கொலைப்பட்டியலில் சமூக நீதி ஆய்வாளர் காஞ்சா அய்லய்யா

‘தேச பக்தி பேசும் பார்ப்பனர்கள், இராணுவத்தில் சேராதது ஏன்?’

என்று கேட்கிறார்

இந்தியாவின் தலைசிறந்த சமூகநீதி அறிஞர்களில் ஒருவரான காஞ்சா அய்லய்யா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். தலித் மக்களின் விடுதலைக்காகவும் ஜாதி ஒழிப்பு, பார்ப்பன-இந்துத்துவ எதிர்ப்புகளை முன் வைத்து சிறந்த ஆங்கில நூல்களை எழுதியவர். அய்தராபாத்தில் மவுலானா ஆசாத் தேசிய பல்கலைக்கழகத்தில் சமூகநீதித் துறைக்கான ஆய்வு மய்யத்தின் இயக்குனராக பணியாற்றிவரும் அவர், இந்துத்துவ சக்திகளின் கொலைப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். கொலை முயற்சிகளிலிருந்து பல முறை உயிர் தப்பியுள்ளார். 2009ஆம் ஆண்டு அவர் ஆங்கிலத்தில் எழுதி ‘இந்து இந்தியாவின் இன்றைய நிலை’ (ஞடிளவ ழiனேர ஐனேயை) என்ற நூல் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டதிலிருந்து ‘ஆரிய வைசியர் சங்கம்’ அவரது தலைக்கு விலை வைத்திருப்பதோடு, கொலை முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவரது நூலை திரும்பப் பெற வேண்டும் என்று தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் என்பவர் கெடு நிர்ணயத்துள்ளார். பொது மக்கள் முன் அய்லய்யா தூக்கிலிடப்பட வேண்டும் என்று அவர் பேசினார். 2017 செப்.18ஆம் தேதி தெலுங்கானா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிவிட்டு திரும்பும்போது இரண்டு முறை அவரது வாகனம் வன்முறை கும்பலால் மடக்கப்பட்டது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்தார். தனது ஒடுக்கப்பட்ட ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக காஞ்சா அய்லய்யா ஆடு மேய்ப்பவர் (முயnஉhய ஐடயihய ளுhநயீநசன) என்று தனது பெயரை அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டுள்ளார். தனது புதிய நூலில் உள்ளடக்கம், கொலை மிரட்டல் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி இது:

கேள்வி: உங்கள் நூலின் உள்ளடக்கம் பற்றி கூறுங்கள்.

பதில் : ‘இந்து இந்தியாவின் இன்றைய நிலை’ என்று நான் ஆங்கிலத்தில் எழுதிய நூல். இந்தி, மராத்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, தெலுங்கு மொழியின் இரண்டாவது பதிப்பு இப்போது வெளி வந்துள்ளது.

தனியார் துறையில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பெறவிடாமல் தடுக்கும் சக்திகளை இந்த நூலில் விளக்கியுள்ளேன். தனியார் துறையில் இடஒதுக்கீடு வந்தால் ‘தகுதி’, ‘திறமை’ சீரழிந்துவிடும் என்று ‘பார்ப்பன – பனியாக்கள்’ முன்வைக்கும் வாதங்களை இந்த நூலில் மறுத்துள்ளேன். சாதி அடிப்படையான இந்த சமூகத்தில் பொருளாதார வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பது தலித் மற்றும் சூத்திரர்களின் உழைப்புதான். ‘சூத்திரர்’களான பிற்படுத்தப்பட் டோரில் குஜ்ஜர்கள், பட்டேல்கள், ஜாட்டு களையும் இணைத்துள்ளேன். இந்தியாவில் உழைக்கும் மக்களாக தலித்-சூத்திரர்களாகவே இருந்தாலும் நாட்டின் செல்வம், சொத்துக் களின் கட்டுப்பாடு, குப்தர் காலத்திலிருந்தே ‘பனியா’க்களிடம்தான் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் பெரும் தொழிலதிபர்களாக இருக்கும் அம்பானி, அதானி, இலட்சுமி மிட்டல், கிரிலோஸ்கர், பிர்லா போன்றவர்கள் இந்தப் பனியா சமூகத்தினர்தான். சுதந்திர இந்தியாவின் சொத்து வளங்கள் பெரும் பான்மையாக இவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பார்ப்பனர்களோடு இவர் களுக்குள்ள நெருக்கமான உறவு காரணமாக பெரும் சொத்துக்கள் கோயில்களுக்குப் போய் விட்டன. உதாரணமாக கேரள பத்மநாபசாமி கோயிலைக் குறிப்பிடலாம்.

சொத்துக்கள் பனியாக்களிடமும், கோயில்களிடமும் பார்ப்பன ஆதரவோடு எப்படி குவிந்தது என்பதை கோட்பாட்டு ரீதியாக இந்த நூலில் விளக்கியிருக்கிறேன். இதை ‘சமூகத்தின் கடத்தல் தொழில்’ (ளுடிஉயைட ளுஅரபபடiபே) என்று குறிப்பிட்டுள்ளேன். இந்திய சமூக அமைப்பு ‘நிலப்பிரபுத்துவமாக இயங்கியதால் இந்த சமூக அமைப்புக்குள் பெரும் தொழிலதிபர்கள் பிற சமூகத்தினரோடு நடத்திய வியாபார பேரங்கள் எப்படி சொத்துக் குவிப்புகுக் காரணமாக இருந்தன என்பதை இந்த நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். உதாரணமாக கிராம சந்தைகளை எடுத்துக் கொள்வோம். கிராம சந்தையில் வர்த்தகம் செய்வோர் கிராம வைசியர்கள். அவர்கள் விலைக்கு வரும் பொருள்களின் விலையைக் குறைப்பதற்கான அத்தனை சூழ்ச்சிகளையும் செய்வார்கள். “பொருளில் தரமில்லை; எடை சரியாக இல்லை” என்று காரணம் கூறி, உற்பத்தி செய்தவர்களின் பொருள் விலையைக் குறைத்து விடுவார்கள். கிராம சந்தையில் தொடங்கி விடுகிறது இந்த சுரண்டல். இங்கே விற்பவருக்கும் வாங்குவோருக்குமிடையே மனிதாபிமான உறவு இல்லை. பொருள்களை வாங்கும் வைசியர், அந்த வர்த்தகத்தை தனது ஜாதிக்குள் மட்டுமே இருத்திக் கொள்கிறார். தங்களிடம் குவியும் சொத்துக்களை சமூகத்தில் பயன்படக் கூடிய தொழிகளிலோ அல்லது நாட்டின் வளர்ச்சிக்கான  தொழில்களிலோ அவர்கள் முதலீடு செய்வதில்லை. அப்படி செய்திருந்தால் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தலித், சூத்திர மக்களின் வளர்ச்சிக்குப் பயன்பட்டிருக்கும். தங்களின் சொத்துக்களை தங்கள் சமூகத்தின ரிடம் தக்க வைத்துக் கொள்ளவும்  கோயில் களுக்கு காணிக்கை தரவுமே பயன்படுத்தினர்.

இப்போதும்கூட உற்பத்தி சக்திகளான விவசாயிகள், தற்கொலை செய்து கொள் கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் சொந்த கிராமத்தில் இறக்கும் விவசாயிகளை அக்கிராமத்து ‘வைசியர்’ துக்கம் விசாரிக்கக்கூடச் செல்வதில்லை. வைசியர்களிடம் சேரும் இந்த சொத்து அவர்களுடைய நேர்மையினாலோ அல்லது கடும் உழைப்பினாலோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர் பிறந்த ஜாதியின் காரணமாகவே குவிகிறது. இதைத்தான் ‘சமூகத்திற்குள் நடக்கும் கடத்தல் தொழில்’ என்று நான் கூறுகிறேன்.

இப்போது அரசு பொதுத் துறைகளை மூடிவிட்டு தனியார் நிறுவனங்களை வேகமாக வளர்க்கிறது. இதனால் பொதுத் துறையில் கிடைத்த வேலை வாய்ப்புகள் பறிபோய் விடுகின்றன. பண மதிப்பு நீக்கம் என்றாலும், ‘ஜி.எஸ்.டி.’ வரி முறை என்றாலும், இதில் பயனடைவோர் கிரிலோஸ்கர், வேதாந்தா, அதானி, அம்பானி மற்றும் பார்ப்பன தொழிலதிபர்கள் தான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ‘தேச பக்தி’ பற்றி தீவிரமாக பேசுகிறார்கள். எல்லைகளில் நாட்டைக் காக்கும் இராணுவத் தினரின் ‘தேசபக்தி’ கடமையைப் பாராட்டு கிறார்கள். நாட்டுக்காக இராணுவத்தில் இணைந்து சேவை செய்யும் இந்த வீரர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள் என்றால், நான் கேட்கிறேன், இந்த இராணுவத்தினர் எந்த ஜாதியிலிருந்து வந்தவர்கள்? அதைப் பார்த்தார்களா? சீனாவிலும், பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இந்தியாவின் எல்லைகளில் நின்று கொண்டிருக்கும் இந்த இராணுவத் தினரில் பார்ப்பனர்கள் இருக்கிறார்களா? பனியாக்கள் இருக்கிறார்களா? இந்த இராணுவத்தினரின் பொருளாதார நிலை என்ன?

இப்படி இராணுவத்தில் பணியாற்று வோர் தலித், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், நாட்டில் காவல்துறையில் பணியாற்றுவோரும் இதே சமூகங்களிலிருந்து வந்தவர்கள்தான். குறைந்த கல்வித் தகுதி இருந்தால் போதும் என்பதற்காக தங்கள் வருமானத்துக்காக இராணுவத்தில் சேர வந்தவர்கள் இவர்கள். காவல்துறையிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலும் சேர்ந்தார்கள்.

இராணுவத்தில் ‘மகர்’ சமூகத்துக்கு தனிப் பிரிவு இருந்தது. அம்பேத்கரின் தந்தை ‘மகர்’ பிரிவில் வேலை செய்தவர்தான். அதேபோல் இராணுவத்தில் ‘ஜாட்’, ‘யாதவர்’, ‘கூர்க்கா’ பிரிவுகள் எல்லாம் இருந்தன. ஆனால் வரலாற்றில் எந்த காலத்திலும் ‘பார்ப்பன’ப் பிரிவோ, ‘பனியா’ பிரிவோ இராணுவத்தில் இருந்ததே இல்லை.

கேள்வி : இந்த சமூகத்தினர்தான் உடல் வலிமையுள்ளவர்களாக இருந்தனர் என்பது காரணமாக இருக்கலாம் அல்லவா?

பதில் : உண்மை. சைவ சாப்பாட்டு முறை. இதில் முக்கிய பங்காற்றுகிறது. இப்போது மோடியும், அமீத்ஷாவும் யோகாதான் நமது தேசிய விளையாட்டு என்று கூறுகிறார்கள். ஆனால் இராணுவத்தில் சேர, யோகா அடிப்படையான தகுதியல்ல. ஓட்டம், வலிமையான உடல், விளையாட்டுகள்தான் இராணுவத்துக்கு முக்கியம். ‘தலித்’, ‘சூத்திரர்கள்’ உடல் உழைப்புக்காரர்கள் என்பதால், அவர்களால் இப்பயிற்சிக்கு தயாராக முடிகிறது. நமது தேசத்தைக் காப்பாற்ற யோகா எந்த அளவுக்கு உதவும்? பாபாராம்தேவ், சிறீ சிறீ ரவிசங்கர் அல்லது சத்குரு ஜக்கிவாசுக்களை இமயமலை எல்லையில் கொண்டு போய் நிறுத்த முடியுமா? அவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்துப் போராடி, எல்லையைக் காப்பாற்றுவார்களா?

மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று இப்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், இராணுவத்தில் சேர முன்னுரிமை கிடையாது. ஆக நாட்டுக்காக எல்லையில் எதிரிகளோடு போராடும் இராணுவத்தினரின் உணவு முறையை நீங்கள் அவமதிக்கிறீர்கள். யோகாவும் சைவ உணவும் பார்ப்பன-பனியாக்களின் உணவு. இந்தியாவைக் காப்பாற்றும் தகுதியில்லாத உணவு. நான் கேட்பது எல்லாம், இந்தியாவின் எல்லைகளைக் காப்பதில், இந்த பார்ப்பன-பனியா முதலாளி களுக்கு பொறுப்பு என்ன, என்பதுதான்.

உண்மையில் இவர்கள் தேசபக்தர்களாக இருப்பார்களேயானால், எல்லையில் நிற்கும் இராணுவத்தினரின் குடும்பத்தில் ஒருவருக்கு, இவர்களின் பெரும் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க முன் வருவார்களா? உரிய தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்குத் தருவார்களா என்றுதான் கேட்கிறேன். தொழில் பேரத்துக்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பறக்கும் அளவுக்கு அவர்களிடம் சொத்து குவிந்து கிடக்கிறது. இந்திய இராணுவத்தினரின் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இல்லையா? தேசத்தைக் காப்பாற்ற தகுதி தேவை. தகுதியுள்ள இராணுவத்தினர்தேவை. ஆனால், தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கும்போது இந்தத் தகுதிகளை ஏன் பார்க்க மறுக்கிறார்கள்? பார்ப்பன-பனியாக்கள், நாட்டைக் காக்கும் இராணுவத்தினரின் ‘தகுதி’, ‘திறமை’யை மதிக்கத் தயாராக இல்லை. இவர்கள் விவசாயிகளிடம் கைவினைக் கலைஞர்களிடம், பழங்குடி மக்களிடம் உள்ள ‘தகுதி’, ‘திறமை’களை மதிக்க மாட்டார்கள். அவர்கள் திறமைகளை அவமதிப்பார்கள். எனவே என்னுடைய வாதம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்க தகுதி வேண்டும் என்று கூறுகிறவர்களே உண்மையான தேச விரோதிகள். பார்ப்பனரோ பனியாக்களோ நாட்டின் உற்பத்திக்கு எந்த பங்களிப்பையும் வழங்காதவர்கள். இவர்கள் தான் தேசவிரோதிகள்.

கார்ப்பரேட் மூலதனம் – கார்ப்பரேட் சமூகப் பொறுப்புப் பற்றி எல்லாம் பேசுகிறது. ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு பரிவு காட்ட மாட்டார்கள். உதவி செய்ய முன்வர மாட்டார்கள். எனவே பெரும் தொழில் நிறுவனங்கள் ‘விவசாயிகள் பாதுகாப்புக்கான நிதி’ அமைப்பை உருவாக்க முன்வர வேண்டும். தங்களுடைய இலாபத்தில் ஒரு சதவீதமாவது இதற்காக ஒதுக்க வேண்டும். என்னுடைய மதிப்பிட்டின்படி இது 3 இலட்சம் கோடியை எட்டும். விவசாயிகள் தான் இந்த நாட்டின் சொத்துக்களை வளங்களை உற்பத்தி செய்கிறவர்கள்.

ஆதிவாசிகள், தலித்துகள், முடிவெட்டும் சமூகம், துணி வெளுக்கும் சமூகப் பிரிவினருக்கு தனியார் துறையில் 5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படவேண்டும். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசையாவிலிருந்து வீதிகளில் நடக்கும் வைசியர் வரை என்னை மிரட்டி எனது நூலை திரும்பப் பெறவேண்டும் என்கிறார்கள். ஆரிய வைசிய அமைப்பு – வன்முறை அமைப்பு அல்ல. அவர்கள் அஹிம்சை வாதிகள். ஆனால் ஆளும் பா.ஜ.க.வின் மேல் மட்டத்திலிருந்து எனக்கு எதிராக அச்சுறுத்தல் உருவாக்கப்படுகிறது. கும்பல்களைக் கொண்டு என்னை அழித்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். 2002ஆம் ஆண்டு ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டில், ‘சிவில் சமூகத்தில் ஆன்மிகப் பாசிசம்’ என்று கட்டுரை எழுதினேன். ‘இந்துத்துவ’ அறிவுஜீவிகள் பத்திரிகைகளில் எழுத என்னை அனுமதிக்கக் கூடாது என்று உஸ்மானிய பல்கலைப் பதிவாளருக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது நான் அந்தப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினேன். கடந்த ஆண்டு விஜயவாடாவில் வேதகாலத்திலிருந்து பார்ப்பனர்கள் பொருள் உற்பத்திக்கான உடல் உழைப்பில் பங்கேற்காதவர்கள் என்று பேசினேன். அதற்காக என்னுடைய உருவ பொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினார்கள். அப்போது என்னை ‘இலிகாடு’ (அறிவற்ற முரடன்) என்று கேலி பேசினார்கள். அப்போதுதான் என்னுடைய பெயருடன் எனது ஜாதிப் பெயரான இடையர்  (ஆடு மேய்ப்பவர்) என்பதையும் இணைத்துக் கொண்டேன். நான் ஆங்கிலக் கல்வியை அழுத்தமாக ஆதரிப்பவர். அதனாலேயே ஜாதியின் பெயரை ‘ஷெப்பர்டு’ (ளுhநயீநசன) என்று ஆங்கிலத்திலேயே சேர்த்துக் கொண்டேன், என்றார் அய்லய்யா.

‘பிரன்ட்லைன்’ ஏட்டிலிருந்து

நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்

You may also like...