ஆண்டாளும் ‘தேவதாசி’ மரபும்
‘ஆண்டாள்’ தேவதாசி மரபைச் சார்ந்தவராக இருக்கலாம் என்று கவிஞர் வைரமுத்து, ஆய்வாளர் ஒருவர் கருத்தை மேற்கோள் காட்டியதற்காக வைணவப் பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து போராடிய காட்சிகளை தமிழகம் பார்த்தது.
கவிஞர் வைரமுத்து கூறிய கருத்தில் மாறுபாடு இருந்தால் அதை ஆதாரங்களோடு மறுக்கலாம்; விவாதங்களும் உரையாடல்களும் நடத்தலாம். ஆனால், ‘ஆண்டாள்’ குறித்தோ அல்லது ‘வேதமதம்’ குறித்தோ எவரும் விமர்சிக்கக்கூடாது என்பதும், அது இந்துக்களுக்கு விரோதம் என்றும் ஜீயர்கள் வன்முறை மிரட்டல்களில் இறங்குவதும்தான், இவர்கள் பேசும் ‘சகிப்புத் தன்மை’ என்பதன் இலக்கணமா என்று கேட்கிறோம்.
‘ஆண்டாள்’ என்பதே ஒரு கற்பனை என்று வைணவப் பார்ப்பனர் களின் அரசியல் குரு இராஜகோபாலாச்சாரியார் எழுதிய கட்டுரையை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். ‘திரிவேணி’ என்ற வைணவர்களுக்கான இதழே இந்தக் கட்டுரையையும் 1946ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறது. ஜீயர்கள் இதற்கு என்ன பதிலைக் கூறப் போகிறார்கள்?
பக்தி இலக்கியங்கள்தான் தமிழை வளர்த்தன என்று அவ்வப்போது தமிழ்நாட்டின் பக்தி மேடைகளிலிருந்து குரல்கள் ஒலித்து வருகின்றன. இலக்கியம் என்றாகிவிட்ட பிறகு, இலக்கிய ஆய்வுகளுக்கும், அவை உட்பட்டாக வேண்டும். ஆனால் ஆய்வுகளுக்கு உட்படுத்துவதே ‘மத எதிர்ப்பு’ என்றால், பக்தியைப் பரப்பும் பாடல்களை இலக்கியத்திலிருந்து துண்டித்துவிட வேண்டும். இலக்கியங்களும் ‘பக்தி புனிதங்களும்’ எப்படி ஒன்றாக முடியும்?
சங்க இலக்கியங்கள் பழங்கால தமிழர்களின் வாழ்நிலையைப் படம் பிடிப்பதாக தமிழறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளார். சங்கப் பாடல்கள் எவற்றிலும் கடவுளை வாழ்த்தும் பாடல்கள் இருந்ததில்லை. கடவுள் வாழ்த்து என்பது தமிழர் மரபில் இருந்ததில்லை என்பதே சங்கப் பாடல்களிலிருந்து கிடைத்திடும் உண்மை. சங்கப் பாடல்கள் அதன் உள்ளடக்கம் மற்றும் பாடல் வரிகளின் எண்ணிக்கை அளவு கொண்டு தொகுக்கப்பட்ட காலத்தில் தான். ‘கடவுள் வாழ்த்துப் பாடல்கள்’ அதில் சேர்க்கப் பெற்றுள்ளன.
“சங்கப் பாடல் பொருள் வகையாலும் பாடலடிகளின் அளவைக் கொண்டும் தொகுக்கப் பெற்ற காலத்தில் பாடிச் சேர்க்கப் பெற்றனவே கடவுள் வாழ்த்துப் பாடல்கள். ஆகவே இவற்றை சங்கப்பாடல்களுடன் ஒருங்கு வைத்து எண்ண இடமில்லை” – என்கிறார், சங்ககாலத் தமிழரின் வழிபாடுகள் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை. (நூல்: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ‘சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும்’)
பார்ப்பனர்களின் ‘வேதப் பண்பாடு’ சூழ்ச்சியாக ஊடுருவி தமிழர் மரபுகளை பார்ப்பனியமாக்கிய நிலையில் பக்தி இலக்கியங்களை வேதப் புனிதமாக்கியது பார்ப்பனியம்.
‘தேவதாசி மரபை’ புனிதமாகப் போற்றியதும் பார்ப்பனர்கள்தான்; அந்த மரபு இழிநிலையுற்று புரோகிதர்கள் ‘பெரிய மனிதர்களின்’ பாலியல் வெறிக்கு ‘தேவதாசி’கள் பலியாக்கப்பட்டபோது, தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்தது. அந்த சட்டத்துக்கு இராஜாஜியும், சத்தியமூர்த்தியும், சங்கராச்சாரியும் எதிர்ப்பு தெரிவித்த வரலாறுகளை மறந்துவிட்டு இப்போது ‘தேவதாசி’ என்பது இழிவானது என்று பார்ப்பனர்கள் பேசுவது இவர்களின் இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது.
(இந்த இதழில் ‘ஆண்டாள்’ ‘தேவதாசி’கள் குறித்த சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.)
நிமிர்வோம் பிப் 2018 இதழ்