கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் !

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் !

15-4-2018 ஞாயிறு அன்று,ஈரோடு மாவட்டம்,
கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்.:

தீர்மானம்: 1

அ) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு ஆதாரமாகவும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்படும் காவிரிநீரை, (அளவில் குறைவாக இருப்பினும்,) கர்நாடக அரசிடம் இருந்து நிரந்தரமாகக் கிடைக்கும் வகையில் வழங்கப்பட்ட; உச்சநீதிமன்றத்தின் தீர்;ப்புக்குப் பின்னரும் சொந்த அரசியல் லாபங்களுக்காக காவிரி மேலண்மைவாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு இம்மாநாடு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.. மத்திய அரசு மேலும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக கவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைத்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திப் போராடிய அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், கலைத் துறையினருக்கும் இம்மாநாடு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள்மீது புனையப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிபந்தனை இல்லாமல் திரும்பப் பெற வேண்டுமெனத் தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது

இ) தமிழ்நாட்டின் வேளாண்மையையும், நீர் ஆதாரங்களையும், கனிம, இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் திட்டங்களான சாகர்மாலா, அணு உலைகள், ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, பன்னாட்டு பானங்கள் தயாரிப்பு, இரசாயன ஆலைகள் போன்ற நாசகாரத் திட்டங்களையும் திணிக்கும் அரசுகளுக்கு எதிரான போராட்டங்களை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களைப் பாதுகாக்கும் போராட்டங்கள் என்ற புரிதலோடு அனைத்து தரப்பினரும் பங்கேற்குமாறு வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம்: 2
இந்தியத் துணைக்கண்டத்தின், இந்து மதத்தின் பெரும் சமூகத் தீங்கான படிநிலை ஜாதிய அமைப்புக்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் பல தத்துவப் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களயும், மக்கள் போராட்டங்களையும் நடத்தியவரும், இந்தியாவின் அரசியல் சட்ட வரைவுக்குழுத் தலைவராகவும், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் விளங்கியவரும் ,எல்லா இந்துக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றாததையும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைக்காததையும் காரணங்களாகக் கூறி மத்திய சட்ட அமைச்சர் பதவியை, விட்டு விலகியவருமான புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு, ஜாதி ஒழிப்பைத் தன்வாழ்நாள் பணியாகக் கொண்டு செயல்பட்ட பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மாவட்டமான ஈரோட்டில் சிலை ஏதும் இல்லை என்பது பெரும் அவமானகரமானதாகும். எனவே கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு முழு உருவச்சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்முயற்சியில் அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் ஒருங்கிணைத்து புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு சிலை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 3
அ) அண்மைக்காலமாக தலித் மற்றும் சிறுபான்மைப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதும், பாலியல் கொலைகளுக்கு ஆளாவதும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுத்திட பெண்களுக்கு கல்விக்கூடங்களில் அடுத்தக் கல்வியாண்டிலேயே தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) எண்பது ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் பெண்குழந்தைகளுக்குக் கும்மி, கோலம், கோலாட்டம், வீணை, பாட்டு, நாட்டியம் ஆகியவற்றைச் சொல்லிக் கொடுப்பதை விட்டுவிட்டு மல்யுத்தம், குஸ்தி, தேகப்பயிற்சி, உயரம் தாண்டுதல் போன்றவற்றைக் கற்றுக் கொடுங்கள் என்று கூறியதை நினைவூட்டி – அவ்வறிவுரையைத் தற்போதைய சூழலுக்கேற்ப கராத்தே, குங்பூ, கால்பந்தாட்டம், சிலம்பாட்டம் போன்றவற்றையும் இணைத்துக் கொண்டு பின்பற்றுமாறு பெற்றோர்களையும், பெண்களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4:
இந்திய நாட்டின் மக்கள் தொகையின் சரிபாதி பெண்கள் இருக்கின்றனர், நியாயப்படி பெண்கள் நாட்டின் ஆட்சி நிர்வாக பொறுப்புகள் அனைத்திலும் 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆயினும் தற்போது பாராளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு கோரும் மசோதா வெகு காலமாகத் திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டிப்பதோடு அம்மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:
பெண்களைப் போகப் பொருளாக சித்தரிக்கும் போக்கினை மதங்களும், ஆணாதிக்க சிந்தனைகளும் தொடந்து செய்து வருகின்றன. அதன் விளைவாகவே பெண்கள் மீதான சீண்டல்களும், பாலியல் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.NCRB – National Crime Records Bureau 2016-ன் அறிக்கைப்படி 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வன்புணர்வு வழக்குகளின் எண்ணிக்கை 39,040. கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 66,000. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு காரணமான மதச்சிந்தனைகள், ஆணாதிக்கச் சிந்தனைகளை அடியோடு அழித்தொழிக்கும் பணியில் கரம்கோர்க்க சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் இம்மாநாடு அழைக்கிறது. அத்தோடு பாலியல் வன்புணர்வுக்கு ஆதரவாக பேசும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

காஷ்மீரில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி ஆசிபா குறித்து பேசும்போது, ஆசிபா கொலையில் பாகிஸ்தான் சதி உள்ளது என்று மத்தியப் பிரதேச பா.ஜ.க தலைவர் நந்தகுமார் சிங்கும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும் என்று சந்திரபிரசாத் கங்கா என்ற பா.ஜ.க அமைச்சரும், இதுபோன்ற சம்பவங்களை பேசிப் பேசி அதை மேலும் பிரபலமாக்காதீர் என்று மீனாட்சி பா.ஜ.க எம்.பி யும், இதைப்பற்றி பேசிப் பெரிதுபடுத்தினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையுமென்று கூறிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகிய இந்துமத வெறியர்கள் கூறியிருப்பதற்கு இம்மாநாடு வன்மையாக கண்டனங்களைத் தெரிவிக்கிறது.

பாலியல் வன்புணர்வுகளில் உயிரிழந்த பெண்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் இம்மாநாடு தெரிவிக்கிறது.

Image may contain: 5 people, people sitting

You may also like...