சிறு, குறு தொழில்களை நசுக்கிய ‘ஜிஎஸ்டி’ வரி
மோடியால் புதியதாக பிரசவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யால் இன்று தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான பொருட்களுக்கு 18ரூ முதல் 28ரூ வரி விதித்ததாகும், இதனால் தொழில் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. தொழில் நகரமான கோவையில், சிறு, குறு தொழில்களை நடத்திவந்த முதலாளிகள், தொழிற்சாலைகளை மூடி வேலையில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 20 பேருக்கு மேல் வேலையில் அமர்த்தி நிறுவனம் நடத்தி வந்த கிருஷ்ணகுமார் என்பவர் தற்போது சாலை ஓரத்தில் இட்லி விற்று கொண்டு இருக்கிறார். இதே போல் எஞ்சினியரிங் கம்பெனி வைத்து நடத்தி வந்த பாண்டியன் என்பவர், தற்போது ஒரு எஞ்சினியரிங் கம்பெனியில் எந்திரத்தை இயக்கும் கூலித்தொழிலாளியாக தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
ஜி.எஸ்.டி-யால் தொழில் முதலீடு பெருகும் என கூறப்பட்ட நிலையில், 2017-18ஆம் நிதியாண்டில் தொழில் முதலீடு ரூ. 11 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் ஜி.எஸ்.டி.-யால் தமிழகத்திற்கு வரி வருவாய் குறைத்துள்ளதாகவும், தமிழகத்திற்கு தான் மத்திய அரசின் நிதி மிக குறைவாக கிடைக்கிறது என நிதித்துறை செயலாளர் கூறியுள்ளார். வரி வருவாய் குறைந்ததால் தமிழக நிதி நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜனவரியில் சட்டசபையில் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பொருட்களின் விலை குறையும், மக்கள் பயன் பெறுவார்கள் என்று பாஜக தலைவர்கள் தினமும் அறிக்கை விட்டு வந்தனர். ஆனால் இன்று ஒரு வருடம் முடித்த நிலையில் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதில் சில ஒரு சில பொருட்களின் வரி குறைப்பால், விலை குறையவில்லை.
உதாரணமாக ஜிஎஸ்டிக்கு முன்பு சிமெண்ட் வரி சுமார் 40ரூ, ஜிஎஸ்டிக்கு பின்பு 28ரூ ஆனால் இன்று வரை சிமெண்ட்டின் விலை குறையவில்லை. இதன் மூலம் முழுக்க முழுக்க கார்ப்பரேட்களின் கொள்ளை லாபம் ஈட்டவே ஜிஎஸ்டி என்பது நிரூபணமாகி வருகிறது. சிறு, குறு தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மூல பொருட்களின் வரி 5ரூ இருந்து 18ரூ உயர்த்தியதால் மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு 18ரூ ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும். இதனால், பொருட்களை சந்தை செய்ய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக மோட்டார் பம்ப் தயாரிப்பதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருந்தது. இப்போது, குஜராத்தில் மோட்டார் பம்பு தயாரித்து மிக குறைந்த விலையில் சந்தைப்படுத்துகின்றனர். இங்குள்ள நிறுவனங்களால் அவர்களிடம் போட்டி போட முடியவில்லை. தமிழ்நாட்டில் ஜிஎஸ்டிக்கு முன்பு அதிகபட்ச வரி 14.5ரூ ஆனால் தற்போது 28ரூ. சமீபத்தில் ராஜினாமா செய்த மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ஜிஎஸ்டி அதிகபட்ச 28ரூ வரி என்பதை குறைக்க வேண்டும் என்று தற்போது கூறுகிறார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் கடைசி நுகர்வோருக்கு எந்த பயனும் இல்லை. கடைசி நுகர்வோரின் சட்டைப்பையில் இருக்கும் சிறு தொகையைக்கூட பறித்து கார்ப்பரேட்களுக்கு வழங்குவதே ஜிஎஸ்டியின் பிரதான வேலையாக இருந்து வருகிறது. ஜிஎஸ்டியின் மூலம் மறைமுகவரியே அதிகரித்திருக் கிறது. மறைமுக வரி அதிகரிக்கும் போது, அது எந்த விதத்திலும் நுகர்வோருக்கு பயன் அளிக்காது. மாறாக நுகர்வோரை ஒட்டசுரண்டவே செய்யும். ஒரு வளமான பொருளாதார வருமான மறுபகிர்வுக்கு எப்போதும் நேர்முக வரிகளைத்தான் அதிகம் பயன்படுத்த வேண்டும். மாறாக ஏழை, பணக்காரர் என எல்லோருக்கும் ஒரே விதமான மறைமுக வரிகளை அதிகரிக்கும்போது அது சமூகத்தில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். அந்த வேலையைத்தான் தற்போது ஜி.எஸ்.டி. மிகத் தெளிவாக செய்து வருகிறது. இந்தியாவில் 2017ஆம் ஆண்டு உருவான ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவிகிதத்தை ஒரு சதவிகித பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் சென்று சேர்ந்திருக்கிறது என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. இதனை உறுதிபடுத்தும் வகையில் ஜிஎஸ்டி அமலாக் கத்தால் சிறு, குறு தொழில்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இதே வேளையில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. ஆக மோடி அறிவித்த ஜிஎஸ்டி அறிவிப்பால் பிறந்திருக்கும் புதிய இந்தியா என்பதும் வளர்ச்சி என்பதும் சாதாரண மக்களுக்கானது அல்ல. மாறாக கார்ப்பரேட்களுக்கானது.
பெரியார் முழக்கம் 19072018 இதழ்