முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து சமூக நீதிக்கு மற்றுமொரு பேரிடி
மருத்துவக் கல்வி விஷயத்தில் தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, இப்போது ஓசையில்லாமல் இன்னொரு துரோகத்தை செய்திருக்கிறது.
நடப்பாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது மிக கடுமையாக கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள்(மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27ரூ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும். ஆனால், நடப்பாண்டில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் 50ரூ அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 8000க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றை நிரப்பும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27ரூ, பட்டியலினத்தவருக்கு 15ரூ, பழங்குடியினருக்கு 7.5ரூ என மொத்தம் 49.5ரூ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை மறுத்துள்ளது. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த 2160 மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய முதுநிலை மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சதி; சமூக அநீதியாகும்.
மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் 27ரூ ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பில் மட்டும் 27ரூ இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 08032018 இதழ்