எழுத்தாளர் ஏகலைவன் – வரலாறுகளை அறிந்து கொள்ளவும்

“எழுத்தாளர் ஏகலைவன் அவர்களின் இரண்டு பதிவுகள் குறித்தே எனது இப்பதிவு”  – தலைவர் தோழர் கொளத்தூர் மணி

முதல் பதிவு ஏகலைவன் தி.மு.க. வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு எழுதியது….

காவல்துறையின்கெடுபிடிகள் …….
*பரோலில் வந்தவருக்கு நியாயங்களும், உரிமைகளும் மறுக்கப்படுகிறது;.*
————————————————

இராஜீவ் படுகொலையில், தம்பி அருப்புக்கோட்டை இரா.பொ.இரவிச்சந்திரனைச் சேர்க்கப்பட்டு , ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கு சரியானபடி புலனாய்வு செய்யப்படவில்லை என்று நாம் பலமுறை சொல்லி வருகிறோம்.

அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரோல் வழங்கியுள்ளது. பரோலுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கட்டும். அவரை சந்தித்து நலன் கேட்க வருபவர்களிடமும் நெருக்கடிகளையும், கடும் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது காவல் துறை. வீட்டைச் சுற்றி அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போல மற்ற ராஜீவ் படுகொலையில் தண்டனை பெற்று பரோலில் வந்தவர்களுக்கெல்லாம் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. இரவிச்சந்திரனுக்கு மற்றவர்களைப் போல ஊடக வெளிச்சமும் இல்லை, மற்ற கைதிகளுக்கு கிடைக்கும் நியாயமான ஆதரவும் இல்லை. அது ஏனோ?

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவுக்கு கீழ்படிந்து நடப்பது அனைவரின் கடமையே. ஆனால் அதற்கு மேலும் காவல் துறையினர் கடுமை காட்டுவது நல்லதல்ல. பத்திரிக்கையாளர் ஏகலைவன் இவரை சந்திக்க நேற்று அருப்புக்கோட்டைக்குச் சென்ற போது அவருக்கு அனுமதியும் இல்லை. நேரடியாக கண்ட காட்சிகளை குறிப்பு வாயிலாக எனக்கு அனுப்பியுள்ளார்.

அது வருமாறு.

வணக்கம் ஐயா.
நேரில் கண்டவைகளை வைத்து எழுதுகின்றேன். இரவிச்சந்திரனுக்கான பரோல் ‘இறுக்கத்துடனே’யே நகர்கிறது. 100 போலீஸ் பாதுகாப்பு. சுழற்சி முறையில் 50 பேர். நான்கடுக்குப் பாதுகாப்பு. சந்திக்க செல்லும் நபர்கள் பெட்ரூமில் அமர்ந்து கொண்டு பேசினாலும் உள்ளே நின்றுகொண்டு வீடியோ பதிவு.

பார்க்க வருபவர்களை விசாரணை என்ற பெயரிலேயே ஒரு அச்சுறுத்தல், சுற்றி நான்கு தெரு முனையிலும், வீட்டிற்கு முன்னும் பின்னும் கண்காணிப்பு கேமரா. வாசலில் டிடெக்டர் மெஷின். மூன்று இடத்தில் பெயர் பதிவு, விசாரணை. வீட்டிற்குள் நுழையும் போதும் பெயர் பதிவு விசாரணை…

இவ்வளவும் இதற்கு முன் பரோலில் வந்த மற்றொருவருக்கு இல்லை. மிகச் சாதாரணமாக 1000 பேர் வரை சென்று பார்த்து வந்தார்கள். அங்கே வாசல் முன்பாக ஒரு பத்து போலீஸார்தான் இருந்தார்கள். பேட்டி, செல்போன் பதிவு கூடாது என கேட்டுக்கொண்டார்கள். அவ்வளவுதான். அதாவது அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள். அப்பாவிகள், நேர்மையானவர்கள், சுத்தமானவர்கள். ஆபத்தில்லாதவர்கள்…என்றாக காட்டப்பட்டார்கள். அதற்கேற்ற லாபி அங்கே இருந்தது.

ஆனால் இரவிக்கு அது முற்றிலும் இல்லை. அவரை புலிப்போராளியாக, பயங்கரவாதியாக, ஆபத்தானவர்களாக சித்தரிக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். தயவு செய்து இந்த போக்கையாவது உடைக்கப் பாருங்கள். பொது வெளியில் பேசுங்கள், சாதி இன ரீதியாககூட வேண்டாம். நீதிப்படியாகவும் செய்யுங்கள். உங்களால் தான் முடியும். அங்கே நிலைமை மோசமாக தான் உள்ளது.

தவிர, என்னை புத்தக தொகுப்பாளர் என்பதால் (தெரிந்து கொண்டார்களாம்) சுத்தமாக மறுத்துவிட்டார்கள். செய்தியாளர்கள் வேறு, எழுத்தாளர் பதிப்பகத்தார் வேறு என எவ்வளவு விளக்கியும் மறுத்து விட்டார்கள். வேதனையோடு திரும்பி விட்டேன். எனக்கு பரவாயில்லை. போகட்டும்.
தயவு செய்து இரவியின் நிலைமையை கொஞ்சம் மாற்றுங்கள். அவருக்கான லாபி சுத்தமாக இல்லவேயில்லை. உங்களால்தான் முடியும். பொது வெளியில் கொஞ்சம் பேசுங்கள் ஐயா.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
– ஏகலைவன்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன். – 09/03/2018

அடுத்த பதிவு.

முதலில் உள்ள பதிவு, இராஜீவ் கொலை வழக்கில் வாழ்நாள் சிறையில் இருக்கும் இரவிச்சந்திரன் இரண்டாம் முறையாக பரோலில் வந்துள்ளநிலையில், அவரைக் காண செல்வோரிடம் காட்டப்படும் காவல்துறையின் கெடுபிடிகள் குறித்தது.

இரண்டாம் பதிவு, 13-3-2018 அன்று ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தனது இணையர் சங்கரின் நினைவாய் தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வில், அந்நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததைக் குறிப்பிட்டு “நீங்கள் நிகழ்வுக்குஅனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிப் போவதற்கு நான் கோழையல்ல… #பெரியாரின்பேத்தி” என்று குறிப்பிட்டதைக் குறித்தது.

இவை இரண்டு மட்டுமின்றி, இராஜீவ் வழக்கில் வாழ்நாள் சிறையில் இருக்கும் நளினி குறித்து அவர் தொகுத்த நூலில் அந்த எழுவரும் விடுதலை பெறுவதற்கு உதவுவதற்கு மாறாக, சிறையில் உள்ளோருக்குள் ஏதோ பெரும் கருத்து முரண் உள்ளதாக மிகைப்படுத்தி எழுதப்பட்ட முறை ( எனது விமரிசனத்தை அந்நூலுக்கு நான் எழுதிய அணிந்துரையிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதனாலோ என்னவோ அந்த நூலின் படிகூட எனக்குக் கொடுக்கப்படவில்லை )

அடுத்து வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு இல்லவே இல்லை; வைக்கம் போய்வந்ததை வைத்துக் கொண்டு, திராவிடர் இயக்கத்தவர்கள் மிகைப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதாக ஏகலைவன் முன்னர் எழுதிய ஒரு பதிவு…..

ஆகியவைதான் இப்போதாவது இவற்றைக் குறித்து எழுதியாக வேண்டும் என என்னை எண்ண வைத்தன.

முதலில் இரவிச்சந்திரன் பரோல் கெடுபிடிகள் பற்றி…

அவர் பதிவைப் படித்ததும் இரவிச்சந்திரனைச் சந்திக்க உள்ள நெருக்கடிகளை விடவும், பேரறிவாளனை விமரிசிப்பதிலேயே அவரது கவனம் குவிந்து கிடப்பதை உணரமுடியும்.

பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரை சந்திக்க சென்ற நானும் இதே கெடுபிடிகளை சந்தித்தேன்.

பேரறிவாளனுக்கும்தான் ஐம்பது காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். சந்திக்க சென்ற எல்லோரையும் மெட்டல் டிடெக்டர்கள் வைத்து சோதித்தார்கள்.

எங்களது கைபேசிகளை வாங்கி வைத்துக் கொண்டார்கள். முகவரி விவரம் கொண்ட ஆதாரங்களை சரிபார்த்த பின்னர் எங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டு பதிவேட்டில் உள்நுழையும்போதும், வெளியே வந்தபோதும் கையெழுத்தும் பெற்றார்கள்.

இரண்டாம் வாரம் சென்றபோது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களை அனுமதிக்கவில்லை.

இரவிச்சந்திரனாவது மதுரை மீனாட்சி கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பேரறிவாளன் சிறை சென்றபின்னர் இறந்துபோன அவரது தாத்தா, பாட்டியின் நினைவிடம் உள்ளூரிலேயே இருந்தும்கூட அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பரோலில் இருந்த காலம் முழுதும் பேரறிவாளன் வீட்டின் வாயில்படியைக்கூட தாண்டி வரவில்லையே.

இராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் திரு.பொ.இரவிச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த உத்தரவின் அடிப்படையில் 05.03.2018 முதல் 15 நாட்கள் பரோல் விடுப்பு பெற்று மதுரை மத்திய சிறையில் இருந்து அருப்புக்கோட்டையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு இப்போது வந்துள்ளார்.

அவர் தனக்கு விடுப்பு வழங்க வேண்டும் என கோர ஆதரவாக ஏற்கனவே பேரறிவாளன் பெற்ற விடுப்பினை மேற்கோள் காட்டியுள்ளதுடன் பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கலாம் என ஒப்புதல் தெரிவித்து தமிழ்நாடரசின் தலைமை வழக்குரைஞர் அளித்த அறிக்கையினை ஆதாரமாகவும் கொண்டே வழக்கில் வாதிட்டு விடுப்பு பெற்றுள்ளார். இதுகுறித்த தீர்ப்பின் பத்திகள் வருமாறு….

3. The learned council for the petitioner also relied upon the legal opinion given by the learned Advocate General of Tamilnadu in respect of a similarly placed prisoner suffering similar sentence and the opinion is that it is open to the Tamilnadu Government to consider the case of the convict under the Tamilnadu Rules. It is also represented that the said prisoner was latter granted leave on the recommendation of the Tamilnadu Government and therefore, this petitioner is also entitled to equal treatment and he must be granted leave.

7. We are of the view that the prisoners are also entitled to certain rights, which are essential basic human rights, needed and to be exercised for planning their life. This prisoner is also entitled to equal protection of law and equal treatment on par with the prisoner, who is similarly placed in the same case. Therefore, the impugned order is set aside.

தனிமைச் சிறையில் 27 ஆண்டுகளைக்கடந்து எழுவரும் சிறைபட்டுள்ள நிலையில், மாநில அரசோடு நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடு இருப்பினும் எழுவரையும் விடுதலை செய்வதில் தொடர்ந்து அரசு எடுத்துவரும் முயற்சிகள் மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் காத்திருப்பு குறித்து உலகறியும்.

இந்நிலையில் எழுவர் விடுதலையைப் பயன்படுத்தி தொடர்ந்து தவறான, அவதூறு நிறைந்த, விஷமத்தனமான கருத்துக்களை ஏகலைவன் பரப்பி வருவதை இனியும் நாகரீகக்குறைவு என்பதாக கருதிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது.

யாரும் சந்திக்கமுடியாமல் உள்ள நளினியின் தனியான சூழலைப் பயன்படுத்தி நளினியின் கொடூர சிறை வாழ்வையும் நளினி பிரியங்கா சந்திப்பையும் மூலதனமாக கொண்டு அதனை புத்தகமாக்கினார் ஏகலைவன். தற்போது அப்புத்தகத்திலிருந்து ஏகலைவன் பெயர் நீக்கப்பட்டு புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது என அறிகிறோம்; ஏனென்று தெரியவில்லை.

அதன் பின்னர் இரவிச்சந்திரனைப் பயன்படுத்தி புத்தகத்தை வெளியிடுவதாக நினைத்துக்கொண்டு பல்வேறு உண்மைக்கு மாறான தகவல்களை உளறிக் கொட்டினார்.

குறிப்பாக, காவல்துறை சுற்றிவளைப்பின்போது உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாது என்ற தங்கள் இயக்க கொள்கைக்கேற்ப தன்னைத்தானே மாய்த்து கொண்ட “திருச்சி சாந்தன்” என்ற போராளி குறித்து, அவர் மாத்தையாவின் கையாள் என்பது போலவும் “ரா” உளவாளி என்பதாகவும் பதிவிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மேலும் தலைமை ஆணையிட்டிருந்தால் இராஜீவைக் கொலை செய்திருப்பேன் என்பதுபோல இரவிச்சந்திரனை புலிப் போராளியாகக் காட்டியதும், இரவிச்சந்திரனின் பெயரில் புலிகள் குறித்து பாடம் எடுப்பதும் ஏகலைவன்தானே.

மேலும் ஏகலைவனின் தொடர்ச்சியான நோக்கம் மற்றும் செயல்பாடுகள் என்பன எப்படியாவது பேரறிவாளன் மீது அவதூறு பரப்பிட வேண்டும் என்பதாகவே இருந்து வருகிறது. பலமுறை இதனை உணர்ந்த போதும் இதனை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டோம்.

இருப்பினும் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த மேலே குறிப்பிட்டுள்ள வழக்குரைஞர் கே.எஸ்.இராதகிருஷ்ணனின் பதிவுதான் இனியும் இதுகுறித்து எனது கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது ஏகலைவனின் இந்த போக்கை ஆதரித்தது போலாகிவிடும் என்பதால்தான் அவரது உண்மையான நோக்கத்தை சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பரோலில் வெளிவந்துள்ள இரவிச்சந்திரனை அவர் சந்திக்கமுடியாமல் போனது குறித்து தனது கருத்தைப் பதிவு செய்ய அவருக்கு முழு உரிமை உண்டு. அதேநேரம் அவர் இரவிச்சந்திரனை சந்திக்க முடியாததற்கு பேரறிவாளன் எங்ஙனம் பொறுப்பாக முடியும்? ஏன் பேரறிவாளனை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட வேண்டும்? அதனை எவ்வாறு ஏற்க முடியும்?

பேரறிவாளன் பரோலில் வெளிவந்தபோது அவரை வீட்டைவிட்டு வெளியில் செல்லவும் அனுமதிக்கவில்லை. என் போன்றோர் இதுகுறித்து யாரிடமாவது பேசவேண்டுமா என கேட்டபோது அதனை அடியோடு மறுத்துவிட்டார் பேரறிவாளன். தோழர் முத்தரசன் போன்றோர் பார்க்க சென்று அனுமதி மறுக்கப்பட்டபோதும்கூட அதுகுறித்து அரசிடம் ஏதும் பேசி அவர்களுக்கு சங்கடம் தரவேண்டாம் என்றே கேட்டுக்கொண்டுள்ளார்.

இரவிச்சந்திரனின் பரோல் இறுக்கத்தை தளர்த்துவது, பரோல் நீட்டிப்பிற்கு முயல்வது என சிந்தித்து செயலாற்றாமல் பேரறிவாளனைக் குறிவைத்து அவதூறு பரப்புவது என்ற ஒற்றை நோக்கத்தோடு ஏகலைவன் செயல்படுவது ஏன்?

பரோல் விவகாரத்தில் இவ்வாறான குழப்பத்தை ஏற்படுத்துவதோடல்லாமல் சிறையில் உள்ளவர்களைப் பயன்படுத்தி அவர்களது பெயரில் கட்டுக்கதைகளை எழுதும் ஏகலைவனின் செயலை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

எடுத்துக்காட்டாக இரவிச்சந்திரனின் புத்தகத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல திருச்சி சாந்தன் குறித்த கட்டுக்கதை மட்டுமல்லாமல் கடற்புலி போராளியான லெப்டினண்ட் கேனல் டேவிட் கடலில் ஏற்பட்ட விபத்தில் வீரமரணம் அடைந்த நிலையில் குண்டு வெடிப்பின் மூலம் படகு சிதறியதால் இறந்ததாக ஒரு பொய்யான தகவலையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்கள் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பொய்வழக்கு புனையப்பட்ட நிலையில் தானும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக வழக்கினை எதிர்கொண்டு 8 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசம் அனுபவித்த இரும்பொறை அவர்களை அவரது குடும்பத்தின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அந்த புத்தகத்தில் பதிவிட்டிருப்பது மன்னிக்க முடியாதவைகள் ஆகும்.

26 நாட்கள் ஒன்றாக இருந்தாலே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு. 26 ஆண்டுகளாக எவ்வித போக்கிடமும் இன்றி சிறைக்கொடுமையை அனுபவித்து வரும் இவர்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்படுதல் வியப்புக்குரியதல்ல.

இவர்களின் விடுதலை மீது அக்கறை, ஆர்வம் இருப்பின் அவ்வேறுபாடுகளைக் களைந்து இடைவெளியை சரிசெய்து ஏகலைவன் உதவி செய்திருக்க வேண்டுமே தவிர விரிசலை பெரிதாக்கி அதனை வியாபாரம் ஆக்குவதை ஒருக்காலும் ஏற்க முடியாது.

தனது புத்தகம் முழுவதும் “அந்த ஒருவர், அறிவானவர், புத்தியானவர், புனிதர்” என்றெல்லாம் இவர் வார இதழ்களில் கிசு கிசு எழுதுவது போல் எழுதியிருப்பது நமக்கு புரியாத ஒன்றல்ல.

கடந்த 27 ஆண்டுகளாக தமிழகத்தில் தன் கால்படாத இடங்களே இல்லை எனும்படி ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் அற்புதம்மாளை பார்த்தவுடன் அவரது மகன் பேரறிவாளன் அனைவரின் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாத ஒன்று.

அவரது ஓட்டமும் உழைப்பும் கண்ணீரும்தான் இந்த வழக்கை, இந்த வழக்கில் இருப்பவர்களின் துன்பத்தை வெளிக்கொணர, உயிர்ப்போடு வைத்திருக்க உதவியிருக்கிறது.

எங்களைப்போன்றோர் இவ்வழக்கு குறித்து கூடுதல் கவனம் செலுத்த அவர் காரணமாக இருக்கிறார்.

இப்போது நீதிமன்றத்தின் வாயிலாக இரவிச்சந்திரன் பரோல் விடுப்பு பெற உதவியாக இருந்த முக்கியமான ஆவணம் பேரறிவாளன் பரோல் தொடர்பில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் தந்த அறிக்கையே என்பதை மறந்துவிடலாகாது.

அந்த அறிக்கை பெறுவதற்கு பேரறிவாளனின் தாயார் உழைத்த உழைப்பு அவரது குடும்பத்தினர், வழக்குரைஞர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பங்களிப்பு மற்றும் இவை எல்லாவற்றையும்விட தனது தந்தையின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு 1 1/2 ஆண்டுகளுக்கு மேலாக அவரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் – சரக சிறைத்துறை துணைத்தலைவர் விடுப்பு கோரிக்கையை நிராகரித்த பின்னரும் நீதிமன்றத்தை நாடாமல் இறுதிவரை அரசை அணுகி விடுப்பு பெறுவது என்ற பேரறிவாளனின் நிதானமான அணுகுமுறையால் கிடைத்த அவ்வறிக்கைதான் இன்று இரவிச்சந்திரன் விடுப்பிற்கும் பயன்பட்டது என்பதை மறந்துவிடலாகாது.

அதேபோல்தான் இன்றைய இரவிச்சந்திரன் பரோல் நாளை இவ்வழக்கின் இன்னுமொரு சிறைவாசிக்கும் உதவியாக இருக்கும்.

அதுபோலவேதான் இவர்களின் விடுதலையும்..

எனவே சிறையிலிருப்போரைப் பயன்படுத்தி ஏகலைவன் செய்யும் இதுபோன்ற கீழான பரப்புரைகளை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.

இறுதியில் புனிதராகிய பேரறிவாளன் எனும் பச்சோந்தியின் தயவால் இரவிச்சந்திரன் என்கிற பாவிக்கும் ஒருவகையில் சித்தி கிடைத்துள்ளது அல்லவா?

மேலும், மரணதண்டனைக்கு எதிரான உறுதிமிக்க தொடர்ச்சியான அற்புதம்மாள் மற்றும் பேரறிவாளனின் போராட்டம் அவருக்கு மட்டும் பயன் தரவில்லை. மாறாக மூவரின் தண்டனை குறைப்பிற்கும் உதவியது என்பதையும், 2016 ஆம் ஆண்டு சூன் 11 ஆம் தேதியன்று அற்புதம்மாள் ஏற்பாட்டில் நடந்த கோரிக்கைப் பேரணிகூட எழுவர் விடுதலையைத்தான் முன்நிறுத்தியதே அல்லாமல் ஒரு தனி நபரின் பெயரை முன்னிறுத்தி நடக்கவில்லை என்பதையும் மறந்துவிடலாகாது.

அடுத்து, தோழர் கவுசல்யா பற்றிய பதிவு ……

தனக்கு விருப்பமான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்காக, தனது அன்பு காதலன் படுகொலைக்கு ஆளானநிலையில் ஒரு 19 வயதுள்ள இளம்பெண், துணிச்சலாக நின்று, தனது பெற்றோர், தாய்மாமன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியத்தை உறுதியாக பதிவு செய்ததோடு, தீர்ப்பில் தனது தாயும், தாய்மாமனும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், மேல்முறையீடு செய்து அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தருவேன் என்று உறுதியுடன் நிற்பவர் கவுசல்யா.

தனது இழப்புக்கு ஈடாக இழப்பீட்டுத் தொகை வந்துவிட்டது; மத்திய அரசுப் பணிவாய்ப்புக் கிடைத்துவிட்டது; மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று அவைகளோடு மனநிறைவடையாமல், தன் மாமனார் குடும்பத்துக்கு துணை நிற்பதோடு, அப்பகுதி சிறுவர், இளையோருக்கு கல்வி வழிகாட்டவும், பறை போன்ற கலைப் பயிற்சிகள் அளிக்கவும், ஜாதி ஒழிப்புப் பரப்புரை செய்யும் நோக்கோடும் அறக்கட்டளை நிறுவியதை ஊக்குவிக்க வேண்டிய அரசும் காவல்துறையும், நிகழ்வுக்கான அனுமதியை மறுத்தனர். உயர்நீதி மன்றத்தை அணுகி அனுமதிபெற்று அக்கூட்டத்தை நடத்தினார் கவுசல்யா.

அதைபற்றிக் குறிப்பிடும்போது “நீங்கள் நிகழ்வுக்குஅனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிப் போவதற்கு நான் கோழையல்ல… #பெரியாரின்பேத்தி” என்று கூறினார். ஏன் டாக்டர் அம்பேத்கரை, அயோத்திதாச பண்டிதரை, ரெட்டைமலை சீனிவாசனை, எம்.சி.ராஜாவை, அய்யா வைகுண்டரைக் குறிப்பிடவில்லை என கடும் கோபத்தோடு கேள்வி எழுப்புகிறார் ஏகலைவன். நல்லவேளை கன்னட பெரியாரைப் போல அல்லாமல், மராட்டிய அம்பேத்கரை ஏற்றுக்கொண்டு விட்டாரே ‘சுத்த’ தமிழன் ஏகலைவன் என்பதில் நமக்கு மகிழ்ச்சிதான்.

1920களில் இருந்தே 144 தடையாணையை மீறிப் போராடியதும், 1924இல் வைக்கத்தில் முதல் சிறைதண்டனை முடிந்து வெளியே வந்ததும், நாடு கடத்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாத தண்டனை பெற்றதும், 1938இல் இந்தியை எதிர்த்துப் போராடி மூன்றாண்டு சிறைத் தண்டனைப் பெற்றதும், 1948ஆம் ஆண்டின் இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டமும், 1956இல் அரசியல் சட்டத்தை எரித்தால் முன்றாண்டு சிறைத் தண்டனை என சட்டம் இயற்றப்பட்ட பதினைந்தாம் நாளில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்ததும், தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபட எரிப்பு, தேசியக் கொடி எரிப்பு என பெரியாரின் போராட்டங்கள் குறித்து, ஏகலைவனைப் போல முகநூலில் இருந்து வரலாற்றை அறிந்து கொள்ளாமல், நூல்களில் படித்து வரலாற்றினை அறிந்த கவுசல்யாவுக்கு பெரியார் நினைவுக்கு வந்திருக்கலாம். அரசின் தடையாணையை எதிர்கொள்ளுவதற்கு எடுத்துக்காட்டாக பெரியாரைக் கூறியதற்கு ஏன் ஏகலைவனுக்கு இவ்வளவு கோபம்? இதற்கு ஏன் “வர்ர கிரகமெல்லாம்….” எனக் கடித்துக் குதறுகிறார் என்பதுதான் நமக்கு புரியாத புதிர்.

ஒரு எழுத்தாளர் என்பவர் வரலாறுகளை அறிந்து கொள்ளும் தேவை குறித்து இனிமேலாவது ஏகலைவன் யோசிப்பதும், எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெழுதுவது குறித்து மீளாய்வு செய்வதும் அவருக்கும், சமுதாயத்துக்கும் நல்லது.

You may also like...