‘நிமிர்வோம்’ ஒரு வாசகரின் பகிர்வு
வணக்கம். நான் 10 மாதங்களாக “நிமிர்வோம்” இதழை படித்து வருகிறேன். அக்டோபர் மாத இதழ் என்னை மிகவும் கவர்ந்தது. திவிக நடத்திய “பெண் போராளிகளின் அறைகூவல்” நிகழ்வை பற்றிய குறிப்புகள் அருமை. இயல்பாகவே முற்போக்கு சிந்தனைகளோடு இருக்கும் இளைய தலைமுறையினரை ஜாதிசங்கங்களின் வெறியூட்டல்களில் இருந்து காக்க “சுயஜாதி மறுப்பும்”, “ஜாதி பெருமித மறுப்பும்” எவ்வளவு முக்கியமானது என்பதை, நிகழ்வின் குறிப்புகள் உணர்த்தின.
“தி ஒயர்” என்ற ஆங்கில இணையதளத்தில் பெரியாருக்கு எதிராக பாபாசாஹேப் அம்பேத்கரை நிறுத்த, ஒரு கட்டுரையின் மூலம் பார்ப்பனர்கள் முயன்று பார்த்தனர். அதை முறியடிக்கும் விதமாக, பேராசிரியர் ஆனந்தி எழுதிய ஆங்கில கட்டுரையை, நிமிர்வோம் இதழ் தமிழில் வெளியிட்டிருந்தது. பெரியாரை கொச்சைப்படுத்தி பலரும் ஆங்கில கட்டுரைகளை எழுதுகின்றனர். இதை படிக்கும் வாசகர்கள் அவை உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடிக்க முடியாமல் குழம்புகின்றனர். காந்தி, பாபாசாஹேப் போன்ற தலைவர்களின் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, யாரும் திரிக்கமுடியாத வகையில் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், பெரியாரின் எழுத்துகள் ஆங்கிலத்தில் முழுமையாக மொழியாக்கம் செய்யப்படாததால், பெரியாருக்கு எதிரான திரிபுவாத கட்டுரைகளின் உன்மைத்தன்மையை ஆய்வு செய்ய, ஆங்கில மூலங்கள் இல்லாத நிலை தொடர்கிறது. பேராசிரியர் ஆனந்தியின் கட்டுரையும் இதனை சுட்டிக்காட்டுகிறது
நாட்டார் இலக்கியங்களை திரித்து, ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை புகுத்திய வரலாற்றையும், ஜாதி ஒழிப்பின் தேவையையும், வண்ணக்கதிரில் வெளிவந்த கட்டுரை எடுத்தியம்புகிறது.
காலங்காலமாக தகுதி, திறமை என்று மோசடி செய்யும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியில் உருவான “நீட்” தேர்வின், சூட்சமங்களை விளக்கும் கட்டுரை, காலத்தின் தேவை ஆகும். நீட்டின் மையப்புள்ளியாக இருக்கும் ஊழல் பெருச்சாளி கேதன் தேசாயின் 1300 கோடி ஊழலை பார்க்கும் யாருக்கும், நீட் என்பது ஊழலை ஒழிக்க வந்த தேர்வு என்று தோன்றாது. அந்த 3ரூ பேருக்கு தோன்றுமோ என்னவோ!!! செய்முறை பயிற்சியற்ற இந்திய மருத்துவக்கல்வியையும் கட்டுரை சாடத் தவறவில்லை..
1937 இல், நீடாமங்கலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சந்தித்த தீண்டாமை கொடுமைகளையும், அதனை எதிர்த்து அடித்த பெரியார் இயக்க செயல்பாடுகளையும், “நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்” என்ற புத்தகம் பதிவு செய்துள்ளது. அந்த புத்தகத்தை பற்றிய திறனாய்வை நிமிர்வோம் இதழ் வெளியிட்டது பாராட்டுக்குரியது. ஏனென்றால், பெரியார் இயக்கம், இடைநிலை சாதிவெறிக்கு ஆதரவாக இருந்ததாக செய்யப்படும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க இத்தகைய திறனாய்வுகள் தேவை
இந்திய சுதந்திர போராட்டம் என்றாலே, ஆங்கிலேயனுக்கு எதிரான சமத்துவ போராட்டம் என்ற, தவறான வரலாறு மக்களுக்கு போதிக்கப்படுகறது. பெரியார் – காந்தி உரையாடல், இந்த போலி சுதந்திர பிம்பத்தை உடைத்து நொறுக்குகிறது. அப்பட்டமாக மனுதர்மத்தை ஆதரித்த காந்தியின் தலைமையில் நடந்த சுதந்திர போராட்டம், போலியாக இல்லாமல், வேறெப்படி இருக்க முடியும்?
தன் காதலனை கண்முன் இழந்த கவுசல்யா, “தோழர்” கவுசல்யாவாக மாறியதை அவருடைய வீரம் செறிந்த பேட்டி உனர்த்தியது. இவ்வாறாக, காலத்துக்கு ஏற்ற கட்டுரைகளை தாங்கி, நிமிர்ந்து நிற்கும், “நிமிர்வோம்” இதழ் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். பெரியார் பணி முடிப்போம்!!!
ம. எட்வின் பிரபாகரன், மடிப்பாக்கம், சென்னை.
நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்