நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் ! காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா?
நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் !
காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா?
(24.02.2018) கோவையில் ஆர்.எஸ்.எஸ்.சின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரத அதிவக்த பரிஷத் எனும் அமைப்பும்,அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவும் இணைந்து நடத்தும் மாநில வழக்கறிஞர் 2வது மாநாட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி துவக்கி வைத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளவிருக்கிறார் என்கிற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்ர் கோவையில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ABVP மாநாட்டில் பங்கேற்றவர் என்ற செய்தியை அறிய வரும்போது நமக்கு மேலும் பெரும் அதிர்ச்சியே ஏற்படுகிறது.
இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்றதன்மைக்கு இது எதிரான செயலாகும்.இந்திய அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியே இப்படி ஒரு மதவாத அமைப்பின் நிகழ்ச்சியை துவங்கி வைப்பது நீதித்துறையின் மத சார்பற்றதன்மையையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயலே ஆகும்.
முன்பு பெங்களூருவில் கர்நாடக மாநில அகில பாரத அதிவக்த பரிஷத் அமைப்பு நடத்திய பெண்கள் மாநாட்டை நீதிபதி ரத்னகலா என்பவர் துவங்கி வைத்து சிறப்புரையாற்றி இருக்கிறார்.
மேலும் ஆர்.எஸ்.எஸ் வழக்கறிஞர் பிரிவின் கர்நாடக மாநிலச்செயலாளராக ஓய்வு பெற்ற நீதிபதி எ.சந்தோஷ் ஹெக்டே என்பவர் செயலாற்றி வருகிறார்.
இப்படி ஆர்.எஸ்.எஸ்சின் காவிச் சிந்தனை உள்ள நீதிபதிகள் எப்படி நடு நிலையோடும், அனைத்து மக்களுக்கும் மத சார்பற்ற தன்மையுடன் நீதி வழங்குவார்கள் என்பது சந்தேகத்திற்கிடமானது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி திரு சந்துரு அவர்கள் 16.02.2018 அன்று தமிழ் நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் ”நீதிபதிகளும் தங்களது அலுவலக மேஜைகளைக் கிட்டத்தட்ட ‘மினி கோயில்’ களாகவே மாற்றியுள்ளதையும் தவிர்க்க வேண்டும்” என்றும் ”அரசமைப்புச் சட்டத்தின் ஆரம்ப வரிகளில் கூறப்பட்ட மதச்சார்பற்ற குடியரசு என்பதை அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் உணர வேண்டும்” என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகங்களில்,அரசு அலுவலக வளாகங்களில் சட்டவிரோதமாக கட்டப்படும் இந்துமத கோயில்களை அப்புறப்படுத்த வேண்டிய கடமையிலும், விநாயகர்சதுர்த்தி என கூறிக் கொண்டு சட்டம் ஒழுங்கையே சீர் குலைக்கும் மதவாதிகளை தண்டிக்கும் அதிகாரத்திலும்,அரசு அலுவலகங்களில் சட்டவிரோத இந்துமத வழிபாடுகளை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள நீதிபதிகளே இப்படி இந்துமதவாத அமைப்புகளின் நிகழ்சிகளில் பங்கேற்றால் இவர்கள் எப்படி மத சார்பற்ற வகையில் சட்டத்தை, நீதியை நிலைநாட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பது?
சட்டவிரோத செயல்களை தடுக்க நீதித்துறையைத்தான் நாடவேண்டி உள்ளது அப்படி இருக்க இங்கு நீதிபதிகளே இப்படி இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்தால் நாம் நீதி வேண்டி எங்கு செல்வது?
உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.சின் நிகழ்சியை துவங்கி வைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் அரசமைப்புச் சட்டத்தின் உறுதிப்படுத்தும் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதும் ஆகும்.இது அனைத்து மதங்களை சேர்ந்த மக்களின் நீதித்துறையின் மீதான நம்பிகையை தகர்க்கும் செயலாகும்.
எனவே, இம்மாநாட்டில் கலந்துகொள்வதை நீதிபதி சேஷசாயி தவிர்க்கவேண்டும் எனவும், உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி இவரது முன்நடவடிக்கைகளை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
தமிழகத்தின் மதசார்பற்ற சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டியதும் அவசியமானதொன்றாகும்.