2000 துண்டறிக்கைகளை வழங்கி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்
‘மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது நமது எதிர்காலம்’ என்ற தலைப்பில் தமிழக மாணவர்களின் பறிபோகும் கல்வி, வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னையில் பிப். 24 அன்று காலை விவேகானந்தர் கல்லூரி, இராணி மேரி கல்லூரி, எம்.ஜி.ஆர் ஜானகி, எஸ்.ஐ.வி.டி ஆகிய கல்லூரி மாணவர்களிடையே துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது. மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவக்குமார், தோழர்கள் யுவராஜ், காவை கனி, ராஜேஷ், பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். 2000 துண்டறிக்கைகள் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.
இராமராஜ்ய இரதயாத்திரை – பெரியார் சிலை உடைப்புகளுக்கு எதிர்வினையாற்றிய சென்னை, மயிலாடுதுறை, சேலம் தோழர்கள் கைது!
‘‘இராமராஜ்ய இரதயாத்திரை’ தமிழகத்துக்குள் நுழைவதை எதிர்த்து, காவிப் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பு தமிழக எல்லையில் மறியல் போராட்டம் நடத்தி, பல்லா யிரக்கணக்கில் கைதாகி, தமிழ் மண் மதக் கலவரத்துக்கு அனுமதிக்காது; இது பெரியார் மண் என்பதை இந்தியா முழுமைக்கும் உணர்த்தியது. எச்.ராஜா என்ற பார்ப்பனர், திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை நியாயப்படுத்தி, தமிழ் நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டதைத் தொடர்ந்து, பெரியார் சிலை உடைப்புகள் தொடங்கிய நிலையில் அதற்கு எதிர்வினைகளும் எழுந்தன. சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் வர்ணாஸ்ரமத்தை அடையாளப்படுத்தி, தாங்கள், ‘பிராமண பிறப்பில்’ வந்தவர்கள் என்று அடையாளப்படுத்தும் ‘பூணூலை’ கழகத் தோழர்கள் சில பார்ப்பனர்களிட மிருந்து அறுத்து எதிர்வினை யாற்றினர்.
இதில் இராவணன், உமாபதி, இராஜேஷ், பிரபாகரன் ஆகிய நான்கு தோழர்கள் காவல்துறையில் தாமாகவே முன்வந்து சரணடைந்தனர்.
மயிலாடுதுறையில் இராமராஜ்ய யாத்திரை, பெரியார் சிலை உடைப்பு களுக்கு எதிர்வினையாக ‘சூத்திரன் தவம் செய்யக் கூடாது’ என்பதற்காக அவன் தலையை வெட்டிய ‘ராமன்’ (வால்மீகி இராமாயணம் அப்படி கூறுகிறது) படத்தை செருப் பாலடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘சூத்திரர்’களை இழிவு செய்யும் இராமர் யாத்திரையை தமிழகம் ஏற்காது என்று முழக்கமிட்டு கைதானார்கள். சென்னை மற்றும் மயிலாடுதுறை தோழர்கள் கைது செய்யப்பட்டு முறையே சென்னை, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு, இப்போது நிபந்தனை பிணையில் விடுதலையாகியுள்ளனர். ஆனால் பெரியார் சிலையை உடைக்கத் தூண்டிய எச்.ராஜா மீது எந்த வழக்கையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை.
இராமனை செருப்பாலடித்ததாக 14 தோழர்கள் கைது செய்யப்பட் டனர். மீத்தேன் எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கண்டன ஆர்ப்பாட் டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றதால் அவரும் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மகேஷ், நடராசன், மகாலிங்கம், இளையராஜா, செந்தில் குமார், நாஞ்சில் சங்கர், விஜயராகவன், தில்லைநாதன், கார்த்திக், திராவிடன் ஜாஹிர், கவிஞர் முருகதாசன், சுப்பு மகேஷ் (தமிழர் உரிமை இயக்கம்), ராஜசேகரன் (மக்கள் அரசு கட்சி) ஆகிய 14 தோழர்கள் கைது செய்யப் பட்டனர்.
பூணூல் அறுப்பைக் கண்டித்து நடிகர் எஸ்.வி. சேகர் தலைமையில் மயிலாப்பபூரில் பார்ப்பனர்கள் பொதுக் கூட்டம் நடத்தினர். இராமன் படம் செருப்பால் அடிக்கப்பட்டதை எதிர்த்து மயிலாடுதுறையில் வணிகர்களை கடையடைப்பு செய்யு மாறு பா.ஜ.க.வினர் மிரட்டி கடைகளை மூட வைத்தனர்.
இராமன் படத்தை அவமதித்ததால் கழகத் தோழர் நாஞ்சில் சங்கர் மரணமடைந்துவிட்டதாக முகநூல் வழியாக பொய்யான தகவல்களை போலிப் படங்களை தயாரித்து பரப்பியதோடு, தோழர்களுக்கும் பேராசிரியர் ஜெயராமன் அவர்களுக்கும் கொலை மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். இது குறித்து ‘சைபர் கிரைம்’ துறையிலும் காவல் துறையிடத்திலும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட் டுள்ளது.
வடநாட்டு வர்ணாஸ்ரம இராமனை தமிழ்மண் ஏற்காது என்பது கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. பெரியார் திடலில் ‘இராவண லீலா’வை 1974ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் நடத்தியபோது இராமன், சீதை உருவங்கள் எரிக்கப்பட்டன. அப்போது தொடரப்பட்ட வழக்கில் மணியம்மையார் உள்ளிட்ட தோழர்களை விடுதலை செய்த நீதிமன்றம், இது வழக்கமாக பெரியார் பின்பற்றும் போராட்ட வடிவம் தான் என்று தீர்ப்பளித்தது. பெரியார் மட்டுமின்றி, சைவத்தை ஏற்ற தமிழறிஞர்களான மறைமலையடிகள், பூரணலிங்கம் பிள்ளை போன்ற தமிழறிஞர்களும் இராமாயணத்தை விமர்சித்துள்ளனர். இராஜகோபாலாச் சாரியே ‘இராமன்’ கடவுள் அல்ல; அவன் ஒரு இதிகாசப் பாத்திரம் என்று கூறியதோடு, இராமன் மீது விமர்சனத்தையும் முன் வைத்துள்ளார்.
அதேபோன்று சேலத்தில் சங்கரமடம் தாக்கப்பட்ட வழக்கில் நங்கவள்ளி கிருஷ்ணன், மனோ, இராஜேந்திரன் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு 8 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு சேலம் சிறையிலிருந்து, மார்ச் 27 அன்று நிபந்தனை பிணையில் விடுதலையானார்கள். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களுடன் சென்று சிறை வாயிலில் வரவேற்றார்.
பெரியார் முழக்கம் 29032018 இதழ்