தேர்தலைப் புறக்கணித்தார்; இயக்கத்தால் சாதித்தார்!

‘பொதுவுடைமையரின் வருங்காலம்?’ என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் ஏன் வளராமல் போயிற்று என்ற விரிவான ஆய்வை விவாதத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது அந்நூல். கம்யூனிஸ்ட் கட்சி என்பது தேர்தல் வெற்றி தோல்விக்கானது அல்ல; அது ஒரு இயக்கம் என்பதை கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார், தோழர் தா. பாண்டியன்.

“கம்யூனிஸ்ட் கட்சி எந்த வழியிலும் எவருடன் சேர்ந்தாவது விரைவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று போராடும் கட்சி அல்ல என்பதை உணர்த்த வேண்டும். அதாவது இலட்சியத்தை நோக்கிப் பயணம் செய்வது விரிவானது. அதற்குப் பெயர்தான் இயக்கம்” என்று வலியுறுத்தும் தோழர் தா. பாண்டியன், இதற்கு உதாரணமாக பெரியாரைக் குறிப்பிடுகிறார்:

“திராவிடர் கழகத்தை அமைத்த தந்தை பெரியார், தன் இயக்கம் தேர்தலில் போட்டியிடாது என அறிவித்தவர். மூட நம்பிக்கை ஒழிப்பு உயர் ஆதிக்க சாதி எதிர்ப்பு என்பதை முக்கிய கோரிக்கைகளாக வைத்து சமுதாய சீர்திருத்த இயக்கம் நடத்தியவர். அவர், இதே தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்வது இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அதை ரத்து செய்து, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்வதை மீண்டும் சட்டத்திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்துக என்ற போராட்டத்தை நடத்தினார். அதாவது 1. நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும். 2. அதேபோல் இடஒதுக்கீட்டை சட்ட விதியில் சேர்க்க வேண்டும். இவைதான் அவரது கோரிக்கை.

இதை அடைய எழுதினார்; பேசினார்; மக்களைத் திரட்டி முழக்கம் எழுப்ப வைத்தார். அவரது கோரிக்கையை முன் மொழிவதற்குக்கூட நாடாளுமன்றத்தில் அவரது இயக்கப் பிரதிநிதிகள் இல்லை. வழி  மொழியவும் ஆளில்லை. இருந்தும், அவர் கோரிய சட்டத் திருத்தம் மக்களின் இயக்கமாக விரிவடைந்ததால், அன்றைய பிரதமர் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்; நிறைவேற்றி முடித்தார். இடஒதுக்கீடு 25 விழுக்காடு எனத் தொடங்கி தற்போது 69 விழுக்காடாக வளர்ந்துள்ளது.

இந்த சாதனையை தேர்தல் முறையைப் புறக்கணித்த திராவிடர் கழகம் செய்து முடித்திருக்கிறது என்பதை  எவராலும் மறுக்க முடியாது.”

தோழர் தா. பாண்டியன் நூலிலிருந்து

நிமிர்வோம் மே 2018 இதழ்

You may also like...