‘பத்மாவதி’ வரலாறு அல்ல; கற்பனை
‘பத்மாவதி’ என்ற திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இந்துத்துவவாதிகள், படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகைகளுக்கு கொலை மிரட்டலையும் தலைக்கு விலை வைக்கும் ‘மனுதர்ம’ப் பண்பாட்டையும் கைகளில் எடுத்து விட்டனர். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும், படத்தைத் திரையிட முடியாது என்றுஅறிவித்துள்ளனர். ‘இராஜபுத்திர’ பெண்களின் பெருமைக்குரிய அடையாளமாக பேசப்படும் ‘பத்மாவதி’ என்பவர் உண்மையில் ஒரு கற்பனை. வரலாற்றுப் பதிவுகள் இல்லாத கற்பிதம்; கவிஞர்களின் கற்பனையில் இராமாயணம் போல் பல்வேறு ‘பதமாவதி’கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பத்மாவதி இந்தி திரைப்படத்துக்கு எதிரான போராட்டம் வலுத்துக்கொண்டே வருகிறது. எல்லா ராஜபுத்திரர்களின் சார்பிலும் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள் இரண்டு காரணங்களுக்காக அத்திரைப்படத்தை எதிர்க்கிறார்கள். முதலாவதாக, அது வரலாற்றைச் சிதைக்கிறது என்கிறார்கள். இரண்டாவதாக, ராஜபுத்திர ராணி பத்மினியை (சில நூல்களில் அவரே பத்மாவதி என்று அழைக்கப்படுகிறார்) அவமதிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ‘பத்மாவத்’ தொடர்பாக தாமஸ் டி பிரியுன், சாந்தனு புகான் – குறிப்பாக ரம்யா சீனிவாசன் ஆகியோரின் ஆழ்ந்த ஆராய்ச்சியால் கிடைத்துள்ள ஆக்கங்கள் பத்மாவதியைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன.
தொடக்க காலக் கதை
மாலிக் முகம்மது ஜாயஸி என்ற சூஃபி கவிஞர் கி.பி. 1540-ல் பத்மாவதி பற்றிய கதையைக் களமாகக் கொண்டு கவிதை எழுதினார். பொதுவாகவே, 14-வது நூற்றாண்டு தொடங்கி 16-வது நூற்றாண்டு வரையில் வட இந்தியாவில் இப்படி யான காதல் கதைகள் மக்களிடையே உலவின. இதுபோன்ற கதைகளின் கதாநாயகனான மன்னன் சத்தியத்தைத் தேடிச் செல்லும் பயணத் தில் பேரழகியான பெண்ணை எதிர்கொள்வார்; தான் அடைய விரும்பிய உயர்ந்த ஆன்மிக லட்சியத்துக்கு இடையூறாக வரும் சிற்றின்ப ஆசைகளால் அலைக் கழிக்கப்படுவார் எனும் வகையில் இந்தக் கதைகள் இயற்றப்பட்டன. கி.பி. 1303-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தூர் கோட்டையை டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி முற்றுகையிட்டார் என்ற ஒரு வரலாற்றுத் தகவலும் மக்களிடையே உலவிய கதைகளும் சேர்க்கப்பட்டு பத்மாவதி திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பத்மாவதி வாழ்ந்ததாகக் கருதப்படும் காலத்துக்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாயஸி எழுதிய கதை, 1303-ல் என்ன நடந்தது என்பதைச் சொல்லாமல் அவருடைய சமகாலத்திய சம்பவங்களையும் இடங்களையும் பின்னணியாகக் கொண் டிருந்தது.
ஜாயஸியின் கதையில், சித்தூர் மன்னன் ரத்தன் சேன் என்பவரிடம் இலங்கையில் வாழும் சிங்கள இளவரசி பத்மாவதியின் பேரழகை வர்ணிப்பது ஹீராமன் என்ற கிளி. கிளியின் பேச்சைக் கேட்ட மன்னன், மனைவி நாகமதியை விட்டுவிட்டு யோகியைப் போல வேடம் தரித்து, சிங்கள நாட்டுக் குச் செல்கிறார். உயிரையே பணயம் வைத்து பத்மாவதியை மணக்கிறார் ரத்தன் சேன். பத்மாவதியுடன் சித்தூர் திரும்புகிறார். நாகமதிக் கும் பத்மாவதிக்கும் இடையில் பூசல் இல்லாமல் சமரசத்தை ஏற்படுத்த முயல்கிறார். ரத்தன் சேனின் அரசவையிலிருந்து விலக்கப்பட்ட சூழ்ச்சிக் காரரான ஒரு பார்ப்பனர் அதற்குப் பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் இதைப் பயன்படுத்திக்கொண்டு, டெல்லி சென்று சுல்தான் அலாவுதீன் கில்ஜியைச் சந்தித்து பத்மாவதியின் பேரழகை வர்ணிக் கிறார். பத்மாவதி யைக் கொண்டுவருவதற்காக சித்தூர் மீது படையெடுக்கிறார் அலாவுதீன் கில்ஜி. ரத்தன் சேன் பத்மாவதியை விட்டுத்தர மறுக்கிறார். பிறகு, நடக்கும் போரில் ரத்தன் சேன் உயிரிழக்கிறார். பத்மாவதியும் நாகமதியும் உடன்கட்டை ஏறி தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். போரில் வெற்றி கிடைத்தும் பத்மாவதியை அடைய முடியாமல் டெல்லி திரும்புகிறார் சுல்தான்.
இந்தக் கதையில் சித்தூர் என்பது உடலாகவும் ரத்தன் சேன் என்பது ஆன்மாவாகவும் பத்மாவதி என்பது எண்ணமாகவும் ஹீராமன் என்பது ஆன்மிக குருவாகவும் கில்ஜி என்பது மாயையாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பதாகப் பனையோலை ஏடுகள் சுட்டுகின்றன. கில்ஜியைப் பற்றிய இந்தக் கதையும் பிறகு எழுதப்பட்ட சில கதைகளில் வரும் சம்பவங்களும் வரலாற்றில் நடந்த உண்மைகள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.
வரலாற்றில் வாழ்ந்த அலாவுதீன் கில்ஜி மிகச் சிறந்த ராஜதந்திரி. டெல்லி அரசின் நிதி நிலையை நிலைப்படுத்தினார். எல்லையை விரிவுபடுத்தினார். மங்கோலியர்களின் படையெடுப்பில் இருந்து வட இந்தியாவைக் காப்பாற்றினார். அவர் சாதித்த பலவற்றை இப்போது வாழும் நிர்வாகிகளால்கூடச் செய்ய முடியாது.
சித்தூர் கோட்டை முற்றுகையிடப்பட்ட போது பத்மாவதி அங்கே வாழ்ந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. பெண்ணாசை காரணமாகத்தான் சித்தூர் கோட்டையைக் கைப்பற்றச் சென்றார் கில்ஜி என்பதற்கும் ஆதாரம் இல்லை. பத்மாவதி என்பவர் தியாகத் திருவுருவாகவும் எழில் பொங்கும் பெண்ணாகவும் மக்கள் மனதில் (கற்பனை வடிவத்தில்) இடம் பெற்று விட்டார். ஆனால் அப்படி ஒருவர் வாழ்ந்ததே இல்லை! அது ஒரு கவிஞனின் மனதில் எழுந்த கற்பனைக் கதாபாத்திரம். வெவ்வேறு கலைஞர்கள் வெவ்வேறு வடிவங்களில் அவளை உருவாக்கிக்கொள்ளலாம்.
திரும்பத் திரும்பக் கூறப்பட்ட கதைகள்
பல நூற்றாண்டுகளாக பத்மாவதி குறித்த கதைகள் திரும்பத் திரும்ப வெவ்வேறு தலைமுறைகளிடம் தொடர்ந்து கூறப்பட்டன. இப்படிச் சொல்லப்பட்டு வந்த கதைகளில் கதையின் சம்பவங்களும் முக்கிய கதாபாத்திரமான பத்மா வதியும்கூட மாறுதல்களைப் பெற்றுள்ளனர். ‘பத்மாவத்’ கதை வெளியாகிப் பல ஆண்டுகளுக் குப் பிறகு பாரசீக மொழியிலும் அது எழுதப்பட்டது. வட இந்தியாவிலும் குஜராத்திலும் ஜைன இலக்கியத்திலும், ராஜஸ்தான அரசவையின் படித்தவர்களாலும் பத்மாவதி பற்றிய கதைகள் வெவ்வேறு வகைகளில் சேர்க்கப்பட்டன. 17-வது நூற்றாண்டில் ரத்தன் சேனின் கூஹிலா அரண்மனையை மையமாக வைத்து இந்தக் கதையை மேவாரை ஆட்சி செய்த சிசோடியா மரபில் வந்தவர்கள் எழுதினர். முகலாயர் ஆட்சி மங்கி, பிரிட்டிஷ் ஆட்சி உச்சம் பெறுவதற்கு முந்தைய காலத்தில் பத்மாவதியின் கதை மேவாரில் புது வடிவம் பெற்றது. அதில் அலாவுதீன் கில்ஜி கொடுங்கோலரைப் போலச் சித்தரிக்கப்பட்டார். அவருடைய முஸ்லிம் மதப் பின்னணி அந்த சித்தரிப்புக்குப் பயன்பட்டது. சித்தூர் கோட்டை மீது டெல்லி சுல்தான் படையெடுத்ததை இந்துக்களுக்கு எதிரான இஸ்லாமியர் போராக உருவகப்படுத்தப் பட்டது.
19-வது நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ராஜபுதனத்து அரசியல் முகவராக இருந்த கர்னல் ஜேம்ஸ் டோட் என்பவரிடம், அந்தப் பிரதேசம் தொடர்பான வரலாற்றை எழுதும் பணி ஒப்படைக்கப்பட்டது. அவர் தன்னிடம் தகவல் தெரிவித்தவர்களில், குறிப்பாகச் சிலரிடமிருந்து மட்டும் தரவுகளைப் பெற்றுக்கொண்டார். ராஜஸ்தானில் வழங்கிவந்த பத்மாவதி கதையை அவர்தான் வரலாற்றில் சேர்த்தார். மேற்கத்திய நாடுகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய கிறிஸ்தவர்களைப் போல ராஜஸ்தானின் ராஜபுத்திரர்கள் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கடுமையாக, தீரத்துடன் போரிட்டார்கள் என்று அவர் பதிவு செய்தார். வங்காளத்து அறிவுஜீவிகளும் மேல்தட்டு மக்களும் ராஜபுத்திர வீரர்களின் இந்த வீரத்தையும் தியாகத்தையும் மெச்சினர். இப்படித்தான் முதன்முதலாக ‘இந்திய தேசம்’ – ‘இந்து தேசம்’ என்ற கருத்து தோன்ற ஆரம்பித்தது. பத்மாவதி என்பவர் தன்னையே அழித்துக்கொள்ளும் தியாகத்துக்கு அடையாளமாக, நன்னெறிகள் கொண்டவராக, கற்புக்கரசி யாக உருவெடுத்தார். அவருடைய கணவரின் கௌரவத்தை, குடும்ப கௌரவத்தை, ராஜபுத்திர வம்சத்தவர்களின் கௌரவத்தை – இப்போது தேச கௌரவத்தைக் காப்பாற்றிய அடையாளமாகி விட்டார்கள்.
16-வது நூற்றாண்டிலிருந்து 21-வது நூற்றாண்டு வரையிலான காலத்தில் ஆணாதிக்கச் சமூகத்தின் கட்டுத்தளைகள் ‘பத்மாவதி’ மீது அதிகரித்துக்கொண்டே வந்துள்ளன. ராஜஸ்தானில் வழங்கப்படும் கதைகளில், பத்மாவதி தன்னுடைய சுயாதீனமான குரலை இழந்துவிட்டார். மன்னர்களும் மற்றவர்களும் அவையில் முன்னிலை பெற்றனர். இந்த ராஜஸ்தானி பத்மாவதியைத்தான் 19-வது நூற்றாண்டு மேல்தட்டு மக்கள் கொண்டாடினர். இவரையே இந்து தேசத்துக்கும், இந்து சமுதாயத்துக்கும் அடையாளமாக வரித்தனர். அவரைப் போல வீரம், தூய்மை (கற்பு), தியாகம் ஆகிய பண்புகள் எல்லா மகளிருக்கும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ராஜபுத்திர வம்சத்தின் மேட்டுக்குடி மக்களுக்கான தகுதிகளும் குணங்களும் பத்மாவதியின் மீது ஏற்றப்பட்டன. இந்தத் திரைப்படத்தில் பத்மாவதி சரியாகவும் முறையாகவும் சித்தரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இந்த மனப்பாங்குதான் முக்கியக் காரணம். ராஜபுத்திர பத்மாவதி தலையை மறைக்கும் முக்காட்டை விலக்க மாட்டார், பொது இடத்தில் நடனமாட மாட்டார், தன்னுடைய அழகு தெரியும் வகையில் அலங்காரம் செய்து கொள்ள மாட்டார், பிற ஆடவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் என்பதையே அவருக்குரிய இலக்கணமாகக் கருதுகின்றனர்.
ஏகபோக சீதனமல்ல
ராஜபுத்திரர்கள் 17-வது நூற்றாண்டு முதல் பத்மாவதிக்கு உரிமை கொண்டாடிக் கொண் டிருக்கின்றனர். ஆனால், பத்மாவதி தொடர்பாக வேறு கதைகளும் இருப்பதை மீரா சீனிவாசன் சுட்டிக்காட்டுகிறார். வங்காளத்திலிருந்து அரக்கான் அரசவைக்கு (மியான்மர்) சென்ற ஒரு சூஃபி, அதே கதையைத் தன்னுடைய பாணியில் வங்க மொழியில் இயற்றியிருக்கிறார். 19-வது நூற்றாண் டில் பத்மாவதியின் கதைகள் உருது மொழியில் வெவ்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டன. பாரீஸ் நகரில் 1923-ல் பத்மாவதி பற்றி இசை நாடகம் (ஓபெரா) கூட நடந்திருக்கிறது. ராமாயணத்தில் பல வடிவங்கள் இருப்பதைப் போல பத்மாவதியின் கதையிலும் பல வடிவங்கள் உள்ளன. இந்தக் கதையோ, கதாபாத்திரமோ எந்த ஒரு சமூகத்துக்கும் தனியுடைமை அல்ல. இத்தனை ஆண்டுகளாகப் பல்வேறு கவிஞர்களால், படைப்பாளிகளால் எடுத்தாளப்பட்ட கதைக்கும் கதாபாத்திரத் துக்கும் தங்களுடைய சமூக – அரசியல் செல்வாக்கு காரணமாக ஒரு சமூகம் ஏகபோக உரிமை கோருவது அந்தக் கதாபாத்திரம் காலம் கடந்து நிற்பதைத் தடுத்து நிறுத்திவிடும்!
– திவ்யா செரியன்
நிமிர்வோம் டிசம்பர் 2017 இதழ்