”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”
”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”
திருப்பூர் இராயபுரத்தில் 12.03.2018 மாலை 6 மணியளவில் மகளிர் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.மாநாட்டிற்கு தோழர் பார்வதி தலைமையேற்றார்.தோழர் சரண்யா வரவேற்புரையாற்றினார்.
முதல் நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் யாழினி,யாழிசை,அமுதினி ஆகியோரும் மாணவர்கழகத்தின் வினோதினி,வைத்தீஸ்வரி, சுதா,மணிமொழி,கனல்மதி ஆகியோர் பெரியார் இயக்கப்பாடல்களை பாடினார்கள்.
தொடர்ந்து கோவை நிமிர்வு கலையகத்தின் அதிரும் பறையிசை மேடையில் துவங்கியது. பறை இசையின் தொன்மை,புகழ் ஆகியவற்றின் விளங்கங்களுடன் அதன் தேவையையும் நடனத்துடன் கூடிய விளக்கமாக நிகழ்த்தியது பொதுமக்களின் கரவொலியுடன் பேராதரவை பெற்றது.
மாணவர்கழகத்தின் காருண்யா அவர்கள் மகளிர் தினம் குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார்.அடுத்து பகுத்தறிவு வழக்காடு மன்றம் நடைபெற்றது. கருத்துச்செறிவுடன் நடந்த விவாதக்களத்தில் வாதங்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க்கப்பட்டது.
மாலை நிகழ்விற்கு தலைமையேற்ற தோழர் பார்வதி அவர்கள் பெரியாரியல் தன் வாழ்வில் கொடுத்த தன்நம்பிக்கையையும், துணிச்சலையும் எடுத்துரைத்தார்.
தோழர் பசு.கவுதமன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மாநாட்டில் நடைபெற்றது.இரண்டு ஜாதி மறுப்புத் திருமணங்களும் மாநாட்டில் சிறப்பு நிகழ்வாக நடந்தது.
கருத்துரை வழங்கிய சென்னைத்தோழர் ராஜி அவர்கள்,குடும்பம், கற்பு,தாய்மை ஆகியவை பெண்களை எப்படி அடிமைப்படுத்துகின்றன என்பதை எளிமையாக பெரியாரிய கோணத்தில் இயல்பாக கூறினார்.அடுத்து பேசிய தோழர் சிவகாமி அவர்கள் மாநாட்டிற்கான திட்டமிடல்,வீதி வசூல்,மாநாட்டு பணிகளில் கழக மகளிரின் ஈடுபாடு,பங்களிப்பு ஆகியவற்றை விவரித்தார்.
சிறப்புரையாற்றிய தோழர் சுந்தரவள்ளி அவர்கள், பூணூல் அறுத்த தோழர்களுக்கு வாழ்த்துக்களும்,மதவாதிகளுக்கு எச்சரிக்கையும் என அதிரடியாய் பேச்சை துவங்கி விரிவாக பெரியாரியலையும், பெண்கடவுள்களுக்கும் பாலின பாகுபாடு உண்டென்பதையும்,ஆண்டாள் பிரச்சனையில் தமிழகத்தின் எதிர்வினை போதாது என்பதையும் பதிவு செய்தார்.
நிறைவுரையாற்றிய தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 1930களிலேயே பெரியாரின் பெண்விடுதலைக் கருத்துக்களை சுட்டிக்காட்டிப் பேசினார்.தனித்து வாழும் பெண்களின் சமூக ஏற்பு,உரிமைகள் குறித்து பேசிய தலைவர் அவர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்த மகளிருக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இறுதியாக தோழர் வசந்தி அவர்கள் நன்றியுரையாற்றினார்.தோழர்களுக்கு நினைவுப்பரிசுகளாக பெரியாரிய புத்தகங்கள்,தோழர் பசு.கவுதமன் எழுதிய நூல்,பெண் ஏன் அடிமையானாள் ஆகியவை வழங்கப்பட்டன.மாநாட்டில் துண்டேந்தி வசூல் செய்ததில் பொதுமக்கள் அளித்த தொகை 3550.(ரூபாய் மூவாயிரத்து ஐநூற்றி அய்ம்பது மட்டும்).
மாநாட்டு பணிகளை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.