‘வந்தே மாதரம்’ வேண்டாம்!
நீதிமன்றங்கள் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் போல கருத்துகளை தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. தங்கள் முன்வரும் வழக்கு விசாரணையின் வரம்புகளைக் கடந்து கருத்துகளை வழங்கும் ‘உபதேச மேடைகளாக’ நீதிமன்றத்தை மாற்றி விடுகிறார்கள். மண்டல் பரிந்துரை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பட்டியல் இனப்பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டைத் தடை செய்து, வழக்குக்கு தொடர்பில்லாத பிரச்சனையில் தலையிட்டு தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கோயிலுக்கு வரக் கூடிய பக்தர்களின் “ஆடை ஒழுங்கு” குறித்து தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணைக்கும் இந்தத் தீர்ப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கல்வி நிலையங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வாரம் ஒரு நாள் “வந்தேமாதரம்“ பாடலைப் பாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு வந்த வழக்கு “வந்தே மாதரம்“ எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது என்பதாகும். ஒரு தேசத்தில் தேசபக்தியை வளர்ப்பதாகக் கருதப்படும் ஒரு பாடல். எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதற்கே நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் ஒரு வழக்கறிஞர் குழு அமைத்து ஆராயும் நிலையில் தான் நாட்டில் நீதிமன்றமே வலியுறுத்தும் ‘தேசபக்தி’ பாடலின் நிலை இருக்கிறது.
இந்தியாவின் தேசிய கீதமாக ஜனகனமன பாடல் வங்க மொழியில் இருக்கிறது. இந்தியாவின் அரசமைப்புச் சட்டப்படி தேசியக் கொடி உண்டு. தேசிய கீதம் உண்டு. ஆனால், தேசியப் பாடல் என்று ஒன்று கிடையாது. 1870ம் ஆண்டு வங்க எழுத்தாளர் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘ஆனந்த மடம்‘ என்ற நாவலில் இடம் பெற்றுள்ள பாடல் இது. அரசியல் நிர்ணய சபையிலேயே இப்பாடல் குறித்து. ஒருமித்தகருத்து உருவாகாத நிலையில் அரசியல் நிர்ணய சபைத் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத், ‘ஜனகனமண’ பாடலுக்கு சமமான உரிமை வந்தே மாதரம் பாடலுக்கு உண்டு என்று ஒரு அறிக்கையை சமர்ப்பித்தாரே தவிர, அரசியல் நிர்ணயசபையில் விவாதிக்கப்படவே இல்லை. அல்லாவைத் தவிர வேறு எவரையும் வணங்காத இஸ்லாமியர்கள் இந்தப் பாடலை ஏற்கவில்லை. 1938ம் ஆண்டிலேயே சென்னை மாகாண சட்டசபையில் இப்பாடல் பாடப்பட்ட போது இஸ்லாமிய உறுப்பினர்கள் எழுந்து நிற்க மறுத்ததை ‘குடி அரசு’ பத்திரிக்கை பதிவு செய்துள்ளது. 18ம் நூற்றாண்டில் வங்கத்தை ஆண்ட ஒரு முஸ்லீம் சுல்தான் ஆட்சிக்கு எதிராக இந்து இளைஞர்களை ஆயுதப் புரட்சிக்கு அழைக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டது வந்தேமாதரம். அது மட்டுமல்ல. பிரிட்டிஷ் ஆட்சியினரை இந்துக்களின் நண்பர் என்றும் அந்த நூல் கூறுகிறது. வந்தே மாதரம் பாடலை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், எம்.என்.ராய் போன்ற வங்காளிகளே ஏற்கவில்லை. இரவீந்திரநாத் தாகூர், காந்தி, நேரு போன்றோர் வந்தே மாதரம் முழுப் பாடலையும் ஏற்க முடியாது. வேண்டுமானால் பிரச்சனைகள் இல்லாத முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடலாம் என்றனர். மதப் பகையைத்தூண்டிவிடும் ஒருபாடலுக்குள் சிலவரிகளைமட்டும் தேடி தேசப் பக்தி பாடலாக்க வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. பெரியாரின் குடிஅரசு‘விடுதலை’எடுகளும் இதை எதிர்த்தது கடுமையாக இயக்கங்களையேநடத்தின. மதச்சார்பின்மைக்கு எதிரான வந்தேமாதரத்தை ஏற்க முடியாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தேன் கூட்டைக் கலைப்பது போன்றதேயாகும்.
வந்தே மாதரத்தை மீண்டும் துவக்குவது மதப் பகைமைக்கே வழி வகுக்கும்.
நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்