கழகக் களப்பணியாளர்களுக்குப் பாராட்டு கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமப் பரப்புரை தொடங்கியது
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக் காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது. பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது. பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர்.
சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் கிருஷ்ணன், மனோஜ், ராஜேந்திரன் ஆகியோருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக் கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா, சரஸ்வதி, சித்ரா ஆகியோரை வாழ்த்தி பரிசுகளையும் தலைவர் வழங்கினார்.
மேலும் நேப்பாளத்தில் சர்வதேச வில்வித்தை போட்டியில் பங்குபெற்று தங்க பதக்கம் பெற்ற லக்கம்பட்டி குமார் மகன் இனியன் மற்றும் இந்திய தேச அளவிலான தங்கப்பதக்கம் பெற்ற காவை. இளவரசன் மகன் எழிலரசன், கபிலன் ஸ்டுடியோ விஜய் மகன் வளவன் ஆகியோருக்கும் கழகத் தலைவர் பாராட்டி பரசளித்தார்.
பின்னர் மக்களிடையே மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கை என்னும் மடமையை ஒழிக்கும் காவை.இளவரசனின் ‘மந்திரமா? தந்திரமா’ நிகழ்வு நடைபெற்றது. கிராமப்புற சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசித்துப் பார்த்து அறிவு விளக்கம் பெற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பயணம் குறித்த விளக்க உரை நிகழ்த்தினார்.
பயண நோக்கங்களான : 1. பெரியாரியல் கொள்களை பரப்புவது; 2. தமிழகத்தை வஞ்சிக்கும் நாசக்கார திட்டங்களை விளக்குவது; 3. பறிபோகும் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது – ஆகியவை குறித்து விளக்கி உரையாற்றினார்.
மேலும் கிராம பரப்புரை கூட்டங்களில் காட்சி படங்களை திரையிடுதல், வீதி நாடகம் , மந்திரமா தந்திரமா உள்ளிட்ட செயல்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும், எதிர் வரும் பெரியார் பிறந்த நாள் வரை வாரம் இரண்டு கிராம பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பரப்புரை பயண துவக்க விழா நிகழ்வை உக்கம்பருத்திக்காடு கிளைக் கழகத் தோழர்கள் சிறப்பாக ஏற்ப்பாடு செய்தனர்.
பெரியார் முழக்கம் 21062018 இதழ்