மதயானை வருகிறது!
“அப்பா! மதம் பிடித்த யானை வருகிறதாமே! வாங்களேன் போவோம், வேடிக்கைப் பார்க்க! நான் பார்த்ததே இல்லையே, மதம்பிடித்த யானையை! வாங்க! வாங்க! சீக்கிரம் வாங்க!”
இப்படி ஒரு சிறு பிள்ளைகூடக் கூப்பிட மாட்டான்.
யானை பார்த்திராதவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் யானை வந்தால் கட்டாயம் பார்த்தே தீருவார்கள். முன்பு பார்த்தவர்களேகூட மீண்டும் பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள்!
யானையிலேயே வெள்ளை யானை வருகிறது என்றால், நீங்களும் நானும்கூடத்தான் பார்க்க ஆசைப்படுவோம்! காரணமென்ன? யானை பூனையைப்போல நாள்தோறும் வீட்டில் பார்க்கப்படும் விலங்கல்ல. அதன் அமைப்பே ஒரு அலாதி! ஆகையால்தான் பார்க்க ஆசைப்படுகிறோம். யானையின் நிறம் சாதாரணமாகக் கறுப்பு. ஆதலால் வெள்ளை யானையென்றால் இன்னும் ஆச்சரியமல்லவா? இந்திரனிடத்தில் மட்டும் (இதுமேல் உலக விஷயம்! என்னைப் போல அடிக்கடி பார்க்கிறவர்கள் மட்டுந்தான் நம்புவார்கள்!) ஒரே ஒரு வெள்ளை யானை இருப்பதாகக் கதை! போன வருஷத்தில் பர்மா காட்டிலிருந்து ஒரு வெள்ளை யானையைப் பிடித்து வந்ததாகப் பத்திரிகையில் படித்தேன். நீங்களும் படித்திருக்கலாமே! ஒருக்கால் இந்திரனின் யானையையே தான் பர்மாவைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று கருதி வந்ததோ என்னவோ? யார் கண்டது? நாரதர் அடிக்கடி வந்து போனதாக (போவதாக அல்ல) படிக்கிறோமோ! (போஸ்ட்மென் தபால் கொண்டு வருவதுபோல!) ஏன் ஐராவதம் மட்டும் ஒரு ‘விசிட்’ ஜாலியாக வந்துவிட்டுப் போகக் கூடாது?
வெள்ளையானை யென்றாலே ஆச்சரியப்படும்போது சிவப்பு யானை வந்திருக்கிறது என்றால் எத்தனைப் பேர் ஓடுவோம்? அபூர்வப் பிறவிகளைப் பார்க்க வேண்டும் என்பதில் மனிதனுக்கு ஆசையிருப்பது இயற்கை தானே!
ஆனால் ஒரு மதம் பிடித்த யானை வருகிறது என்று கேள்விப்பட்டால் என்ன செய்வீர்கள்? கதவைத் தாளிட்டுக் கொள்வார்கள், வீட்டிலுள்ளவர்கள். ஓட்டமாக ஓடி ஒளிந்து கொள்வார்கள், தெருவில் போகிறவர்கள். சுட்டுவிட முயற்சிப்பார்கள், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளவர்கள்.
மனிதர்களிலும் கறுப்பு யானை, வெள்ளை யானை, மதயானை என்ற பல பிரிவுகள் உண்டு. யானையை மதம் பிடிக்காமல் வைத்திருப்பதுதான் கஷ்டமேயொழிய மதமேறும்படி செய்வது சர்வசாதாரணம் என்பார்கள், யானைப் பாகர்களைக் கேட்டால்! செல்வமாக வளர்க்கும் யானைக்கு மதம் பிடித்து விடுமேயானால் அதன் பாகன் அதைத் தட்டியா கொடுப்பான்? இல்லவேயில்லை. தப்பித்துக் கொள்ளத்தான் பார்ப்பான்! ஆனால் முதலில் அந்த மதயானை தனக்குத் தீனி கொடுத்து குளிப்பாட்டி வளர்த்து வந்த பாகனைத்தான் கொல்லும்! அப்படித்தான் மத மனிதனும்!
மனிதனுக்கு மதம் பிடிப்பதும் இயற்கை (யானையைப் போலவே) மதம் பிடிக்காமல் வைத்திருப்பதுதான் கஷ்டம். ஒரு குழந்தையை ‘பீடி’ குடிக்கப் பழகாமல் வளர்ப்பதுதான் கஷ்டமே தவிர, பீடி குடிக்கக் கற்றுக் கொடுப்பது கஷ்டமே அல்ல. அது அவசியமுமல்ல; தானாகவே வந்துவிடும், மற்றவர்களைப் பார்ப்பதனால்.
“தம்பீ! அவன் கிருஸ்தவன்! இவன் முஸ்லிம்! அவன் கீழ் ஜாதி! இவன் மேல் ஜாதி!” என்று சிறுபிள்ளைகளுக்கு ஊட்டுவது இருக்கிறதே, அது மிக மிகச் சுளுவானது. இதற்கு ரொம்ப புத்தி வேண்டியதில்லை. படிக்காதப் பெண்களைப் பேய் பிடித்து ஆடும்படி செய்கிறான் பூசாரி. அவன் என்ன ரொம்ப திறமைசாலியா என்ன? ‘பேயாவது பிசாசாவது, எல்லாம் பொய்’ என்கிறானே, அவன்தான் திறமைசாலியாய் இருக்க வேண்டும்.
சில பத்திரிகாசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பூசாரிப் பிறவிகள். கையில் உடுக்கை இருப்பதற்குப் பதிலாக தவறிப் போய் பேனா வைத்திருக்கிறார்கள்! இவர்கள் மதப் பேயை வரவழைப்பதில் பலே கைகாரப் பேர்வழிகள்! ஜாக்கிரதை! அந்தப் பக்கம் போகாதீர்கள்! மற்றவர்களையும் போக விடாதீர்கள்!
இதோ மதயானை ஓடி வருகிறது! நாதுராம் வினாயக் கோட்ஸே வருகிறது! அதை அவிழ்த்துவிட்ட கூட்டம் கோவில் கோபுரத்தில் நின்றுகொண்டு கைகொட்டிச் சிரிக்கிறது! உஷார் உஷார்! கதவுகளை மூடுங்கள்! மதயானை சந்திலோ பொந்திலோ மறையுமேயானால் போலீசாரிடம் காட்டிக் கொடுங்கள்! அவர்களிடம் துப்பாக்கி இருக்கிறது! எப்படியாவது அதைச் சுட்டு வீழ்த்தி விடுவார்கள்! ஆனால் நீங்கள் மட்டும் ஜாக்கிரதை! அதோ வருகிறது! எதிரே வந்த 7 வயதுக் குழந்தையை (தன்னை வளர்த்த பாகனின் செல்வத்தை) மிதித்துக் கொன்றுவிட்டு ஓடி வருகிறது! உஷார்! உஷார்!!
– குத்தூசி குருசாமி எழுதிய ‘அம்பே சிவம்’ நூலிலிருந்து
நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்