புதிய தொழிற்சாலைகள் இல்லை; வேலை வாய்ப்பின்மை தமிழகத்தில் அதிகரித்துள்ளது

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கை இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாத மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கூறுகிறது. 15 வயதிலும் அதற்கு மேற்பட்ட வயதிலும் பல மாதங்களாக வேலை வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்கள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் வேலை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை (3.8 சதவீதம்). தேசிய சராசரியைவிட (3.7) அதிகரித்திருக்கிறது. கருநாடகத்தில் இந்த அடிப்படையில் எடுத்த கணக்கீட்டின்படி வேலை கிடைக்காதவர்கள் 1.4 சதவீதம். தெலுங்கானாவில் (2.7 சதவீதம்), ஆந்திராவில் (3.5 சதவீதம்), குஜராத்தில் (0.6 சதவீதம்), மகாராஷ்டிராவில் 1.5 சதவீதம்.

சென்னை வளர்ச்சி ஆய்வு மய்யத்தின் (எம்.அய்.டி.எஸ்.) பொருளாதார பேராசிரியர் எம். விஜயபாஸ்கர் இது குறித்து, “தமிழ்நாடு போன்ற தொழில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் படித்தவர்கள். அவர்கள் கல்விக்கு ஏற்ற nவைலகள் கிடைக்க வில்லை. தங்கள் கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படாமல் தமிழகம் பின்தங்கி நிற்கிறது. இதுவும் வேலை இல்லாத் திண்டாட்டத்துக்கு ஒரு முக்கிய காரணம் என்று – பொருளாதார ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். “படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலே, தொழிற்சாலைகள், கம்பெனிகள் வரவில்லை என்பதே காரணம். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் தொழில் தொடங்க எவரும் முன் வரவில்லை” என்றார் அந்த நிபுணர்.

வேலை வாய்ப்புப் பதிவகங்கள் தரும் புள்ளி விவரங்களின்படி 2017 மார்ச்சு 30 வரை வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்தோர் 81.30 இலட்சம் பேர். 2016 மார்ச் 30 நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 2.03 இலட்சம் குறைவு என்றாலும் 2016-2017ஆம் ஆண்டில் வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்த பட்டதாரிகள், உயர் பட்டதாரிகள், பொறியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2.45 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள், அரசு வேலைகளுக்காகப் பதிவு செய்து, காத்திருக் கிறார்கள். அதேபோல் 4307 டாக்டர்களும் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். 2015-16இல் 5510 டாக்டர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தனர். 2016-2017இல் இது 4307 என்ற அளவில் மட்டுமே குறைந்திருக்கிறது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (டிச.25) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 11012018 இதழ்

You may also like...