நீர் நிலைகளை மாசுபடுத்தும் ‘கடவுள்’ கரைப்புகள்
பல்வேறு வகையில் வெளியேறும் கழிவுநீரும் நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது. ஆனால், கடவுள் சிலைகளைக் கரைப்பதால் ஏற்படும் ஆபத்தைவிடக் குறைவான பாதிப்பையே கழிவுநீர் ஏற்படுத்துகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது.
களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள், நீர்நிலைகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், செயற்கைக் களிமண் (பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்), சுட்ட களிமண், காகிதக்கூழ் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகள், நீர்நிலைகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். தவிர, இந்தச் சிலைகளைச் செய்யவும் அலங்கரிக்கவும் பயன்படுத்தப்படும் ரசாயனப் பூச்சுகள், வண்ணத் திரவங்கள், இரும்புக் கம்பிகள், பல வகையான துணி ரகங்கள், செயற்கை மணிகள் – மாலைகள் போன்றவையும் நீர்நிலைகளைப் பெரிய அளவில் மாசுபடுத்து கின்றன.
ரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், குரோமியம், துத்தநாகம், ஆர்சனிக், காரீயம் போன்ற கன உலோகங்கள் நிறைந்திருக்கும். இவற்றில் பல புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. இவை நீரில் கரையும்போது அங்கு வாழும் உயிரினங்களும் அந்தப் பகுதியைச் சுற்றி வாழும் பறவை யினங்களும் தாவரங்களும் பாதிக்கப்படும். அந்த நீரில் வளர்ந்த மீனைச் சாப்பிடுவதன் மூலம் நமக்கும் அந்த வேதிப் பொருட்கள் கடத்தப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் ஹூக்ளி நதியில் மட்டும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் துர்கைச் சிலைகள் கரைக்கப்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. இதன்மூலம் 16.8 டன் வார்னிஷ், 32 டன் பெயிண்ட் போன்றவை நீரில் கலக்கின்றன. தசரா முடிந்த பிறகு எண்ணெய், கிரீஸ் போன்றவற்றின் அளவு ஒரு லிட்டருக்கு 0.99 மி.கி. அளவுக்கு உயர்வதாகவும் கன உலோகங்களின் அளவு 0.104 மி.கி. அளவுக்கு உயர்வதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. பெரிய நதியான ஹூக்ளியில் கலக்கும் மத்திய மாசுப் பொருட்களின் அளவே அதிர்ச்சி தருகிறது என்றால், நமக்கு அருகில் இருக்கும் கிணறு, குளம், ஏரி போன்ற சிறு சிறு நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதால் ஏற்படும் ஆபத்தின் அளவைப் புரிந்துகொள்ளலாம்.
தவிர செயற்கைப் பொருட்களால் செய்யப்படும் கடவுள் சிலைகள், முழுவதுமாக நீரில் கரைவதில்லை. அது நீர்நிலையின் ஆழத்தைக் குறைத்து, நீரோட்டத்தைப் பாதிக்கும். சிலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களால் சில நேரம் நீரில் கரையும் நுண்ணூட்டச் சத்துகளின் அளவு அதிகரித்து, ‘யூட்ரோஃபிகேஷன்’ ஏற்படலாம்.
அதாவது அளவுக்கு அதிகமான நுண்ணூட்டச் சத்துகளால் நீர்நிலைகளில் திடீரென ஆல்கே, ஆகாயத் தாமரை போன்றவை வளர்ந்து நீரின் மேற்பரப்பு முழுவதும் படர்ந்துவிடும். இதனால் நீரில் இருக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறையும். நீரினுள் சூரிய ஒளி புகுவதும் தடுக்கப்படும். இதனால் நீர்வாழ் உயிரினங்கள் இறக்க நேரிடும்.
நிமிர்வோம் Oct 2018 இதழ்