கவுசல்யா – திவ்யாவின் உருக்கமான சந்திப்பு
தர்மபுரியில் திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண், இளவரசன் என்ற தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து, இளவரசனின் குடும்பத்தோடு வாழ்ந்தபோது, ஜாதி வெறி சக்திகள் கலவரம் செய்து கட்டாயப்படுத்தி இந்த இணையர்களைப் பிரித்தனர். இறுதியில் தலித் இளைஞர் இளவரசன், இரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண், வாழ்க்கைத் துணைவரை பறி கொடுத்துவிட்டு கடும் மன அழுத்தத்தில் சமுக – ஜாதியப் பிடிக்குள் சிக்கித் தவிக்கிறார்.
இதே கொடுமைதான் உடுமலை சவுசல்யா என்ற பொறியியல் பட்டத்தாரிப் பெண்ணுக்கும் நிகழ்ந்தது. தன்னுடன் படித்த சங்கர் என்ற தலித் பொறியாளர் மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதால், சங்கரை உடுமலைப்பேட்டையில் கவுசல்யா கண் முன்பே வெட்டி சாய்த்தார்கள். கவுசல்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்ணின் பெற்றோர்களே இந்தக் கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார்கள். ஜாதி வெறி பிடித்த தனது பெற்றோர்களை உதறிவிட்டு, கணவரின் தலித் குடும்பத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார் கவுசல்யா. மீள முடியாத மன அழுத்தத்தில் உறைந்து நின்ற கவுசல்யா, அதிலிருந்து மீண்டு, ஜாதி வெறிக்கு எதிராகவும், பெண்ணுரிமைக்கும் குரல் கொடுத்து வருகிறார். உதகை வெலிங்டனில் உள்ள இராணுவ பயிற்சி மய்யத்தில் தற்காலிக வேலையிலும் சேர்ந்திருக்கிறார். மேட்டூரில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடந்த பிப்ரவரியில் நடத்திய ‘காதலர் நாள்’ விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் நாள் அம்பேத்கர் பிறந்த நாளில் கவுசல்யா, தர்மபுரியில் திவ்யாவின் வீடு தேடிச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஜாதி ஒழிப்புப் போராளியின் பிறந்த நாளில் ஜாதி வெறிக்கு தங்களது அன்புத் துணைவர்களை இழந்த திவ்யா-கவுசல்யாவின் சந்திப்பு மிகவும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் முனைப்பாக களப்பணியாற்றி வரும் பொறியாளர் இரண்யா, கவுசல்யாவுடன் இந்த சந்திப்பில் உடன் சென்றுள்ளார்.
கவுசல்யா, தோழர் என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறார். இந்த சந்திப்புக் குறித்து கவுசல்யா தனது முகநூல் பதிவில், “தோழர் திவ்யாவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். கணவரிடமிருந்து தன்னைப் பிரித்த கொடூரமான ஜாதிவெறியை துணிவுடன் எதிர்த்து நின்றவர் திவ்யா. ஆனாலும் வாய்விட்டுப் பேசவே முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளார். தர்மபுரியில் ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான ஒரு நிகழ்வில் நான் பங்கேற்கச் சென்றபோது, அவரது இல்லம் சென்று சந்தித்தேன். அப்போது திவ்யாவின் தாயாரும் உடனிருந்தார். திவ்யா கல்லூரியில் படித்து வருகிறார். வீடு, படிப்பு என்ற அளவில் வாழ்ந்து வருகிறார். அவரது சமூகம் திவ்யாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வருகிது. திவ்யா நெற்றியில் பொட்டு வைத்தால்கூட உறவுக்காரர்கள் கேலி கிண்டல் செய்கிறார்கள். கணவன் மரணத்தைக்கூட மறந்துவிட்டாள் என்கிறார்கள். இந்த வசவு, அவமானங்களுக்கிடையே திவ்யா வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்று பதிவிட்டிருக்கிறார் கவுசல்யா.
கவுசல்யாவின் சந்திப்புக்கே திவ்யாவின் தாயார் அஞ்சியதாகவும், நீண்ட தயக்கத்துக்குப் பிறகு சில நிமிடங்கள் மட்டுமே திவ்யாவுடன் கவுசல்யா உரையாட முடிந்ததாகவும் உடன் சென்ற கழகத் தோழர் இரண்யா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
பிறகு, கவுசல்யா, இளவரசனின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரை சந்தித்துப் பேசியுள்ளார். மிகவும் உணர்ச்சிபூர்வமான சந்திப்பாக இது நிகழ்ந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் இளவரசனின் தாயார் ‘ஜூ.வி.’ இதழுக்கு அளித்த பேட்டியில், “திவ்யா திருமணத்துக்குப் பிறகு எங்கள் வீட்டில்தான் இருந்தது. இப்போது ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டின் வழியாகவே கல்லூரிக்கு ஸ்கூட்டரில் போவதை நாங்கள் பார்க்கிறோம். ஆனால் எங்கள் வீட்டை கடக்கும்போது, ஸ்கூட்டர் வேகமாகக் கடந்து விடுகிறது. இந்த நிலையில், நான் உடுமலை கவுசல்யாவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். எனது மகன் இளவரசன் செய்த ‘பாவம்’ தாழ்த்தப்பட்ட ஒருத்தியின் வயிற்றில் வந்து பிறந்ததுதான்” என்று உருக்கமாகக் கூறியிருந்தார். இந்த பேட்டியைத் தொடர்ந்து கவுசல்யா, இளவரசனின் தாயார் சந்திப்பு நடந்தது.
கவுசல்யா, தனது கணவர் சங்கர் விருப்பப்படி அவரது குமாரலிங்கம் கிராமத்தில் சொந்த வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். சங்கரின் இரண்டு உடன் பிறந்தவர்களுக்கு கல்விக்கான உதவிகளை செய்து வருகிறார். சங்கர் குடும்பத்தையே தனது குடும்பமாக ஏற்றுக் கொண்டுவிட்டார். கவுசல்யாவின் ஜாதிவெறி பெற்றோர்கள் சிறையில் இருக்கிறார்கள். தனது பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கவுசல்யா உறுதியாக இருக்கிறார். தனது கணவர் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்கச் சென்ற கவுசல்யாவையும் வெட்டினார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நிலையிலும் தனது பெற்றோர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினார் கவுசல்யா.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் ‘எவிடென்சு’ அமைப்பின் இயக்குனர் கதிர், “கவுசல்யாவின் வழக்கு, அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக மாறியிருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாத உதவித் தொகையாக ரூ.5000/- தான் கிடைக்கும். கவுசல்யாவுக்கு, ரூ.11,000/- கிடைக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சிறையில்தான் இருக்கிறார்கள். ஒரு வழக்கறிஞர் குழுவையே உருவாக்கி, அரசு இந்த வழக்கை நடத்தி வருகிறது” என்று கூறியுள்ளார். தலித் இளைஞர்களை மணம் முடித்து, ஜாதி வெறிக்கு தங்களது கணவர்களை பலிகொடுத்த இந்த இரண்டு பெண்களும் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள். சுய ஜாதி எதிர்ப்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.
இவர்கள் ஜாதி ஒழிப்புக்கான போராளிகள்!
பெரியார் முழக்கம் 20042017 இதழ்