியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களோடு பதிலளித்தார்.

பெரியாரும் அம்பேத்கரும் பட்டியல் இனப் பிரிவினரின் குறிப்பிட்டப் பிரச்சினைகளை முன் வைத்துப் போராடவில்லை; அவர்கள் போராட்டம் இந்து மதத்துக்கு எதிராகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் தான் இருந்தது. தீண்டாமைக்கு எதிராக பெரியார் குறிப்பாக நடத்திய போராட்டமாக வைக்கம், நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் நடந்த சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தைக் கூறலாம். அதேபோல் அம்பேத்கர் நடத்திய ‘மகர்குள’ நீர் எடுப்புப் போராட்டத்தைக் கூறலாம். மற்றபடி குறிப்பான பிரச்சினைகளுக்கு என்றில்லாமல், ஜாதியை உற்பத்தி செய்யும் இந்துமதம், பார்ப்பனியத்தை முன் வைத்தே அவர்கள் போராடினார்கள் என்று விளக்கினார். நீண்ட நேரம் நடந்தது இந்த நிகழ்வு. பயிற்சியாளர்கள் பலரும் தங்களுக்கு தெளிவான புரிதல் கிடைத்தது என்று கூறினார்கள்.  தொடர்ந்து பங்கேற்ற பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இரண்டு நாள் பயிலரங்கையும் கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், நெறியாள்கை செய்து வழி நடத்தினார். புதிய  இரு பால் இளைஞர்களுக்கான இந்தப் பயிலரங்கம், சிறப்பான திட்டமிடலோடு அதன் நோக்கத்திலும் சிறந்தப் பயனை எட்டியது.

– நமது  செய்தியாளர்

பெரியார் முழக்கம் 28062018 இதழ்

You may also like...