பெண்களைப் புறக்கணிக்கும் அய்.அய்.டி. நிறுவனங்கள்
மாணவர்களைவிட மாணவிகள் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அவர்களது சேர்க்கை குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
கோரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 64ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
2017இல் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதிய 1,60,000 பேரில் 30,000 பேர் மட்டுமே மாணவியர்.அதே ஆண்டில் ஐஐடி-யில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்த 10,878 பேரில் 995 பேர் மட்டும் மாணவியர். பொது தேர்வுகளில் மாணவியர் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும், மாணவர்களைவிட மாணவியர் அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஐஐடி-களில் சேரும் மாணவியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
கோரக்பூர் ஐஐடி-யில் மொத்தம் 11,653 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 1,925 பேர் மட்டுமே மாணவிகள். இது 16 சதவீதத்துக்கும் சற்று அதிகம். இந்த நிலை மாற வேண்டும். பெண்களை உயர்கல்வி படிப்புகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிகஅளவில் ஈடுபடுத்த வேண்டும். இந்த செயலை செய்யாவிடில் சமூகத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்த முடியாது. இது சமூகத்தில் ஆண்-பெண் சமத்துவத்தை கடினமாக்குவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
பெரியார் முழக்கம் 02082018 இதழ்