ஜாதி ஒழிப்பு கற்பனை வாதம் அல்ல – ஜெயராணியுடன் நேர்காணல்

(மஞ்சள் நாடகத்துக்கு உரையாடல்களை எழுதிய ஜெயராணி நாடகம் உருவானதன் பின்னணி ஜாதி ஒழிப்புக்கான இயக்கத்தின் தேவையை விளக்கி“நிமிர்வோம்” இதழுக்கு அளித்த பேட்டி)

ஒரு எழுத்தாளரான நீங்கள் ஜெய்பீம் மன்றம் என்ற ஓர் அமைப்பைக் கட்டமைக்க வேண்டிய சூழல் எவ்வாறு ஏற்பட்டது?

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஓர் அமைப்பையோ இயக்கத் தையோ உருவாக்க வேண்டுமென்பது எனது எதிர்கால செயல்திட்டங்களில் ஒன்றாகக் கூட இருக்கவில்லை. எழுத்தாளர் என்று சொல்வது கூட பரந்துபட்ட அடையாளம். பத்திரிகையாளர் என்ற அடையாளமே எனக்கு சரியானதாக இருக்கும். நான் எழுத வந்த 18 ஆண்டுகளில் ஒரு செய்தியாளராக எத்தனையோ அமைப்புகளோடு பயணப்பட்டிருக்கிறேன். போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என அப்போதெல்லாம் சிறிய பெரிய அளவுகளில் என்ன செயல்பாடுகள் நடந்தாலும் என்னுடைய எஸ். எல். ஆர் கேமராவோடு என்னை பார்க்க முடியும். என் சக பத்திரிகையாளர்கள், தோழிகள் வெவ்வேறு அமைப்புகளோடு இணைந்திருந்த காலகட்டம் அது. ஆனாலும் எனக்கு எந்த அமைப்பிலும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை. அழைப்பு வந்த போதும் அப்படியரு எண்ணமே எழவில்லை. ஏனெனில் பத்திரிகையாளர் என்ற அடையாளத்தில் இருந்து விலகிப் போகாமல் இருப்பதில் எனக்கிருந்த உறுதி. என்னை பொறுத்தவரை ஒரு பத்திரிகையாளராக இருப்பதே சமூக செயல்பாடுதான். இங்கே நூற்றுக்கணக்கான அமைப்புகளும், இயக்கங்களும் இருக்கின்றன. எவரொருவர் சமூகத் தளத்தில் இயங்கத் தொடங்கினாலும் அது அமைப்பு கட்டுவதில்தான் முடிகிறது. இதை நான் குறையாக அன்றி சமூக எதார்த்தமாகவே பதிவு செய்கிறேன். எவ்வளவோஅமைப்புகளோடுஒரு பத்திரிகையாளராக அணுக்கமாக இருந்ததில் நான் கண்டுணர்ந்த விஷயம், பல நூற்றாண்டு காலமாக சக மனிதர்களை பிளவுபடுத்தி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, இழிவுபடுத்தி வைத்திருக்கும் இந்திய நாட்டின் அடிப்படை பிரச்னையான சாதியைஒழிப்பதுஅவற்றின்செயல்திட்டங்களில் இல்லவே இல்லை என்பதை. இது மிகவும் வேதனையான விஷயம். சாதி ஒழிப்பிற்கான ஓர் இயக்கமென்பது சென்ற தலைமுறையோடு முடிந்துவிட்டதைப் போன்ற ஓர் அவலச்சூழலே இங்கே நிலவுகிறது. இன்னும் நேரிடையாக சொல்ல வேண்டுமெனில் அம்பேத்கர், பெரியார் காலகட்டத்திற்கு பிறகு சாதி ஒழிப்பு எவரது செயல் திட்டத்திலும் முதன்மைக் கூறாக இல்லை. இந்த சூழலில் தான் சாதி ஒழிப்புக்கென ஓர் அமைப்புக்கான தேவையை உணர்ந்தோம்.

சாதிய வன்கொடுமைகள் நிகழும் போதெல்லாம் முன்னெப்போதையும் விட அமைப்புகளும் ஊடகங்களும்எதிர்வினை ஆற்றுவது இப்போது சாத்தியப்பட்டிருக்கிறது தானே!

உண்மைதான். நாமெல்லோரும் ஊடகங்களின் பரபரப்பிற்கு எவ்வளவு அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதற்கான சான்று அது. காட்சி ஊடகங்கள் எந்த கொலையை பரபரப் பாக்குகின்றனவோ அப்போது சமூகமும் பரபரப் படைகிறது. சாதிய வன்கொலைகளை ஒரு குற்றச்சம்பவமாக பதிவு செய்யும் ஊடகங்களில் எதுவும் சாதி ஒழிப்பை அதற்கான தீர்வாக விவாதிப்பதில்லை. ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் தீண்டாமை, வன்புணர்ச்சிகளுக்கு எதிராகவும் பேசுகிறவர்கள் அரசையும் காவல்துறையையும் சாடுகின்றனரே தவிர சாதியை ஒழிக்க வேண்டுமென்ற தீர்வை முன் வைப்பதில்லை. உண்மையில், சாதி ஒழிப்புக்கும் எதிர்ப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சாதி எதிர்ப்பென்பது ஓர் உணர்வு. அதை ஒருவர் தனக்குள்ளே வைத்துக் கொண்டு வன்கொடுமைகளுக்கு எதிராக மட்டும் பேசுவதன் மூலம் வடிகால் தேடிக் கொள்ளலாம்.

ஆனால் சாதி ஒழிப்பு அவ்வாறானதல்ல. அது பிடிவாதமான செயல்பாட்டைக் கோருவது. வன்கொடுமைகள் நிகழ்வதற்கு முன்பான வருமுன் காக்கும் களப்பணி அது. மக்களுக்குள் இருக்கும் பிரிவினைவாதங்களை களைந்து ஒன்றிணைக்கயாரேனும் வேலைசெய்கிறார்களா? 70 ஆண்டுகால சுதந்திரத்தில் இந்தியாவின் ஊர்-சேரி கட்டமைப்பை கூட நம்மால் மாற்ற முடியவில்லையே! அது சமூக மற்றும் அரசியல் அமைப்புகளின் தோல்வி இல்லையா? இன்றைய அமைப்புகளுக்கு வெவ்வேறு நோக்கங்களும் இலக்குகளும் இருக்கின்றன. ஆனால் சாதி ஒழிப்பிற்கு அதில் இடமிருக்கிறதா என்பதும், ஆம் எனில் பட்டியலில் எத்தனையாவது இடம் என்பதுவும் மிகப் பெரிய கேள்வி. ஜெய்பீம் மன்றம் இந்த பின்னணியில் தான் உருவானது.

 

சாதிஒழிப்பை வலியுறுத்தியும் மையப்படுத்தியும் நான்தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். சாதியை ஒழித்தால் மட்டுமே இச்சமூகத்தில் எந்த சமூகப் புரட்சியும் நிகழ்த்த முடியும் என்று நம்புகிற சில நண்பர்கள் ஒன்றிணைந்து செயல்பட நினைத்தோம். எங்களுக்கான ஒருகுடை ஜெய்பீம் மன்றம். எங்களது ஒட்டுமொத்த செயல்பாடும் இரண்டே வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும். அது, ’சாதி ஒழிப்பு’. நாங்கள் என்ன செய்தாலும் ’சாதி ஒழிப்பு’ என உரக்க உச்சரிப்போம். எங்கள் ஓரிருவரின் குரல் பல குரல்களாக மாறி, சமூகத்தின் குரலாக மாற வேண்டுமென்பதே மன்றத்தின் குறிக்கோள். . இச்சமூகத்தின் எல்லா கேடுகளுக்கும் சாதிதான் அடிப்படையாக இருக்கிறது. ஆனாலும் சாதியை இன்றளவிலும் கூட உடனே ஒழித்துக்கட்ட வேண்டிய தீமையாக யாரும் கையிலெடுக்கவில்லை. அவ்வாறு கையிலெடுக்க வேண்டிய நெருக்கடியைஜெய்பீம் மன்றம் உருவாக்கும். ஜெய்பீம் மன்றம் ஒரு பண்பாட்டு அமைப்பு. மனிதர்களிடையேயான நூற்றாண்டு வன்மத்தையும் வெறுப்பையும் போக்கும் சாதி ஒழிப்பு எனும் பண்பாட்டு மாற்றத்திற்காக அது செயல்படும்.

சாதி ஒழிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்ட ஓர் அமைப்பின் தேவையை நீங்கள் உணர்ந்திருந்த போதும் அதை உடனடியாக கட்டமைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்திய சூழல் என்ன?

2015 சென்னை வெள்ளம். இந்த மாநகரமே வெள்ளத்தில் மூழ்கிய போது பொது சமூகத்தில் பலரும் குறிப்பாக எந்த அமைப்பின் சார்பும் இல்லாத இளைஞர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டனர். எங்கும் மனிதம் மனிதம் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின்போது ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டன. மயிலாப்பூரில் மேட்டுக்குடிகள் வசிக்கும் பகுதிகளில் உடனடியாக நீர் வடிக்கப்பட்டு மின்சாரவசதி செய்துகொடுக்கப்பட்ட நிலையில் அம்பேத்கார் பாலம் பகுதியில் வசிக்கும் தலித் மக்களுக்கு ஒரு வார காலமாகியும் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. கடலூர் மாவட்டத்திலும் இதே நிலை. தலித் குடியிருப்புகள் திட்டமிட்டு கைவிடப்பட்டன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்கு உயிரை பணயம் வைக்கத் தயாராக இருந்த பொதுச் சமூகம் மறுசீரமைப்புப் பணிக்கு மட்டும் வரவில்லை. பேரிடரில் சிதைந்த மாநகரின் மறுசீரமைப்பு என்பது குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் தானே தொடங்கு கிறது. கழிவுகளை அப்புறப்படுத்த தமிழகம் முழுக்கவிருந்து நகராட்சி வாகனங்களை துப்புரவுபணியாளர்கள் பல்வேறு பொய்களைச் சொல்லி அழைத்து வரப்பட்டனர். இங்கு அவர்களுக்கு நல்ல உணவோ தங்குமிடமோ அடிப்படைவசதிகளோசெய்துதரப்படவில்லை. எட்டு நாட்கள் சுழற்சி அடிப்படையில் 12 மணி நேரம் வேலை வாங்கப்பட்டு பேசிய கூலியைக் கூட தராமல் அவர்கள் அடிமைகளைப் போல வேலை வாங்கப்பட்டனர். அந்நேரத்தில் நான் தோழர் பாரதி செல்வா மற்றும் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் துப்புரவுப் பணியாளர்களோடு வேலை செய்தோம். மனிதம் மனிதம் என்று பிதற்றியவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு கை கொடுக்காமல் ஒளிந்து கொண்டனர். ’உங்கள் மனிதம் ஜாதியற்றதா?’ என்ற கட்டுரையை ஆனந்தவிகடனில் எழுதினேன். அந்த நேரத்தில் தான் தலப்பாக்கட்டி ஓட்டல் கழிவுத் தொட்டிக்குள் இறக்கிவிடப்பட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட துயரமும் நடந்தது. நாங்கள் கண்ணகி நகரில் அந்த நால்வரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றோம். இதுவொரு விபத்து என்பதைப் போல அந்த நால்வரின் உறவினர்களும் இப்படி அற்பாயுசுல போயிட்டியே என்று கதறி அழுது கொண்டிருந்தனர். மலக்குழி மரணங்கள் விபத்தல்ல. . அதுவொரு சமூகப் படுகொலை, அரச பயங்கரவாதம் என்பதை உரக்கக் கூற விரும்பினோம். கண்ணகி நகரிலிருந்து திரும்பி வரும் போது ஜெய்பீம் மன்றம் உருவாகி இருந்தது.

 

மஞ்சள் நாடகம் மற்றும் அதனை ஒட்டிய பிரச்சாரம் பற்றி சொல்லுங்கள்.

மலத்தை ஒரு மனிதர் கையால் அள்ளுவதும், தலையில் சுமப்பதும், மலக்குழிக்குள் மூழ்கி எழுவதும் நாம் வாழ்கிற காலத்தில் எப்படி எவ்வித சலனமும் இல்லாமல் நிகழ முடியும்? அப்படியெனில் மனித உரிமைகள் குறித்தும் மாண்பு குறித்தும் நமக்கெல்லாம் என்ன சுரணை இருக்கிறது? உறங்கிக் கிடக்கும் அல்லது அவ்வாறு நடித்துக் கொண்டிருக்கும் பொதுச் சமூகத்தின் சுரணையை கிளறுகிற வகையில் ஒரு பண்பாட்டுப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்ததன் விளைவே மஞ் சள். 2016 மார்ச் மாதம் இயக்குனர் பா. ரஞ் சித்திடமும் ஸ்ரீஜித்திடம் பேசிநாடகத்திற்கானத் திட்டமிடலைத்தொடங்கினோம்.தொடக்கத்தில் பாஷா சிங் அவர்களே நாடகப் பிரதியை எழுதுவதாக இருந்தது. ஆனால் நேரமின்மை காரணமாக அவரால் எழுத முடியவில்லை. இந்த நாடகத்திற்காக ஓராண்டு காலம் வேலை செய்தோம். இந்நாடகத்தில் நடித்த கலைஞர்கள் தொடர்ச்சியான களப்பணியிலும் பயிலரங்குகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். யாரும் முகநூலில் இது குறித்து எந்த பதிவும் போடக் கூடாது என்பது மன்றத்தின் விதிமுறை. நாம் ஒரு முக்கியமான சமூகப் பிரச்னைக்காக நிற்கிறோம் என்பதை கலைஞர்களுக்கு புரிய வைத்து ஓராண்டு காலமும் கலைஞர்கள் சோர்வடைந்துவிடாதவாறு ஸ்ரீஜித் பார்த்துக் கொண்டார். அதே போல் இந்நாடகத்தின் தயாரிப்பாளரான ரஞ்சித்தை ஓராண்டு கழித்து நாடகம் தயாரான நிலையில் தான் இரண்டாவது முறை சந்தித்தோம். மேடையேற்ற நாடகம் தயார் என்ற நிலையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் நீலம் புரொடக்ஷன்ஸ் முழுமையாக இறங்கியது. எங்களைப் பொறுத்தவரை இது நாடகம் அல்ல போராட்டம். குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்கேனும் இந்நாடகத்தை பல இடங்களிலும் மேடை ஏற்றுவோம்.

 

இது தவிர ஜெய் பீம் மன்றம் வேறு ஏதேனும் செயற் பாடுகளில் ஈடுபட்டுள்ளதா?

இந்த நாடகத்தைப் போல, பல செயல் திட்டங்களை வைத்திருக்கிறோம். திருப்பி திருப்பி சாதி ஒழிப்பை தலித் மக்களிடமே பேசிக் கொண்டிருக்காமல், பொதுச் சமூகத்தை சென்றடைவது ஒன்றே மன்றத்தின் இலக்கு. துப்புரவு பணியாளர்களின் நிலையை எடுத்துரைக்கும் வகையில் ’எல்லாம் சாதிக்காக’ ’மஞ்சள் எதிர்ப்புப் பாடல்’ என இரண்டு போராட்டப் பாடல்களை வெளியிட்டிருக்கிறோம். இசையமைப்பாளர் சுரேன் மற்றும் நிரோ பிரபாகரன் இருவரும் இந்த விஷயத்தின் தன்மையை உணர்ந்து தானே முன் வந்து இசையமைத்துக் கொடுத்தனர். சாதி ஒழிப்புக்கென இசை ஆல்பம் ஒன்றை வெளியிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

இது தவிர, துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான பயிலரங்குகளை நடத்தி வருகிறோம்.16-22வயதிற்குட்பட்டகுழந்தைகள்/ இளைஞர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் அது. பல்வேறு துறை சார்ந்தவர்கள் வாயிலாக துப்புரவுப் பணி எவ்வாறு ஒரு சாதிய இழிவாக நீடிக்கிறது, அது எத்தகைய ஆபத்துகளை உள்ளடக்கி இருக்கிறது, சாதி அமைப்பில் தலித் மக்களின் நிலை என முழுமையானப் புரிதலை விதைப்பதே இப்பயிலரங்கின் நோக்கம். தன் மீது சுமத்தப்பட்ட இழிவிலிருந்து விலகிக் கொள்ள இந்த அறிவூட்டல் அவர்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

 

 

கையால் மலம் அள்ளும் இழிவை ஒழிப்பதற்கான முன் நிபந்தனையாக ஜாதி ஒழிப்பை வைப்பது என்பது ஒரு கற்பனா வாதம் என்று ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறதே!

சாதிஒழிப்பின் முதல் படி கையால் மலமள்ளும் இழிவை ஒழிப்பதில் தொடங்குவதாக நாங்கள் நம்புகிறோம். அதே போல சாதி ஒழிப்பைப் பேசாமல் கையால் மலமள்ளும் இழிவு ஒழிப்பு குறித்து பேசக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். கையால் மலமள்ளும் இழிவு என்பது பலரும் சுருக்கிக் குறிப்பிடுவதைப் போல ஆபத்தானத் தொழிலோ, நிலப்பிரபுத்துவத்தில் நிகழும் உழைப்புச் சுரண்டலோ அல்ல. அது அடிப்படையில் மானுட வன்மமான உச்சபட்ச சாதிய இழிவு. மனித நாகரிகத்தின் அத்தனை வளர்ச்சிகளையும் ஒரேயடியில் போட்டு சிதைக்கும் மிகக் கொடூரமான வழக்கம். குறிப்பிட்ட சமூக மக்களுக்கு இது அவர்கள் மட்டுமே செய்தாக வேண்டிய குலக் கடமையாக சாதியக் கட்டமைப்பு வகைப்படுத்தி வைத்திருக்கிறது. பார்ப்பனர்களே குருக்களாக முடியும் என்பதைப் போல அருந்ததியர்களே இந்த இழிவேலையை செய்ய வேண்டும் என்பது சாதி அமைப்பின் கட்டளை! வறுமை காரணமாகவோ,சமூகச்சூழல் காரணமாகவோ வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் இந்த இழிவில் இருக்கலாம். ஆனால் அவை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத விதிவிலக்கு மட்டுமே. கையால் மலமள்ளும் இழிவிற்கு சாதியே காரணம் எனும் போது சாதி ஒழிப்பை வலியுறுத்தாமல் வெறுமனே அந்த இழிவை மட்டும் ஒழிக்க வேண்டுமெனக் கோருவது மேம்போக்கான வாதமாகவே இருக்கும். ஒரு சாதிய இழிவு ஒழிய வேண்டுமெனில் சாதி ஒழிய வேண்டுமெனச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. நம்முடைய இலக்கு அதுதானே. பண்பாட்டு மாற்றத்திற்கான கருத்தியல் தளத்தில் அந்த வாதம் அப்படி இருப்பதுதான் சரி.

செயல்பாட்டுத்தளத்தில், இந்த இழிவை ஒழிக்க அரசை வலியுறுத்தும் போது துப்புரவுத்துறையை முற்றிலும் நவீனப்படுத்த வேண்டுமெனக் கேட்கிறோம். எவ்வளவு முன்னேற்றங்கள் நிகழ்கிற இன்றைய நிலையில் துப்புரவுத் துறையை மட்டும் ஏன் நவீனப்படுத்தாமல் இருக்கிறோம்.

 

சாதி புத்தி தானே! பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் எந்த சாதிய இழிவை ஒழிக்கவும் சாதி ஒழிப்பைத்தான் முன் நிபந்தனையாக வைக்கிறார். அது கற்பனாவாதம் அல்ல. அதுதான் இலக்கு; அதை நோக்கி நகர்ந்து போங்கள் என்பதே அதற்கான அர்த்தம். சாதி ஒழிப்பை நோக்கி நாம் தீர்க்கமாக முன்னகரும் போது வன்கொடுமைகள், தீண்டாமைகள், இதுபோன்ற இழிவுகளெல்லாம் தானாக அழிந்து போகும். சாதியை ஒழிக்க விரும்பாமல் அல்லது முயற்சிக்காமல் வெறுமனே இழிவை ஒழிக்கிறோம், தீண்டாமையை ஒழிக்கிறோம் என்பது மண்கெட்டுப் போன பூமியில் விளைந்த ஒவ்வொரு விஷப்புல்லையும் பிடுங்குவதற்கு சமம். விஷப்புல்லை பிடுங்க வேண்டுமா என்றால் ஆம் பிடுங்க வேண்டும்தான். ஆனால் மண்ணே நஞ்சேறி இருக்கும் போது அடுத்து முளைப்பதும் விஷமாகத் தானே போகும்?! நாம் மண்ணை பண்படுத்த வேண்டும். இந்த மண் பண்பட வேண்டுமெனில் சாதி எனும் நஞ்சு நீக்கப்பட வேண்டும். சாதி ஒழிப்பு என்பது அடிப்படையில் மனமாற்றம், சிந்தனை மாற்றத்தால், அறிவூட்டுதலால் தான் சாத்தியப்படும். சட்டங்களாலோ திட்டங்களாலோ அல்ல. சக மனிதர் மீது பற்று கொள்ளுதலே மனித சமூகத்திற்கான பண்படுதல் முறை அது. தொடர்ச்சியான பண்பாட்டுச் செயல்பாடுகளால் அந்த பண்படுதலை சாத்தியப்படுத்த முடியும். ஆக, பண்பாட்டுத் தளத்தில் பணி செய்யும் போது சாதிஒழிப்பே முன்நிபந்தனை. இதில்எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.

மிக நேரடியாக காந்தியையும் மோடியையும் அரசையும் அனைத்திற்கும் மேலாக பார்ப்பனியத்தையும் விமர்சிக்கும்வசனங்கள் நாடகம் நெடுகிலும் இருந்தன. இந்தியச் சூழலில் தொடுவதற்கு அச்சப்படும் இவற்றை நீங்கள் வெளிப்படையாகப் பேசியதால் நாடகத்தை பிற இடங்களில் நடத்த தடைகள் வருமென நினைக்கிறீர்களா?

காந்தியையும் ஆளும் அரசையும் பார்ப்பனியத்தையும் அண்ணல் அம்பேத்கர் மற்றும் பெரியார் அளவுக்கு சாடியவர்கள் யாரும் உண்டா? ஜனநாயகத்திற்கான விதை தூவப்படாத, கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான ஓர்மையே இல்லாத அந்த காலத்திலேயே அது சாத்தியப் பட்டது எனில் எல்லாம் வாய்த்திருக்கிற இந்த சூழலில் நம்மால் முடியாதா? எங்களது நோக்கம் அரசை விமர்சிப்பது அல்ல. சமூகத்தை பண்படுத்துவது. சாதி குற்றம் என கற்பிக்கும் களங்களை உருவாக்குவது. இந்நாடகத்தின் அடிப்படை மோடியை தாக்குவது அல்ல. சாதியை ஒழிப்பது. இந்த சாதி அமைப்புதான் மோடிகளையும் காந்திகளையும் உருவாக்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மோடி இந்நாட்டின் பிரதமர். அதுவொன்றுதான் சாமானிய இந்துக்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகிறது. மற்றபடி சாதி குறித்தும் ஒடுக்கப்பட்டோர் குறித்தும் சிறுபான்மையினர் பற்றியும் மோடிக்கு என்ன வன்மம் இருக்கிறதோ அதுதான் ஒவ்வொரு இந்துவுக்கும் இருக்கிறது. சாமானியர்களின்/ சமூகத்தின் வன்மம் பற்றி தான் நாம்முதலில் கவலைப்பட வேண்டும். அதுதான் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். சமூகம் சரியாக இருக்கும் போது மட்டுமே சரியாக செயல்பட்டாக வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு உருவாகும். கடமையைச் செய்தால் பலனை எதிர்பார்க்கச் சொல்கிறார் அம்பேத்கர். தடை வந்தால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.

 

நாடகத்திற்கு பொதுமக்கள் மத்தியிலான வரவேற்பு எப்படி உள்ளது? இதனை பரவலாக எடுத்துச் செல்வது குறித்து உங்கள் திட்டம் என்ன?

நாடகமே ஒரு காலாவதியான கலை வடிவமாக கருதப்படுகிற காலகட்டம் இது. அதிலும் சாதி ஒழிப்பு எனும் சமூகக் கருத்தை தாங்கி இருக்கிற இந்நாடகத்தை நூற்றுக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு பெரிய மேடையில்தான் அரங்கேற்ற வேண்டும் என்பதில் ஜெய்பீம் மன்றத்தினர் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருந்தோம். காமராஜர் அரங்கம் தான் வேண்டும் என்று சொன்னபோது ரஞ்சித்திற்குகூட அது ஆச்சர்ய மாகவே இருந்தது. ஆனால் சிறு விவாதம் கூட செய்யாமல் சரி என்று சொன்னார். நாடகத்தை அரங்கேற்றுவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் திட்டமிட்டபடி பிரசாரத்தைத் தொடங்கினோம். சாதி ஒழிப்பு கருத்தியலில் உடன்பாடுள்ள பிரபலங்கள், தலைவர்களை பிரச்சாரத்தில் ஒருங்கிணைத்தோம்.

 

ஏறக்குறைய ஐம்பது பேரிடம் பேட்டி எடுத்து பிரச்சார வீடியோக்களை தயார் செய்தோம். சாதி ஒழிப்பை தலித் மக்களும் தலித் அமைப்புகளுமே பேசிக் கொண்டிருக்கிற பேரவலச் சூழலை மாற்றுவதற்காகவே பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்க பிரபலங்களின் வாயால் சாதியை ஒழிப்போம் என சொல்ல வைத்தோம். இரவு பகல் பாராமல் பல நாட்கள் வேலை நடந்தது. பொதுவான கலை நிகழ்ச்சி களுக்கு விளம்பர நிறுவனங்கள் செய்வதை போல பிரிண்ட் பார்ட்னர், சேனல் பார்ட்னர், ஆன்லைன் பார்ட்னரை இணைத் தோம். இவ்விஷயத்தில் விகடன் மற்றும் நியூஸ் 18 இருவரும் தமது கடமையை சமூகப் பொறுப் புணர்வுடன் சிறப்பாக செய்தனர்.

நியூஸ் 18 நிகழ்ச்சிக்கு முந்தைய 10 நாட்களும் சாதிஒழிப்பு மற்றும்கையால்மலமள்ளும் இழிவு குறித்து செய்தித் தொகுப்பை வெளியிட்டது. ஜெய்பீம் மன்றத்தின் முகநூல் பக்கத்தின் வாயிலாக பிரச்சாரத்தை மேற்கொண்டோம். மஞ்சள் நாடகத்தை காண வெவ்வேறு ஊர்களில் இருந்தும் நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் வந்திருந்தனர். கூட்டம் வந்தது மட்டுமல்ல, நாடகம் அரங்கேறியஇரண்டரைமணி நேரமும் அக்கூட்டத்தின் எதிர்வினை புதிய நம்பிக் கைகளை எங்களுக்கு கொடுத்திருக்கிறது. தமிழகத்தின்பல்வேறுபகுதிகளிலும் நாடகத்தை மேடையேற்ற அழைப்புகள் வருகின்றன. அந்தந்த பகுதிகளில் உள்ள அமைப்புகளோடு இணைந்து பொதுமக்களிடையே மஞ்சள் நாடகம் அரங்கேற்றப்படும்.

ஜெய்பீம்மன்றத்தின்அடுத்தக்கட்டசெயல்திட்டங்கள் என்ன?

நிறைய இளைஞர்கள் மன்றத்தோடு இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். சாதியற்றவர்கள் சமூகம் (கம்யூன்) ஒன்றை உருவாக்க இருக்கிறோம்.

சந்திப்பு : பூங்குழலி

நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்

You may also like...