பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

மதவெறியைத் தூண்டும் வகையில் பேசிவரும் எச். இராசாவைக் தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – பேராவூரணி பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்.

பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எச். ராசாவைக் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேல் “திரிபுரா மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த, புரட்சியாளர் லெனின் சிலையை, தற்போது அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் உடைத்தெரிந்திருக்கும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உலகில் தலைசிறந்த தலைவர்களின் சிலைகளை எல்லா நாடுகளும் அமைத்துப் போற்றி வருகிறது. இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகளின் சிலை உலகெங்கும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவுத் தந்தைப் பெரியாரின் சிலை உலகெங்கிலும் அமைக்கப்பட்டு போற்றப்படுகிறது. சமூகத்தில் சிறந்த சிந்தனைகளை போற்றுவதும் அச்சிந்தனை வளர்வதற்கு உழைப்பதும் நாகரீகம் கொண்ட சமூகத்தின் கடமை. ஆனால் தங்கள் கருத்துக்கு எதிராக உள்ள கருத்துக்களையெல்லாம் அழித்துவிடத் துடிப்பது சர்வாதிகாரம் கொண்ட போக்காகும். புரட்சிக்கும் வன்முறைக்கும் வேறுபாடு தெரியாதவர்கள், புரட்சிக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுகிறார்கள். இது நாகரீக வாழ்வைப் பின்னோக்கி இழுக்கும், சனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும். அதே போல் தமிழகத்தில் தந்தைப் பெரியாரின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று தனது மதவெறி கருத்தை வெளியிட்டுள்ள பா.ச.க.வின் எச்.இராசாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தந்தைப் பெரியாருக்கு எதிராகவும் கலவரத்தைத் தூண்டும் விதமாக கருத்துத் தெரிவித்து வரும் இராசாவை இது வரை தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை? தமிழக அரசின் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டால் தமிழக நலன்களும், தமிழர் பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக பா.ஜ.க. தங்கள் கட்சியில் உள்ள இராசாவின் வன்முறைப் பேச்சுக்களை கண்டித்து தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக பேராவூரணியில் ஆவணம் சாலை முக்கத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தைச் சேர்ந்த ஆறு.நீலகண்டன், இந்தி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இராசமாணிக்கம், சித்ரவேலு, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கருப்பையா, வேலுச்சாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் மஜிது, கோவி.நீலகண்டன், திராவிடர் விடுதலைக் கழகம் தா.கலைச்செல்வன், விடுத​லைச்சிறுத்​தைகள் கட்சியின் எஸ்.எஸ.​மைதின், ஆயர் தா.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்தனர். எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தியும், பா.ஜ.க. அரசின் சனநாயக விரோத செயல்பாடுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். நிகழ்வில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Image may contain: one or more people and people standing

You may also like...