உச்சநீதிமன்றத்தின் இரட்டை அணுகுமுறை ‘சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி கருத்துரிமையைப் பறிக்க முடியாது’-முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் பேச்சு
பேரறிவாளனை விடுதலை செய்க!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி அரி பரந்தாமன் தனது உரையில் வலியுறுத்தினார்.
காந்தி கொலையில் ஆயுள் தண்டனைக்கு உள்ளான கோபால் கோட்சேயை 15 வருடங்களில் விடுதலை செய்யும்போது பேரறிவாளனை
26 வருடங்களுக்குப் பிறகும் விடுதலை செய்ய மறுப்பது என்ன நியாயம்? என்று கேட்டார்
நீதிபதி அரி பரந்தாமன்.
‘சட்டம் ஒழுங்கும் பொது ஒழுங்கும் வெவ்வேறானது’ என்று கூறிய முன்னாள் நீதிபதி அரி. பரந்தாமன், ‘சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி கருத்துரிமையைப் பறிப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்றார்.
மயிலாப்பூரில் செப்.26 அன்று நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, சுயமரியாதை கால்பந்து கழக சார்பில் நடத்திய கால் பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
அரி பரந்தாமன் ஆற்றிய உரை:
“நீட் தேர்வு – அனிதாவை எப்படி சாகடித்தது என்பதை இங்கே ‘விரட்டு’ கலைக் குழுத் தோழர்கள் மிகச் சிறப்பாக நாடகமாக நடத்தினார்கள். அனிதாவின் மரணத்துக்கு முன்பாகவே நீட் தேர்வு குறித்து இந்த நாடகத்தை தோழர்கள் தமிழகம் முழுதும் நடத்தினார்கள் என்பதை அறிந்தபோது உண்மையிலேயே நான் மிகவும் நெகிழ்ந்து போய் விட்டேன். மிகப் பெரும் நடிகர்களால்கூட இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அவ்வளவு சிறப்பாக நடித்தார்கள். இவர்களை அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.
நீட் தேர்வு என்று ஒன்று அறிவிக்கப்பட்ட நாள் முதலே, பிரின்ஸ் கஜேந்திர பாபுவைப் போலவே நான் எதிர்த்து வருகிறேன். பெரியார் பிறந்த நாள் விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 1879இல் பெரியார் பிறந்தார். 1891இல் அம்பேத்கர் பிறந்தார். மார்க்ஸ் பிறந்து 200 ஆண்டுகளாகின்றன. இந்த மூன்று தலைவர்களுமே இப்போது நமக்குத் தேவைப்படு கிறார்கள். இங்கே நாடகத்தில் நாம் பெரியார், அம்பேத்கர் தந்த சுயமரியாதை பாடத்தைப் படிப்போம் என்று சொன்னார்கள். மார்க்சையும் இவர்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம் சமதர்மக் கொள்கைகளை இந்த மண்ணில் பரப்பியவர் பெரியார். மார்க்ஸ்-ஏங்கல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1931லேயே தமிழில் வெளியிட்டவர் பெரியார். இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதலில் அது வெளி வந்தது. இன்று பெரியாரின் சுயமரியாதை கொள்கை முன்னெப்போதையும்விட கூடுதலாக தேவைப்படுகிறது.
நீட் தேர்வை எதிர்த்து நாம் போராடினோம். ஆனால் இந்த ஆண்டு ‘நீட்’ நடந்துவிட்டது. அதன் காரணமாக நாம் தோற்றுவிட்டோம் என்று நான் கூற மாட்டேன். 1937இல் இந்தியை எதிர்த்துப் போராடினார் பெரியார். 1939இல் தான் இந்தி ஒழிந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகாலப் போராட்டம் தேவைப்பட்டது. அந்த காலத்தைவிட இப்போது துரோகிகள் அதிகம் என்பதாலும், தமிழக ஆட்சியாளர்களும் மத்திய அரசுக்கு துணைப் போகிறவர்களாக இருப்பதாலும், இப்போது மேலும் சில காலம் கூடுதலாக நாம் போராட வேண்டி யிருக்குமே தவிர, நாம் உறுதியாக நீட்டை ஒழிப்பதில் வெற்றி பெறுவோம். (கைதட்டல்)
நீட் வருவதற்கு முன்பே நாம் நுழைவு தேர்வு முறையைக் கொண்டு வந்து இந்தத் தேர்வு முறைகள் சரியாக இருக்குமா என்று பரிசோதனை செய்து பார்த்து விட்டோம். 1984இல் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார். நுழைவுத்தேர்வு மதிப்பெண், பிளஸ் டூ மதிப்பெண் இரண்டையும் சேர்த்து ‘கட் ஆப்’ மதிப்பெண் அடிப்படையில் நாம் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து வந்தோம். 2006ஆம் ஆண்டு நுழைவு தேர்வு தேவை இல்லை என்று முடிவுக்கு வந்து அதை இரத்து செய்து விட்டோம். நாம் நடத்தியநுழைவுத் தேர்வால் மாநில பாடத் திட்டத்தில் 10ஆவது வரை படித்தவர்கள், 11ஆம் வகுப்பு வந்தவுடன் மாநில பாடத் திட்டத்துக்கு மாறினார்கள். இப்போது கூட ஏதோ ‘சி.பி.எஸ்.ஈ.’ என்றால் அது ‘உயர்ந்த ஜாதி’, மாநில பாடத் திட்டம் என்றால் ‘கீழ் ஜாதி’ என்பதுபோல் பேசுகிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது. இரண்டு பாடத் திட்டங்களும் வெவ்வேறானவை; அவ்வளவுதான்.
இப்போது ஒருவர் நீட் தேர்வு எழுத வேண்டுமானால் அதற்கு பயிற்சி மய்யத்துக்குப் போய் தனிப் பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கு இலட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள்.
‘பிளஸ் டூ’ மதிப்பெண் மதிப்பிழந்து போய் விட்டது. ‘நீட் தேர்வு’ மதிப்பெண்தான் முக்கியம் என்றாகி விட்ட பிறகு சாதாரண ஏழை எளிய குடும்பத்தி லிருந்து கிராமங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்கள், இப்படி பணம் செலவிட்டு படிக்க முடியுமா?
அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் கல்வியை மாநிலங்களின் உரிமைகளாக்கி மாநிலப் பட்டியலில் வைத்தார். 1976இல் இந்த உரிமையை திருடிக் கொண்டு விட்டார்கள். மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு (பொதுப் பட்டியலுக்கு) மத்திய அரசு மாற்றிக் கொண்டு விட்டது. கல்வி மாநிலப் பட்டியலிலேயே இருந்திருக்குமானால் இப்போது ‘நீட்’டே வந்திருக்காது. 1.2.2017 அன்று தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி தீர்மானம் நிறைவேற்றினோம். ஆளும் கட்சி, எதிர் கட்சி என்று அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒருமித்து நிறைவேற்றிய தீர்மானம் அது. ஏதோ, அரசின் உத்தரவு அல்ல. ஒரு சட்டமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது என்றால் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த கருத்து என்று அர்த்தம். அதுவும் தனியார் வியாபாரமாக நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நாம் விதிவிலக்கு கேட்கவில்லை. அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் இடங்களுக்கு மட்டுமே நாம் நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கேட்டோம். அந்த சட்டத்துக்கு இதுவரை மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை.
அரசுக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் ஒரு மாணவருக்கான கட்டணம் ‘எல்.கே.ஜி.’க்கு தனியார் பள்ளிகள் வாங்கும் கட்டணத்தைவிட குறைவு. அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவருக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.8 ஆயிரம் மட்டும்தான். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இந்த எண்ணிக்கையில் கிடையாது. நான் கேட்கிறேன், மோடி குஜராத் மாநிலத்தை 12 வருடம் ஆட்சி செய்தாரே; ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியை அவரது மாநிலத்தில் அவரால் உருவாக்க முடிந்ததா? இந்த பெரியார் மண்ணில் தான் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள். (கைதட்டல்)
இங்கே நாடகத்தில் அனிதா பெற்றது 1176 மதிப்பெண் என்று கூறினார்கள். அதைக்கூட அப்படிக் கூறக் கூடாது. தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் பெறும் மதிப் பெண்களை விட்டு விட்டுப்பார்க்க வேண்டும். அனிதா கணிதத்தில் பெற்ற மதிப்பெண் 200க்கு 200; பவுதீகத்தில் பெற்றது 200-க்கு 200; வேதியலில் பெற்றது 200க்கு 198; உயிரியலில் பெற்றது 200க்கு 194. எத்தகைய சாதனையைப் படைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
நீட் வேண்டாம் என்று நாம் தமிழ் நாட்டில் போராடினோம். அமைதி வழியில் ஜனநாயக முறையில்தான் போராட்டங்கள் நடந்தன. எங்கே யாவது ஒரு சிறு வன்முறை நடந்ததாகக் கூற முடியுமா? ஒன்றரை ஆண்டுகாலமாக நடந்தப் போராட் டத்தில் எங்கேயாவது கலவரங்கள் உண்டா?
இப்போது ஒரு முக்கிய செய்தியை உங்களிடம் கூற வேண்டும் என்பதற் காகவே நான் இந்தக் கூட்டத்துக்கு வந்தேன். நீங்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். திடீரென்று மணி என்பவர் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கானப் போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். சில கட்சிகள் ‘நீட்’டை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க் கிறார்கள் என்றார். நீட் தேர்வை ஆதரிக்கும் பா.ஜ.க.வும் அதற்கு உடந்தையாக இருக்கும் தமிழக அரசும் தங்களின் அரசியல் ஆதாயத்துக்குத் தானே இந்த வழக்கையே போட்டிருக் கிறார்கள்? இதில் அரசியல் ஆதாயம் தேடுவது யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி, சமுதாய நலன் கருதித்தான் நாம் ‘நீட்’ வேண்டாம் என்று கூறுகிறோம். இதை எதிர்த்துப்போராடுவது நமது கருத்துரிமை. அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கி யிருக்கும் கருத்துரிமையை நீதி மன்றங்கள்கூட பறித்துவிட முடியாது. நாம் வன்முறை துளியும் இன்றி போராட்டங்களை நடத்தும்போது உச்சநீதிமன்றம் வன்முறை இல்லாமல் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப் படுமேயானால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. இது தான் நமக்கு மிகுந்த வியப்பைத் தருகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்ததற்குப் பிறகுதான், தமிழக அரசு போராடுகிறவர்களை கைது செய்யத் தொடங்கிவிட்டது. இந்தத் தீர்ப்பு பல சந்தேகங்களை எழுப்பு கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கருத்துரிமையைப் பறித்துவிட முடியுமா என்று கேட் கிறேன். சட்டம் ஒழுங்கு பாதிக்கப் படும் என்பதற்காக கருத்துரிமையைப் பறிக்கக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யிருப்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
‘இந்து’ பத்திரிகை குழுமம் சார்பாக ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட படம். அந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. உச்சநீதிமன்றம் போனார்கள். ஏ.பி.ஷா தலைமை நீதிபதியாக இருநதார். அப்போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காட்டி கருத்துரிமையைப் பறிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி, படத்தின் தடையை நீக்கியது. சட்டம் ஒழுங்கு சீர்குலையு மானால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை. ‘சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்து; கருத்துரிமையைத் தூக்கிப் பிடி’ என்பதே தீர்ப்பின் மய்யமான கருத்து.
பொது ஒழுங்கையும் சட்டம் ஒழுங்கையும் சேர்த்து குழப்பு கிறார்கள். இரண்டும் வெவ்வேறானது. பொது ஒழுங்கு என்றால் என்ன? அரியானாவில் குர்மித் ராம் ரஹிம் என்ற மதத் தலைவர், பாலியல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டபோது கலவரம் வெடித்து 37 பேர் இறந்தார்கள். தீர்ப்பு கூற வேண்டிய நீதிபதியே நீதிமன்றத்துக்கு ஹெலி காப்டரில் போக வேண்டியிருந்தது. அதுதான் பொது ஒழுங்கு சீர்குலைவு.
உச்சநீதிமன்றத்துக்கு அருகிலேயே இருப்பது பாட்டியாலா வளாகம். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையா குமார் மற்றும் அவரது தோழர்கள், அம்பேத்கர், மார்க்ஸ் கொள்கைகளைப் பேசினார்கள். அவர்கள் மீது தேச துரோகச் சட்டம் பாய்ந்தது. பெரியார்-அம்பேத்கர்-மார்க்ஸ் சிந்தனைகளை யும் சேர்த்துப் படிப்பதுதான் உண்மையான கல்வி அறிவு. அவர்கள் சிவப்பும் நீலமும் வேண்டும் என்று சொன்னாலும், நான் கருப்பு-சிவப்பு-நீலம் என்ற மூன்றுக்கும் அவர்கள் பேசுவதாகவே கருதுகிறேன். பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டபோது ஏராளமான மாணவர்களும் பேராசிரியர்களும் அவர்களுக்கு ஆதரவாக வந்தார்கள். நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே விசுவ இந்து பரிஷத்தினர் அவர்களை தாக்கினர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான் தலைமையில் ஒரு குழுவாகவே சென்று நீதிபதிகளை சந்தித்து நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை என்று முறை யிட்டனர். இதுதான் பொது ஒழுங்கு சீர்குலைவு.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது கரசேவைக்குப் போனவர்கள் வந்த இரயில் பெட்டியில் தீப்பற்றி மடிந்தார்கள். அப்படி இறந்த 26 பேர் பிணங்களை வைத்து குஜராத்தில் ஊர்வலம் நடத்த அனுமதித்தார்கள். கலவரத்தில் 2000த்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கொல்லப்பட்டனர். அதுதான் பொது ஒழுங்கு சீர்குலைவு.
‘ஒரே ஒரு கிராமத்தில்’ படம் தொடர்பான வழக்கில் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, கருத்துரிமையைப் பறிக்கக் கூடாது என்று கூறிய உச்சநீதி மன்றம், ‘நீட்’டை எதிர்க்கும் போராட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு போடுவது ஏன்? ஏன் இந்த இரட்டை அணுகுமுறை? இது தான் நான் எழுப்ப விரும்பும் கேள்வி.
சி.பி.அய்., வருமானவரித் துறை மத்திய அரசிடம் இருக்கிறது. மத்திய அரசை எதிர்த்தால் அவர்களை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் இந்த அமைப்புகளைப் பயன்படுத்து கிறார்கள்.
நீட் தேர்வுக்கு விதிவிலக்குக் கேட்டு 1.2.2017இல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு 9 மாதங்களாகியும் ஒப்புதல் கிடைக்க வில்லை. அதற்கு முன்பு 23.1.2017 அன்று நிறைவேற்றப்பட்ட ‘ஜல்லிகட்டு’ மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து விட்டது. ஏன் இந்த பாரபட்சம்?
கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது மட்டுமே இதற்கான தீர்வு. கல்வி உரிமை மாநிலப் பட்டியலில் இருந் திருக்குமானால், நாம் அனிதாவை இழந்திருக்க மாட்டோம். அனிதாவின் மரணத்துக்கான நீதி – நீட் தேர்வை தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிப் பதுதான். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை விலக்கி வைக்கும் சட்டத்தை நிறை வேற்றி அதற்கு ‘அனிதா சட்டம்’ என்று பெயர் சூட்டுவோம். (கைதட்டல்) இதுவே பெரியார் பிறந்த நாள் விழாவில் நாம் எடுக்கும் உறதி. இந்தப் போராட்டத்தில் நாம் உறுதியாக வெற்றி பெறு வோம்” என்றார் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்.
பெரியார் முழக்கம் 05102017 இதழ்