புதிய மனுஸ்மிருதியை எழுதி சமூக சட்டமாக்க ஆர் எஸ் எஸ் திட்டம்!

மனுஸ்மிருதியில் பல பிரிவுகளை நீக்கி விட்டுஅதை தூய்மைப்படுத்தி மக்களிடம் பரப்புவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரப் பிரவு தீவிரமாக இறங்கியிருக்கிறது.

சூத்திரர்கள், பெண்களை இழிவுபடுத்தும் பார்ப்பனர்களுக்கான சட்ட நூல் ‘மனுஸ் மிருதி’ ; மனுஸ்மிருதியை தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் (14.04.2013) திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தியது. அம்பேத்கர் மகர் குள நீர் எடுக்கும் போராட்டத்தை ஒட்டி மனுஸ்மிருதியை எரித்தார். சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் பெரியார் காலத்தில் ‘மனுஸ்மிருதி’ எரிக்கப் பட்டது. ‘மனுஸ்மிருதியை’ நியாயப்படுத்தி வெளிப்படையாகப் பேசாமல் பார்ப்பனர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். ஆனால் இந்து சமூகம் கட்டமைத்த வாழ்வியலில் மனுஸ்மிருதி உயிர்த் துடிப்போடு இப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. “பிராமணர்”களுக்கு மட்டுமே திருமணம் செய்யும் உரிமை வழங்கப் படுகிறது.“பிராமணர்களுக்கு”மட்டுமே‘யாகம்’- கடவுள் ‘அர்ச்சனை’- ‘கும்பாபிஷேகம்’ கடவுளோடு நேரடித் தொடர்புகொள்ளும் உரிமைகள் இன்றுவரை வழங்கப்பட்டிருப்பது மனு சாஸ்திரத்தின் கட்டளைப்படித்தான்; இந்த உரிமைகள் அனைத்தும் ‘பெண்களுக்கும்’‘சூத்திரர்களுக்கும்’ ஆகமம் – பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் மறுக்கப்படுவது மனுசாஸ்திரம் அரசியல் சட்டத்திலேயே கோலோச்சுகிறது என்பதற்கான வெளிப்பாடு தான்.

இப்போது ஆர்.எஸ்.எஸ் ஆட்சி அதிகாரத் திமிருடன் வெளிப்படையாகவே மனு சாஸ் திரத்தை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறது. ஆம்.! ‘பூனைக்குட்டி’ வெளியே வந்துவிட்டது. இதுகுறித்து ‘பிரண்ட்லைன்’ ஆங்கில இதழ் (ஆகஸ்ட்4,2017)மோடிசகாப்தத்தில்மனுஸ்மிருதி (manushmiruthi in modi era ) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

 

மனுஸ்மிருதியில் சூத்திரர், பெண்கள் பற்றி கடுமையாக கூறப்பட்டுள்ள இழிவுபடுத்தும் கருத்துகளை இன்றைய காலகட்டத்தில் அப்படியேமக்களிடம் கூறமுடியாது என்பதால் மனுஸ்மிருதியில் பல பிரிவுகளை நீக்கி விட்டு அதை தூய்மைப்படுத்தி மக்களிடம் பரப்புவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரப் பிரவு தீவிரமாக இறங்கியிருக்கிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஒத்துழைப் புடன் மனுஸ்மிருதியை பரப்பும் கருத்தரங்கம். திருவிழாக்கள் போன்ற வடிவங்களில் பரப்புரைகளை நடத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மனுஸ்மிருதியில் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் அடங்கிஇருப்பதுபோல்மக்களிடம்பிரச்சாரம் செய்யவும் அதற்கேற்ப காலத்தின் தேவைக்கு ஏற்றது போல் மனுஸ்மிருதியை மாற்றி எழுதும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

சமூகத்திற்கான சட்டங்களாக பார்ப்பனர் களால் திணிக்கப்பட்ட மனுஸ்மிருதி கி.பி 200ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அடிப்படையில் ஜாதிய அமைப்புஉறுதிப்பட்டு நிற்பதற்கு காரணம் மனுஸ்மிருதி கட்டமைத்த வருணாஸ்ரமம் என்ற அமைப்புதான். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பிரிவுகளை உருவாக்கி சமூகத்தில் அவர் களுக்கான நிலைகளையும் அவர்கள் எத்தகைய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்பதையும் மீறுகிறவர்களுக்கு தரப்பட வேண்டிய தண்டனைகளையும் மனுஸ்மிருதி சமூகத்தின் சட்ட திட்டங்களாக்கியது.

‘மனுஸ்மிருதி’ ஒரே கருத்தாக இல்லை. பல நூற்றாண்டு களின் இடைவெளியில் வெவ்வேறு மனுஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்தும் உண்டு. அத்துடன் அர்த்தங்களும், விளக்கங்களும் வெவ்வேறு முறைகளில் கூறப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது டாக்டர் சுராகாந்த் பாலி என்ற ஆர்.எஸ்.எஸ்-காரர் “பாரத்காதா’ என்று மனுஸ்மிருதிக்கு புதிய விளக்கங்களை தரும் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் இந்த நூலையே மக்களிடம் கொண்டு செல்லதிட்டமிட்டுள்ளது. மனுஸ்மிருதி 400 ஆண்டுக்காலம் தொகுக்கப்பட்டு அவ்வப்போது மாற்றங்களுக்கும்- புதிய விளக்கங் களுக்கும் உள்ளாகி வந்திருக்கிறது எனவும், வாரலாற்றில் 14 மனுதர்மம் கர்த்தாவிகள் இருந்திருக்கிறார்கள் என்றும், எந்த ஒரு மனு மனுதர்மத்தை உருவாக்கியவர்கள் அனைத்து மனுசாஸ்திர கருத்துகளையும் தொகுத்து இதுவே சமூகத்துக்ககான விதிகள் என அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர்கள் இல்லை என்றும், ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில்இப்போது ஆர்.எஸ்.எஸ்-காரர் ஒருவர் புதிதாக வடிவமைத்துள்ள மனுஸ்மிருதி தான் சரியானது என்று எப்படி கூற முடியும்? அதை ஏற்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தயானந்த சரசுவதியே இந்த கருத்தைதான்கூறியிருக்கின்றார்என்பதும்இந்த ஆய்வாளர்களின் வாதம். ‘மனுஸ்மிருதி’ என்ற பெயரில் இப்போது ‘சூத்திரர்’-‘பெண்களை’ மிகக் கேவலமாக எழுதியதை எப்படி நீக்க முடியும்? இதை நீக்கி விட்டு மனுஸ்மிருதியை தூய்மைப்படுத்துவது மக்களை ஏமாற்றுவதாகும் என்றும் ஆய்வாளர்கள் வியப்போடு கூறுகிறார்கள். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ஆர்.கே. கிரில் என்பவர், ‘மனுஸ்மிருதி’பெண்களை இழிவு செய்யவில்லை; அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை முன்வைத்துள்ள்ளது என்கிறார். ஒரு பெண் குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களையும், திருமணத்திற்குப் பின் கணவனையும், முதுமையில் மகனையும் மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்பது பெண்களுக்கான பாதுகாப்பு தான் என்றும், ‘மனுஸ்மிருதி’ சுலோகங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்துப்பார்க்காமல் அனைத்தையும் சேர்த்து விருப்பு வெறுப்பின்றி புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்என்று இந்தஆர்.எஸ்.எஸ். பேராசிரியர் வாதாடுகிறார். பிரபல வாரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா இந்த வாதங்களை மறுக்கிறார்.

மனுஸ்மிருதியில் அடங்கியுள்ள கருத்துக்கள் பல நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டவை கி.மு. 200லிருந்து கி.பி. 200வரை இது எதோ ஒருவரால் மட்டும் எழுதப்பட்டதுஅல்ல இப்போது நம்மிடையே உள்ள மனுதர்மம் ஏராளமான முரண்பாடுகளை கொண்டதாகவே இருக்கிறது.

 

இதற்கு காரணம் பார்ப்பனர்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு விளக்கத்தை வியாக்கியானத்தை தந்து வைத்திருப்பதுதான், இப்போது வெளிப்படையாக பெண்களையும் தீண்டப்படாத சூத்திர மக்களையும் ஒதுக்க வேண்டும். அவர்கள் இழிவானவர்கள் என்ற சுலோகங்களை முழுமையாக நீக்கிவிட்டாலும் கூட மனுசாஸ்திரத்துக்குள்ளே பிரிக்க முடியாத படிபுதைந்து கிடக்கும்பாகுபாடுகளை மறைத்து விட முடியாது. மனுஸ்மிருதி தலித் மக்களுக்கோ பெண்களுக்கோ எதிரானது அல்ல.

அவர்கள் பாதுகாப்பைத்தான் பேசுகிறது என்று நிலைநாட்ட வேண்டுமானால்மனுஸ்மிருதியை புதிதாகவே எழுதி உருவாக்க வேண்டியிருக்கும் அப்போது அதை மனுஸ்மிருதி என்று பெயர் சூட்ட முடியாது “மோடிஸ்மிருதி” என்றுதான் பெயரிட வேண்டும் என்கின்றார். எதையும் ஒளிவு மறைவின்றி பேசக்கூடிய மிகச் சிறந்த ஆய்வாளரான ஹார்பான்ஸ் முக்கியா (HARBANS MUKHIA ) மேலும்இவ்வாறு கூறுகிறார். இன்றைய காலத்துக்கு மனுஸ்மிருதியில் கூறப்பட்ட கருத்துக்கள் பொருந்துமா? மனுஸ் மிருதியையே விட்டுவிடுவோம்; எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன்பு கூறப்பட்டகருத்துக்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு எப்படிபொருத்தும்? 21ஆம் நூற்றாண்டில் இன்றைய விருப்பங்களையும் உணர்வுகளையும் பூர்த்தி செய்ய முடியுமா? பிரச்னைகளையே உருவாக்கும் இந்து சமூகத்தில் பார்ப்பனிய கட்டமைப்புகளை அடித்தளம் மனுஸ்மிருதி.

மனுஸ்மிருதி தான் சமூகத்தின் காட்டிக் கொள்கையாக இப்பொழுதும் இருக்கிறதா, இல்லையா? அரசியல் சட்டத்துக்கு இணையாக மனுஸ்மிருதியும் நடைமுறையில் இருக்கிறது என்பது மறுக்க முடியுமா? இன்றைக்குமே ஒன்றுக்கொன்று முரணானது என்பதை மறுக்க முடியுமா? இந்துத்துவாவின் தீவிர பிரச்சாரங்கள் தான் அனைவரும் சமமானவர்கள் என்பதை உறுதி செய்யும். அரசியல் சட்டத்தின் மீது அவ்வப்போது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றார்கள்.

அரசியல் சட்டத்தை குப்பைக் கடையில் வீசிவிட்டு அந்த இடத்தில் மனுஸ்மிருதியை இந்தியாவுக்கு பொருந்தக்கூடிய சட்டம் என்று நிறுவிடத் திட்டமிடுகிறார்கள். இந்தக் குரல் பாஜக ஆட்சி வந்த பிறகு உரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய சட்டங்கள் தானே ஏற்கப்பட்டிருக் கிறது என்று வாதிடுகிறார்கள் என்றார் ஹர்பன்ஸ் முக்கியா. ஆண்-பெண் சமத்துவம் நவீன சிந்தனையாக வலிமை பெற்று வரும் சூழலில் மனுஸ்மிருதியை இதற்கேற்றவாறு மாற்றியமைக்க முடியாதா என்ற கேள்விக்கு முக்கியா பதிலளிக்கையில் மனுஸ்மிருதியை இந்த வகையில் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் பாதுகாப்பது என்று இவர்கள் மாற்றி அமைக்கப் போகிறார்கள்.

 

 

 

அடிப்படியிலேயே சமத்துவத்தை மறுப்பது மனுஸ்மிருதி 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டு சமத்துவ சிந்தனைகள் அடிப்படையான சமத்துவக் கோட்பாடுகளை வலியுறுத்துகின்றன. பெண்களுக்கு சூத்திரத் தீண்டப்படாதவர்களுக்கு எதிராக மனுஸ்மிருதி கூறும் சில வெளிப்படையான கருத்துக்களை மட்டும் நீக்கிவிடுவது உண்மையான சமத்துவத் துக்கான கொள்கையாக்கப்பட முடியாது. உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற கட்டமைப்பை சமூக அமைப்பின் உயிர் மைய்யமாக வைத்திருக்கிறது. மனுஸ்மிருதி அடிப்படையை அப்படியே வைத்துக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மேற்போக்கான மாறுதல்களை செய்துவிட்டு மனுஸ்மிருதியை நவீன சமூகத்துக்கான கருத்தியலாக மாற்ற முடியாது என்றார் முக்கியா. மனுஸ்மிருதியில் மாற்றங்களை செய்ய அவர்கள் முன்வந்திருப்பதே அதன் பொருந்தாத் தன்மையையும் உள்ளடக்கமான முரண்பாடுகளையும் அவர்களே ஒப்புக் கொள் கின்றார்கள் என்பது உண்மைதான் என்று கூறும் ஆய்வாளர் ஜா “கடந்த சில காலமாகவே மனுஸ்மிருதியைமாற்றியமைக்கும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வந்தாலும் அது நமது அரசியல் சட்டத்தையே பெருமளவுக்கு சீர்குலைக்கும். இன்றைய இந்தியாவுக்கு ‘மனுஸ் மிருதி’ பொருந்தக் கூடியது அல்ல. அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கே அது எதிரானது” என்றார். அவர் மேலும் கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். தத்துவகுரு கோல்வாக்கர் தனது “நாம் அல்லது நமக்கான தேசியத்தின் வரையறை” என்ற நூலில் மைனாரிட்டி மதத்தினருக்கு வாக்குரிமையே கூடாது என்கிறார். இஸ்லாமியர் களுக்கு உரிமைகள் வழங்கப் பட்டிருப்பதுதான் அவர்களை கொதிப்படையச் செய்கிறது. அவர்கள் பொற்காலம் என்று கூறுவது எல்லாம் எது? ஒரு தீண்டத் தகாதவனின் நிழல் -பிராமணின் மீது விழுமானால் கொடுமையாக தண்டிக்கவேண்டும். தூய்மையான ஆரியன் பார்வையிலிருந்து கண்படாமலே ஒதுங்கி யிருக்கவேண்டும். குழந்தைகளைப் பெற்றுப் போடுவதே பெண்களுக்கான தர்மம். சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பிரபல இந்து சாமியார், ஒவ்வொரு இந்துபெண்ணும் 10 குழந்தைகளைப் பெற்றெடுக்கவேண்டும் என்று கூறினார். தாலிபான்கள் பேசுவதைப் போலவே பேசுகிறார்கள்,

 

அந்தக் காலத்தை மீட்டுருவாக்கம் செய்யவே விரும்புகிறார்கள். எத்தனையோ நூற்றாண்டு களுக்கு முன்பு உருவான ஒரு “புனித” நூலை தற்கால அரசியலுக்கு எப்படிப் பயன்படுத்த முடியும்? வரலாற்றை மாற்றி எழுத முடியுமா? என்றார் பேராசிரியர் முக்கியா.

 

சமூகத்தின் பரிணாம வளர்ச்சி, சிந்தனை மாற்றங்களை கவனத்தில் கொள்ளாது. மனுஸ்மிருதியை சில மாற்றங்களை மட்டும் செய்து நடைமுறைப்படுத்த முடியாது என்று தயானந்த சரசுவதியே மனுஸ்மிருதியின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார். இவர்கள் கட்டமைக்கும் புதிய மனுஸ்மிருதி தான் உண்மையானது என்று எப்படி ஏற்க முடியும்? இப்போது புதிய மனுஸ்மிருதியை மாற்றி எழுதுவோருக்கு அதற்கான தகுதி என்ன இருக்கிறது? இதற்கான அதிகாரத்தை யார் தந்தது? இதை எப்படி அங்கீகரிக்க முடியும் என்ற கேள்விகளை எழுப்புகிறார் ஆய்வாளர் ஆர்.கே.சிங். 1927ல் அம்பேத்கரால் ‘மனுஸ்மிருதி’ எரிக்கப்பட்டது.

அண்மையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் விசுவ இந்து பரிஷத். பா.ஜ.க வன்முறையைக் கண்டித்து மனுஸ்மிருதிக்கு தீயிட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் மீண்டும் மனுஸ்மிருதியை கையில்எடுத்தால் என்று பிரண்ட்லைன் கட்டுரை வெளியிட்டுள்ளது அதற்கான எதிர்வினைகளையும் தடுக்க முடியாது.

 

-தமிழில் சுருக்கமாக ‘இரா’

நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்

You may also like...