இரயில்வே துறையை தனியார் மயமாக்க சதி!

இரயில்வே துறையை மத்திய அரசாங்கம் படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனைக் கண்டிக்கின்றோம். தனியாருக்குத் தாரை வார்க்கும் செயல்களை மத்தியஅரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளருமான தபன் சென் கூறினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன் சென் பேசியதாவது:

‘‘இந்தியாவின் பிரதானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்படும் ரயில்வே துறையை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகத் தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம்எடுத்துவரும் நாசகாரக் கொள்கைகளுக்கு எதிராக என்னுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வேயில் துப்புரவுப் பணிகள், உணவு வழங்கும் பணிகள், நிர்வாகப் பணிகள் முதலானவை – அவுட்சோர்சிங் மூலமாகத் தனியாரிடம் தரப்பட்டு விட்டன.

ஒவ்வோராண்டும் 150 இரயில் என்ஜின்கள் (லோகோமோடிவ்ஸ்) வாங்குவதற்கான உத்தரவாதத் துடன் அமெரிக்க நிறுவனமானஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடனும், பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டாம் நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தினை மத்திய அரசு செய்திருப்பதன்மூலம், இந்தியாவில் சித்தரஞ்சனிலும், வாரணாசியிலும் செயல்பட்டு வரும் ரயில் எஞ்சின் உற்பத்திப்பிரிவுகளையும், மற்றும் ‘பெல்’நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொள்திறனையும் மூடுவதற்கு வழிசெய்து தந்திருக்கிறது. ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கும் ஆர்டர்களை அளித்திருக் கிறது. அதன்மூலம் நம் நாட்டிலுள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைகளுக்கும் மூடுவிழா காண நடவடிக்கை எடுத்திருக்கிறது. அடுத்ததாக, நாட்டில் உள்ள 407ரயில் நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைத்திட இருக்கின்றனர்.

பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள 23 ரயில் நிலையங்கள் ஏற்கெனவே இதற்காக இறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றன. டெண்டர்கள் கேட்கப்பட்டிருக் கின்றன. டெண்டரில் உள்ள நிபந்தனைகளின்படி இவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கும் ரயில் நிலையங் களில் பணியிலுள்ள ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்கான நடவடிக்கை களும் நடந்துகொண்டிருக்கின்றன.

அடுத்ததாக, ரயில்வே வளர்ச்சி அதிகாரக்குழுமம் (ரயில்வே டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) என்னும் ஓர் அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பணி என்ன?

இந்திய இரயில்வேயின் கீழ் உள்ள ரயில்வே பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுப்பது தான். இது முதலாவதாகும். இரண்டாவதாக, ரயில்வே பயணிகள் கட்டணங்கள் மற்றும் சரக்குக்கட்டணங்கள் உற்பத்திச் செல வினத்தின் அடிப்படையில் (உடிளவ யௌளை) இனி அமைந்திடும். மானியங்கள் முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுவிடும். தற்சமயம் ரயில்வே கட்டணங்களில்

47 சதவீத அளவிற்கு மானியத் தொகை இருக்கிறது.

எனவே அரசின் புதிய கட்டணங்கள் செயல் படுத்தப்பட்டால் இப்போதுள்ள கட்டணங்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். இவை மக்கள் மீதான சுமைகளாகும். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர், ‘இந்தியாவின் உற்பத்தி செய்வதற்குப்’ பதிலாக, இந்தியாவை முற்றிலுமாக அழித்திடும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். இது மிகவும் மோசமான தேச விரோத நடவடிக்கையாகும். இவை அனைத்தை யும் தவிர்த்திட வேண்டும் என்று இந்த அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இல்லையேல், நாட்டு மக்கள் தங்கள் ஒற்றுமை பலத்தின் மூலமாக இந்த நாசகர நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவார்கள். அரசின் இந்த ஊழியர் விரோத, தேச விரோத நடவடிக்கை களுக்கு எதிராக, ஏற்கெனவே ரயில்வே ஊழியர்களும், தொழிற் சங்கங்களும் போராட்டப்பாதையில் அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள் என்றார், தபன் சென்.

பெரியார் முழக்கம் 09112017 இதழ்

You may also like...