தலையங்கம்‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை
காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். இல்லை; அதற்கான சான்றுகளும் இல்லை என்று பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் சாதிக்கிறார்கள். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரரா? அதில் உறுப்பினரா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கோட்சே ஒரு ‘சித்பவன்’ பார்ப்பனர்; அவரை காந்திக்கு எதிராக துப்பாக்கி தூக்க வைத்தது. அவரிடமிருந்த ‘இந்துத்துவம்’ என்ற அரசியல் மதவெறி என்பதை அவர்கள் மூடிமறைக்கப் பார்க்கிறார்கள். காந்தி கொலையில் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சே, நாராயணன் ஆப்தே இருவருமே பார்ப்பனர்கள். “சங்பரிவார் குடும்பத்தில் வளர்ந்தவர்கள் நாங்கள்” என்று இந்தக் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையில் 15 ஆண்டுகாலம் கழித்து பிறகு விடுதலை செய்யப்பட்ட நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே வெளிப்படையாகவே கூறுகிறார்.
இப்போது உச்சநீதிமன்றத்தில் காந்தி கொலை குறித்து ஒரு வழக்கு – காந்தி கொலை நடந்து முடிந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது. மும்பையைச் சார்ந்த ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பைச் சார்ந்த டாக்டர் பங்கஜ் பத்னிஸ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார். ‘காந்தியை மூன்று முறை மட்டுமே கோட்சே சுட்டார். ஆனால் காந்தி உடலில் 4ஆவது குண்டு பாய்ந்திருக்கிறது. அது எப்படி வந்தது? அந்த நான்காவது குண்டுதான் காந்தியின் உயிரை எடுத்திருக்கிறது. இது குறித்து விசாரிக்க 1966ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி கபூர் ஆணையம் இது குறித்து விசாரிக்கவில்லை. கோட்சே பயன்படுத்திய இத்தாலி பெரட்டராகம் சிறிய துப்பாக்கியை அவருக்கு தந்தவர் கங்காதர் தாண்டவே என்பவர். இந்த தாண்டவே, ஜெகதீஸ் கோயல் என்பவரிடமிருந்து இந்த துப்பாக்கியை பெற்றிருக்கிறார். இதற்கு மேல் 4ஆவது துப்பாக்கி குண்டு எங்கிருந்து வந்தது? இதை விசாரிக்க வேண்டும் என்கிறார் மனுதாரர்.
காந்தி உடலில் பாய்ந்த மூன்று குண்டுகளின் துப்பாக்கி பதிவு எண்.606824. ஆனால் காந்தியின் உடலில் பாய்ந்த நான்காவது துப்பாக்கி குண்டு வேறு துப்பாக்கியிலிருந்து வந்தது. அதன் பதிவு எண் வேறு என்று 1948ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காவல்துறை விசாரணை குறிப்பிடு வதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த வழக்குக்கு நீதிமன்றத்துக்கு ஆலோசனை தந்த உதவிட நீதிபதிகள் அமரேந்தர் என்ற மூத்த வழக்கறிஞரை நியமித்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து இந்து மகாசபையின் தேசியத் துணைத் தலைவராக இருக்கும் அஷோக் சர்மா எனும் பார்ப்பனர் விடுத்துள்ள அறிக்கையை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு வெளியிட்டுள்ளது. அவர் கூறுகிறார்: “காந்தியை சுட்டுக் கொன்றது இந்து மகாசபையைச் சார்ந்த கோட்சேதான். அது எங்கள் பெருமை. நான்காவது குண்டு குறித்து தேவையில்லாமல் சர்ச்சையை எழுப்பி வருகிறார்கள். பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.சும் இந்து மகாசபை மரபை அழிக்கக் கூடாது. கோட்சேயின் அடையாளத்தை இந்து மகாசபையி லிருந்து பிரிக்க முடியாது” – என்று கூறியிருக்கிறார். கோட்சேவுக்கு சிலை வைக்கும் முயற்சிகள்கூட கடந்த காலத்தில் நடந்தன.
காந்தியை துளைத்த அதே குண்டுகள்தான், இப்போது தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷையும் துளைத்திருக்கின்றன. மதவெறி சக்திகளை எதிர்த்தவர்கள்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் சிந்தனைகளை பரப்பியவர்கள் என்பதற்காகவே கருத்துத் தளத்தில் பணியாற்றியவர்களை குறி வைக்கின்றனர் கோட்சேவின் வாரிசுகள்.
பார்ப்பன வேதமதம் – வரலற்றில் ‘வேத தர்மங்களை’ எதிர்த்தவர்களுக்கு அசுரர்கள் பட்டம் சூட்டி அவர்களை அழித்தே வந்திருக்கிறது. ‘தேவ-அசுர’ப் போராட்டங்கள் என்பவைகளே ஆரியர்-திராவிடர் போராட்டம்தான். ‘அசுரர்’களை அழிப்பதற்கு சூழ்ச்சிகளையும் திரைமறைவு சதிகளையும் பார்ப்பனர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். திராவிடர்களான அசுரர்கள் அழிப்பையே ‘தீபாவளி’, ‘சூரம்சம்ஹாரம்’, ‘பிரம்மோத்சவம்’ என்ற பண்டிகைத் திருவிழாக்களாக்கி அதை பாதிக்கப்பட்ட ‘திராவிடர்’ களையே கொண்டாட வைப்பதில் பார்ப்பனியம் வெற்றி பெற்று விட்டது.
மசூதியை இடித்துத் தள்ளியவர்கள்; மாட்டுக்கறி உண்போர்; மாட்டுத் தோல் வணிகம் செய்வோரை கொலை செய்கிறவர்கள்; எதிர்த்துக் கேள்வி கேட்டால் ‘தேசவிரோத’ சட்டத்தை ஏவி அடக்குகிறவர்கள் – இந்துத்துவப் பார்ப்பனிய சக்திகள்தான். வேதகாலத்தில் தொடங்கிய இந்த அழிப்பும் கொலையும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காந்தியை கொலை செய்தது நாங்களே என்று இப்போதும் அவர்கள் மார்தட்டுகிறார்கள்.
சமூக விடுதலைக்குப் போராடும் திராவிடத் தமிழர்கள், இந்தப் போராட்டத்தின் முதன்மையான எதிரிகளை இப்போதாவது அடையாளம் காண வேண்டும்.
பெரியார் முழக்கம் 02112017 இதழ்