உயர்கல்வி படிக்கச் சென்றால் மரணம்தான் பரிசா? – தமிழ்நாடு மாணவர் கழக துண்டறிக்கை
தமிழக மாணவர்களே!
தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்வி படிக்கச் செல்லும் நமது மாணவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்கள்காட்டும் ‘பாகுபாடு’களாலும், ‘அவமதிப்பு’களாலும், ‘அழுத்தங்’களாலும் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.
தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ‘எம்.டி.’ மேல் பட்டப் படிப்பு படிக்கச் சென்ற திருப்பூர் மாணவர் சரத் பிரபு, தனது அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார் என்ற செய்தி நமது நெஞ்சை பிளக்கிறது. உயர் கல்வி பெற்ற ஒரு மருத்துவர் வரப் போகிறார் என்று அந்தக் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக் கனவு சிதைந்து போய் நிற்கிறது.
இதேபோல்தான் புதுடில்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ உயர் மருத்துவக் கல்வி நிறுவனத்துக்கான தேர்வை 2016இல் எழுதி, தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான திருப்பூர் சரவணன், கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டார். நிர்வாகம் முதலில் தற்கொலை என சாதித்தது. விசாரணையில் கொலை என்பது உறுதியானது. மகனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பெற்றோர்கள் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள்.
குடிசை வீட்டில் வறுமைச் சூழலில் மருத்துவராகும் கனவுடன் வாழ்ந்து பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற ‘தலித்’ சகோதரி அனிதா ‘நீட்’ எனும் நடுவண் ஆட்சி திணித்த தேர்வினால் கனவு சிதைந்து விட்டதே என்று உயிரைப் பலியாக்கிக் கொண்டார்.
மத்திய அரசு நிறுவனமான அய்தராபாத் பல்கலைக் கழகத்துக்கு உயர் கல்வி பயிலச்சென்ற முத்துக்கிருட்டிணன் என்ற தமிழகத்தைச் சார்ந்த தலித் மாணவர் பாகுபாடுகள், அவமதிப்புகளைத் தாங்க முடியாமல் தனது உயிரை விலையாகக் கொடுத்தார். இது நமது தமிழ் நாட்டின் நிலை.
அதே பல்கலைகழகத்தில் ரோகித் வெமுலா என்ற ஏழை தலித் மாணவரும் தனது ஏழைத் தாயை தவிக்க விட்டு பார்ப்பன நிர்வாகம் தந்த அவமானம் தாங்காது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இப்படி அய்.அய்.டி., எய்ம்ஸ், இன்னும் மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மரணத்துக்கு யார் காரணம்?
அங்கே பேராசிரியர்கள், நிர்வாகிகள்,பார்ப்பனர்களாகவே இருப்பதும், அவர்கள் நமது சமூகத்தின் மீது காட்டும் வெறுப்பும் பகையுமே காரணம்.
சொன்னால், என்னப்பா, ஜாதி பேசுகிறாய்? என்று நினைத்துவிடாதீர்கள்.
வரலாற்றைப் பார்த்தால் உண்மை புரியும்.
‘மனு சாஸ்திரம்’ என்ற கொடுமையை சமூகத்தின் சட்டமாக்கி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்று இழிவுபடுத்தி, நமது சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக படிப்பதற்கே தடை போட்ட வரலாற்றை மறந்து விட முடியுமா?
இப்போது நமது சகோதர சகோதரிகள் உயர் படிப்புப் படிக்க வருவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தங்கள் அதிகாரத்தைக் கொண்டு தடுக்கிறார்கள். அதுவே நமது மாணவர்களின் மரணம் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்!
- 2005-2008ஆம் ஆண்டில் கான்பூர் அய்.அய்.டி.யில் தற்கொலசெய்து உயிர்ப்பலியான தலித் மாணவர்கள் 7 பேர்.
- உயர்கல்விக்கான பாடத் திட்டம் – ஊதியம் – நிர்வாகம் உள்ளிட்ட அனைத்திலும் நடுவண் ஆட்சி தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு, மனு சாஸ்திரத்தை மறக்காத பார்ப்பனர்களின் முழுமையான ஆதிக்கத்தில் உள்ள குழுவிடம் ஒப்படைத்துவிட்டது. இவர்களைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் எவருக்கும் கிடையாது.
- மாணவர்களின் ஆய்வு வழிகாட்டியாக (Guide) இந்த நிறுவனங்களில் இருக்கும் பேராசிரியர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். தங்களிடம் ஆய்வுக்கு வரக்கூடிய மாணவர்கள் தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்றால் அவ்வளவுதான்; கதை முடிந்தது.
- உயர்கல்வித் துறையில் ‘தலித்’, பழங்குடிப் பேராசிரியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு 22.5. ஆனால் இதுநாள் வரை இங்கே பணியாற்றும் தலித் பேராசிரியர்கள் 5.03 சதவீதம் மட்டும்தான். எவ்வளவு கொடுமை பார்த்தீர்களா?
நாம் உரத்து முழங்குவோம்!
- அய்.அய்.டி., எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நடக்கும் மரணங்களுக்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
- தலைமை நிர்வாகி ‘டீன்’, மாணவர்களுக்கு வழிகாட்டும் (Guide) பேராசிரியர்கள் ஆகியோரும் இதற்குப் பொறுப்பாக்க வேண்டும்.
- உயர்கல்வி நிறுவனங்களிலும் பேராசிரியர் நியமனங்களிலும் மாணவர் சேர்க்கையிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுததப்பட்டோருக்கு உரிய ஒதுக்கீடுகளை முழுமையாக நிரப்ப வேண்டும்.
- கல்வி உரிமை மாநில அரசுகளுக்கே வரவேண்டும்.
உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம்; சக மாணவர்களிடம் இதை விளக்குவோம்!
சமூக வலைதளங்களில் பரப்புவோம்!
இது நமது சமூகக் கடமையாக உணர்ந்து செயல்பட ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்!
– தமிழ்நாடு மாணவர் கழகம்