வாசகர்களிடமிருந்து…
ந.பிரகாசு எழுதிய ‘அய்.பி. எல்.லுக்கு தமிழ் நாட்டில் தடை கேட்டது அவமானமா’ கட்டுரை அரிய தகவல்களைத் தந்தது. யாரையும் தொடாமல் விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் இருப்பதுதான் பார்ப் பனர்கள், இந்த விளையாட்டை அதிகம் நேசிக்கக் காரணம் என்று ஆய்வாளர் இராமச்சந்திர குகா கூறியுள்ள கருத்து மிகவும் சரியானது. கிரிக்கெட்டையும் அரசியலையும் ஏன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட் போருக்கு, சூதாட்டப் புகாரில் சிக்கிய ஒரு விளையாட்டை தமிழ்நாட்டில் விளையாட அனுமதிப்பது தமிழ்நாட்டுக்கே அவமானமில்லையா என்று கட்டுரையாளர் அளித்த பதில் மிகவும் சிறப்பு.
– மணிவண்ணன், திருச்சி
உச்சநீதிமன்ற தலைமை பார்ப்பன நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ‘நிமிர்வோம்’ இதழில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது. அருணாசலப் பிரதேச ஆட்சியை மத்திய அரசு கலைத்தபோது முதல்வராக இருந்த காலிக் கோ புல்லின் 60 பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அந்தக் கடிதத்தில் ஆட்சிக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க தீபக் மிஸ்ரா உறவினர்கள் இலஞ்சம் கேட்டதையும் துணிவுடன் ‘நிமிர்வோம்’ பதிவு செய்ததற்காக பாராட்ட வேண்டும்.
– செல்வி, வில்லிவாக்கம்
உங்களுடைய உரிமைகளை எந்த ஒரு பெரிய மனிதனின் பாதங் களில் முன் வைக்காதீர்கள். உங்களுடைய சமூக அமைப்பு களைச் சீர்குலைக்கக் கூடிய அதிகாரங்களை எந்தப் பெரிய மனிதனிடமும் அளிக்காதீர்கள் என்று ஜான்ஸ்டூவர்ட் கருத்தை மேற்கோள் காட்டி புரட்சியாளர் அம்பேத்கர் கூறியிருப்பது இந்தக் காலத்துக்கு அப்படியே பொருந்துவதாக இருக்கிறது. சமத்துவத்தை மறுக்கும் சமூக முரண்பாடுகளைக் களையாமல் போனால் நம்முடைய அரசியல் ஜனநாயகத்துக்கே ஆபத்தானதாக முடியும் என்று அம்பேத்கர் தந்த எச்சரிக்கை எவ்வளவு சரியானது என்பதை இப்போது நாம் அனுபவத்திலேயே உணர்கிறோம்.
– நந்தகுமார், தூத்துக்குடி
15ஆவது நிதிக் குழுவின் கொள்கைகளால் தென்னகம் வஞ்சிக்கப்படுவது குறித்த ஆழமான பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள் கடந்த இரண்டு இதழ்களாகத் தொடர்ந்து ‘நிமிர்வோம்’ வெளியிட்டு வரு கிறது. இப்போது அரசியல் தலைவர்களும் தொலைக்காட்சி விவாதங்களிலும் இந்தக் கருத்துகள் விவாதங்களுக்கு உள்ளாகி வருவது மகிழ்ச்சி தரு கிறது. நாட்டின் பொருளாதாரம் அதற்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்த பார்வையி லிருந்து தமிழர்கள் ஒதுங்கி நிற்க முடியாது. ‘நிமிர்வோம்’ இத் தகைய ஆழமான கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட வேண்டும்.
– சரவணா, மயிலாடுதுறை
‘பெரியார் – உ.வே.சா சந்திப்பும் சொல்லாடலும்’ கட்டுரை பல வரலாற்றுத் தகவல்களை இளைஞர்களுக்கு கூறியிருக்கிறது. பெரியார் குறித்த விமர்சனங்கள் அந்தக் கட்டுரை யில் சில பகுதிகளில் இடம் பெற்றிருந்தும் ‘நிமிர்வோம்’ நேர்மையுடன் பதிவு செய்திருக் கிறது. தமிழ் அறிஞர்களிலேயே பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பாகுபாடு நிலவியதை பெரியார் எழுத்து அருமையாகப் படம் பிடித்துக் காட்டியது. பெரியாரின் ‘குடிஅரசு’ மிக விரிவான தளங்களில் பயணித்திருக்கிறது. ‘தமிழர் அன்பர் மாநாடு’ குறித்து 1933இல் ‘குடிஅரசு’ விவாதங்களை நடத்தியிருக்கிறது என்பதையும் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக நின்ற தெ.பொ. மீனாட்சி சுந்தரம் போன்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி உதவியைக்கூட உ.வே.சா. தட்டிச் சென்றார் என்பதையும் கட்டுரை சுட்டிக் காட்டி யிருக்கிறது. பெரியார் கதர் மூட்டைகளைச் சுமந்து விற்ற போது ‘மேலாடை’ இல்லாமல் மூட்டைகளோடு தொடர் வண்டியில் பயணித்திருக்கிறார் என்ற செய்தி நெஞ்சை உலுக்கியது.
– பெரியார் பற்றாளன், விழுப்புரம்
‘கீற்று’ நந்தன் பா.ஜ.க.வின் பாலியல் குற்றங்கள் குறித்த தொகுப்பு மிகச் சிறந்த ஆவணம். அந்தக் கட்டுரையைத் துண்டறிக்கைகளாக அடித்து மக்களிடம் பரப்ப வேண்டும்.
– அஜீத், காவலாண்டியூர்
கடந்த இதழில் மரணத் தருவாயிலும் பயணத்தை நிறுத்தாதவர்; பெரியார் பங்கேற்ற திரைப்பட விழா என்ற இரண்டு செய்திகளும் மிகச் சிறப்பு. உடல்நலம் குன்றிய நிலையிலும் தான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக் குப் போக வேண்டும் என்று கூறிய ‘நேர்மை’ மெய்சிலிர்க்க வைக் கிறது. பெரியார் பெரியார் தான்.
– ஜெயந்தி, சென்னை
சமயச் சடங்குகளால் கொல் லப்படும் நதிகள், வரலாற்றில் வலங்கை-இடங்கை ஜாதி மோதல்கள் – சிலை உடைப்பு – அரசியல் உள்ளிட்ட அனைத்துக் கட்டுரைகளும் பயனுள்ளதாக இருந்தன. ‘நிமிர்வோம்’ இதழுக் குப் பாராட்டுகள்.
– கார்த்திக், வேளச்சேரி
நிமிர்வோம் மே 2018 இதழ்