கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் 10022018
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் !
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவிகளின் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளித்து விழா நடத்துவதைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன்று மதியம் 2.00 மணிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாள் : 10.02.2018 சனிக்கிழமை.
நேரம் : மதியம் 2.00 மணி.
இடம் : கருப்பூர்,சேலம்.
சகோதரி நிவேதிதை 150 ரதயாத்திரை – 2018 எனும் பெயரில் மதவெறி காவிகள் கல்வி நிலையங்களில் நுழைவதை அனுமதிக்கலாமா?ஏற்கனவே விவேகனந்தர் பெயரை வைத்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்குள் நுழைந்த இந்துத்துவவாதிகள் இப்போது விவேகானந்தரின் சீடர் நிவேதிதா பெயரை கையில் எடுத்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்க்கு மற்ற மதத்தவருக்கு இப்படி வாய்ப்புகளை இவர்கள் வழங்குவார்களா?
கல்வி நிலையமா?காவி நிலையமா?அதுவும் தந்தை பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ரதயாத்திரை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஜ.கவின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் போன்ற காவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துவதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.மத சார்பின்மையை வலியுறுத்தும் அரசியல் சட்டம் உள்ள நாட்டில் அனைவருக்கும் பொதுவான கல்வி நிலையத்தில் காவிகளின் நிகழ்சியை நடத்துவது மத சார்பின்மைக்கு எதிரானது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பதிவாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் முதுநிலை மாணவர்கள் ஒவ்வொரு துறையிலிருந்தும் தலா 10 பேரும், ஆராய்ச்சி மாணவர்கள் 5 பேரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்றும்,ஒவ்வொரு மாணவரும் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பகிரங்கமாக சுற்றறிக்கை விடுவது கல்வி நிலையத்தை காவிமயமாக்கும் முயற்சியே.இது மிகவும் ஆபத்தான போக்காகும்.
மேலும் ரதயாத்திரை வரும் போது மாணவர்கள் வரிசையில் நின்று வரவேற்க்கவேண்டும் என்றும்,ரத யாத்திரை வரும் வழியில் மாணவர்கள் பூக்களை தூவி வரவேற்பளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக அறிகிறோம்.கல்வி பயிலும் மாண்வர்களை இது போன்ற மத விழாக்களில் உயர் பதவிகளில் இருக்கும் பொறுப்பு மிக்க பேராசிரியர்களே உத்தரவுகளைப்போட்டு,சுற்றறிக்கை விடுத்து கட்டாயப்படுத்தி பங்கேற்கச் செய்வது என்பது காவிகளின் மதவெறிக்கு மாணவர்களை பலியாக்கும் செயலே.
பல்கலைக்கழகத்தின் இப்போக்கைக் கண்டித்து இன்று நடைபெற உள்ள கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மத சார்பின்மைக்கு ஆதரவான அமைப்புகள் ஆதரவு தெரிவித்து தமது கண்டனங்களை பதிவு செய்து இந்த ஆபத்தான போக்கினை தடுத்து நிறுத்த அணி திரளுமாறு திராவிடர் விடுதலைக்கழகம் அழைக்கிறது !