கண்களைக் குளமாக்கிய ‘மஞ்சள்’ – பூங்குழலி
‘எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும்அல்லன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்கவேண்டும். இந்தநிலை ஏற்படச் சாதி ஒழிய வேண்டும்.’ –பெரியார்
கையால் மலம் அள்ளும் இழிவு என்பது இந்த நாடெங்கும் நம் கண் முன்னால் நடைபெறக் கூடிய ஒரு வன்கொடுமை. ஆனால் சமூகத்தின் அகக் கண்களில் என்றும் படாத ஓர் இழிவாகவே அது இன்று வரைத் தொடர்கிறது. அன்றாடம் கடந்து போகும் ஒரு சாதாரண நிகழ்வைப் போலவே, ரயில்வே பாதைகளில் மலத்தை அள்ளும் ஒரு பெண்ணையோ, மலக் குழிகளில் இறங்கும் ஓர் ஆணையோ இச்சமூகம் துளி அளவும் சலனமின்றி கடந்துப் போகிறது. ஒரு நாய்க்குட்டிக்கு அடிபட்டால் பொங்கி எழும் இச் சமூகம், சக மனிதனின் மாண்புக்கும் உயிருக்கும் கேடாய் இருக்கும் ஓர் இழிவு கண் முன் நடந்தாலும் அப்படி ஒன்று நடக்கவே நடக்காததுபோல கடந்து செல்வதற்கு காரணமாக இருப்பது இச்சமூகத்தின் ஆகப் பெரிய மன நோயான ஜாதி.
இந்நாட்டின் உச்சப் பதவிகள் எப்படி பார்ப் பனர்களுக்கு என்று பன்னெடுங் காலமாக எழுதா சட்டமாக உள்ளதோ அவ்வாறே துப்புரவு பணிகள் ஜாதிய படி நிலையில் இருப்பதிலேயே கீழாக வைக்கப்பட்டுள்ள அருந்ததிய மக்களுக்கு என்றும் எழுதா சட்டமாக உள்ளது. இன்று வரை அரசாங்கத்தின் துப்புரவு பணியாளர் வேலைக்கு தமிழ்நாட்டில் அருந்ததியர்களும் இந்தியாவெங்கும் வெவ்வேறுப் பெயர் களில் அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்டப் பிரிவைச் சேர்ந்த தலித் மக்களையும் தவிர வேறு எவரும் விண்ணப்பிப்பதே இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்தப்பணிகளுக்கு 100 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்குத் தெரியாமல் இல்லை. உயர் கல்வி நிறுவனங்களிலும் உயர் பதவிகளிலும் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த கடுமையாக எதிர்க்கும் இவர்கள் இந்தப் பணியில் 100 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளதை பற்றி வாயே திறப்பதில்லை.
துப்புரவுப்பணி உலகெங்கும் நடைபெறுகிறது. ஆனால் உலகில் வேறு எங்கும் அது ஜாதியோடு இணைக்கப்பட்டிருக்கவில்லை. அது“பரம்பரைத் தொழிலாக“ இல்லை. அதனாலேயே துப்புரவுத் துறையில் நடக்க வேண்டிய எந்தத் தொழில் நுட்ப முன்னேற்றங்களும் நடைபெறாமல் புறக்கணிக்கப் பட்டிருக்கவில்லை.
இந்த நாட்டில் எடுக்கப்படும் அத்தனை முடிவுகளும், அதுதனிமனிதர்களின் தனிப்பட்ட முடிவுகளாக இருந்தாலும், சமூக முடிவுகளாக இருந்தாலும், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளாக இருந்தாலும் அவற்றில் ஜாதியின் கூறுகள் நிச்சயம் இருக்கின்றன. ஜாதியின் தாக்கமின்றி இங்கு எதுவும் இல்லை. திருமணம், வாழ்வியல் சடங்குகள் போன்றவற்றில் மட்டுமல்ல உண்ணும் உணவிலும் ஜாதி இரண்டற கலந்துள்ளது. இச்சமூகம் சக மனிதர்களுடன் நட்புறவு கொண்ட சமூகமாக இருக்க இயலவில்லை. ஏன், “தேசப்பற்று”, “இனப்பற்று” போன்ற எதுவும் இச்சமூகத்தை பிணைக்க முடியவில்லை. காரணம், அடிப்படையிலேயே இச்சமூகம் ஜாதியால் துண்டு துண்டாக சிதறுண்ட சமூகமாக உள்ளது. அதனால் சக மனிதர்கள் மீது வெறுப்பும் அவ நம்பிக்கையும் முன் தீர்மானங்களும் அக்கறையின்மையும் கொண்ட சமூகமாக உள்ளது.
இந்தப் பின்னணியில், துப்புரவுப் பணியாளர்கள் ஜாதிய படி நிலையில் ஆக கீழ் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், ஒட்டுமொத்த சமூகமும் அவர்கள் மீது அக்கறையற்றவர்களாக, அவர்கள் மீது அருவருப்பும் வெறுப்பும் கொண்டவர்களாக உள்ளனர். அப்படிப்பட்ட ஜாதிய சமூகத்தின் அங்கத்தினர்களாக உள்ளவர்களே, அதே ஜாதிய மன நிலையோடு, முடிவெடுக்கும் அதிகாரத்தில் வந்து அமர்கின்றனர். இதுவே கையால் மலம் அள்ளும் முறைக்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்படாததற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.
அது மட்டுமல்ல. தீண்டாமை ஒழிப்பை முன்னெடுக்கும் பலரும் கூட இந்த இழிவைக் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஏனெனில் ஜாதிய மனநிலை ஒழியாமல், ஜாதி ஒழியாமல் தீண்டாமையையும் ஒழிக்க முடியாது. இந்த இழிவுக்கும் முடிவு கட்ட முடியாது.
இந்த அடிப்படைப் புரிதலை உள் வாங்கிக் கொண்டவர்கள் வெகு சிலரே. கையால் மலம் அள்ளும் பணியாளர்கள் குறித்துப் பேசுபவர்கள் கூட ஒரு மனித உரிமை மீறலாக அதைப் பேசிக் கடந்து போகிறார்கள். அது ஒரு மனித உரிமை மீறல்தான். ஆனால் அந்த மனித உரிமை மீறலுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது ஜாதி. இந்த உண்மையைப் பேச முற்போக்குப் பேசுபவர் களுக்கே தயக்கம் உள்ளது. அப்படி இருக்க இந்த இழிவை ஒழிப்பது பற்றி பொதுச் சமூகத்தைப் பேச வைப்பது என்பது ஒரு கனவாகவே இருந்து வந்தது.
இந்தப் பின்னணியில்தான் “ஜாதியை ஒழிப்போம்! கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்! ”என்ற முழக்கத்துடன் ஒருபெரும்பிரச்சாரம்அண்மையில்தமிழகத்தில் முடுக்கி விடப்பபட்டுள்ளது. அமைப்புகள் வட்டத்தில் மட்டுமே பேசப்பட்ட ஜாதி ஒழிப்பு கருத்தியல் இன்று தமிழகத்தின் மய்ய நீரோட்டக் குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்ச் சமூகத்தில் பல் வேறு துறைகளில் தடம் பதித்த முன்னணி கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்தப் பிரச்சாரத்தில் தங்களை இணைத்துக் கொண்டு “ஜாதியை ஒழிப்போம்” என்று உரத்தக் குரலில் முழக்கமிடுகின்றனர்.
நியூஸ் 18 தொலைக்காட்சி, விகடன் குழுமம் என்ற தமிழகத்தின் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற ஊடகங்கள் இந்தப் பிரச்சாரப் பயணத்தில் கைக்கோர்த்துள்ளன.
ஏறத்தாழ10நாட்கள்நியூஸ்18தொலைக்காட்சி தனது செய்திகளில் 3 நிமிடங்கள் இதற்கென ஒதுக்கி, கையால் மலம் அள்ளும் இழிவு குறித்தும், அதன் ஜாதியப் பின்னணி குறித்தும், ஜாதியையும் இந்த இழிவையும் ஒரு சேர ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் தொடர்ந்து செய்திப்படங்களை வெளியிட்டது. இந்த செய்திப் படங்களை, நிகழ்வுகளுக்கு இடையிலான விளம்பரமாக இல்லாமல், செய்திகளுடன் இணைத்துவெளியிட்டது என்பதே இந்தப் பிரச்சாரத்திற்கு நியூஸ் 18 கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
விகடன் குழுமம் தனது இதழ்களான ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் இதழ்களில் தொடர்ந்து இது குறித்து செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டது.
இத்தனைப் பரவலாக இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதற்கு பின்னால் ஜெய் பீம் மன்றம் எனும் அமைப்பும் அதற்கு துணையாக இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் அமைப்புமே உள்ளன.
இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த இரு அமைப்புகளும் கட்டியக்காரி நாடகக் குழுவினருடன் இணைந்து “மஞ்சள்“ என்ற நாடகத்தை கடந்த கடந்த ஜுன் 30 அன்று காமராஜர் அரங்கத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னே நடத்திக் காட்டினர்.
மஞ்சள்நாடகம்அரங்கேறியபோதுஅரங்கத்தில் பல தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களில்பலர் அதிகாரத்தில் இருந்தவர்களும் இருப்பவர்களும் கூட. அவர்கள் அனைவர் முகத்திலும் அறைந்து பல உண்மைகளை முன்வைத்தது நாடகம். தமிழக மேடைகளில் இத்தனை அரசியல் தலைவர்கள் முன், ஜாதியும், வர்ணாசிரமும், பார்ப்பனியமும், இந்துத்துவாவும், மோடியும், காந்தியும் என இச்சமூகம் தொடுவதற்கே பயப்படும் விசயங்கள் உரக்க விமர்சிக்கப்பட்டது இதுவே முதல் முறை. அது மட்டுமல்ல தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களின் வாயால் “ஜாதியை ஒழிக்க வேண்டும்“ என்று சொல்ல வைத்ததுஇந்தநாடகம்.“கையால் மலம் அள்ளும் இழிவை முடிவுக்கு கொண்டு வருவோம்“ என்று மேடையில் இந்த அரசியல் தலைவர்கள் சொல்ல வேண்டிய நெருக்கடியை இந்த நாடகமும் பிரச்சாரமும் ஏற்படுத்தின.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் திருமாவளவன் குறிப்பிட்டதைப் போல நாடகம் நெடுகிலும் கண்களில் நீர் நிறைந்திருந்தவாறேதான் நம்மால் பார்க்க முடிந்தது. கட்டியக்காரி குழுவினர் நடித்த இந்த நாடகத்தை தோழர் ஜெயராணி எழுதியிருந்தார். தோழர் ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கியிருந்தார். மிக கனமான ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு, முழுவதும் அரசியல் பேசும் வசனங் களை வைத்துக்கொண்டு, வேதனையான காட்சி அமைப்புகளையும் வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் ஒரு நாடகத்தை நடத்துவது என்பது அத்தனை எளிதானது அல்ல. ஆனால் அந்த இரண்டரை மணி நேரமும் அரங்கில் இருந்த இரண்டாயிரம் பேரும் முழுமையாக நாடகத்துடன் கலந்து இருந்தனர் என்பதற்கு நாடகம் நெடுகிலும் சரியான இடங்களில் சரியாக வந்து விழுந்த கைதட்டல்களும், நாடகத்தின் முடிவில் அத்தனை பேரும் எழுந்து நின்று எழுப்பிய கரவொலியுமே சாட்சி.
இந்த நாடகத்தின் சிறப்பு என்பது மொத்த நாடகமும் பாதிக்கப்பட்டப் பெண்களின் பார்வையிலேயே சென்றதுதான்.
இது ஒரு சாதாரண நாடகமல்ல. முழுமை யான பிரச்சார நாடகம்தான். அதில் நடிக்க வேண்டுமெனில், இந்நாடகம் சொல்லும் செய்தியை உள்வாங்கி இருந்தல் வேண்டும். ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக் காலம் நடந்த நாடகத்திற்கான பயிற்சியில் அரசியல் பயிற்சியும் அங்கம் வகித்தது என்கிறார் நாடக இயக்குநர் ஸ்ரீஜித்சுந்தரம். அதன் பலனை நடித்தவர்களிடம் காண முடிந்தது. 30-க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்களில் சிறுவர் சிறுமியரும் இருந்தனர். இளைஞர்களும் இருந்தனர். முதியவர்களும் இருந்தனர். அதில் பலரும் முதல் முறையாக நடிக்கவந்துள்ளனர். என்றபோதும் அனைவருமே நாடகத்தின் கருத்தியலோடு ஒன்றி தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
நாடகமெங்கும் பல்வேறு பாத்திரங்களின் குரலில் ஒலித்தது புரட்சியாளர் அம்பேத்கரின் குரலே. பல இடங்களில் அம்பேத்கரின் எழுத்துக்கள் அப்படியே நேரடியாக எடுத்துக் கையாளப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக ஜெய் பீம் என்ற பாத்திரம் முழுமையாக புரட்சியாளர் அம்பேத்கரின் குரலாகவே ஒலித்தது. கையால் மலம் அள்ளும் இழிவை முற்றிலுமாக ஒழிக்க பல ஆண்டுகளாக போராடி வரும் பெசவாடா வில்சன் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் ஆகிய இருவரது கலவையாக ஜெய்பீம் என்ற பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. நாடகம் நெடுகிலும் நடக்கும் பல் வேறு காட்சிகளை இணைக்கும் பாலமாக இருந்த இப்பாத்திரத்தினை ஏற்று, மிகக் கூர்மையான ஜாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு வசனங்களைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் பேசி மிகச் சிறப்பானதொரு பங்கை ஆற்றினார் தோழர் செல்வா. அதே போன்றே தவிர்க்கப்பட்டவர்கள் நூலை எழுதிய பாஷா சிங்கை நினைவூட்டும் பாத்திரத்தை ஏற்று நடித்த பொற்கொடியும் தனது பணியைத் திறம்பட செய்திருந்தார். பாதிக்கப்பட்ட மக்களின் பாத்திரங்களை ஏற்றிருந்த அஸ்வினி காசி, அருணா, சௌம்யா, சம்பத், சங்கர் புகழ், குறிப்பாக தலப்பாக்கட்டியில் கழிவுநீர்த் தொட்டியில் இறக்கிவிடப்பட்டு விஷவாயுதாக்கி பாதிக்கப்பட்ட விஜயகுமாரின் வேடத்தை ஏற்ற ரெஜின் ரோஸ், மற்றும் அனிஷ் அண்டோ, அன்னபூரணி, தீபன், ஜிதேந்தர், மதன், நவீன், சந்தான மேரி அம்மா, சிவ சங்கரன், விஜய், ஆஷா ஆகியோரும் குழந்தைகள் மிருதுளா, நேயா, நித்திலா, திலீபன் உட்பட அனைவருமே அரசியல் உள்வாங்கலுடன் தங்கள் பணியை சிறப்பாக செய்திருந்தனர்.
அதிலும் பள்ளியில் நடைபெறும் காட்சியில் மிருதுளாவின் வசன உச்சரிப்பும் அவமானப்படுத்தப்படும் போது முகத்தில் காட்டிய அலட்சியம், உறுதி, கோபம் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் பெருமிதத்துடன் எழுச்சி கொள்ளவைப்பதாக இருந்தது. ஆதிக்க ஜாதியின் பிரதிநிதியாக நடித்த விஜய்க்கு நாடகம் முடிந்த பிறகு வெளியேவர ஒரு பாதுகாப்பு வளையம் தேவைப்பட்டிருக்கக் கூடும். பார்வையாளர்கள் இடையே அவ்வளவு ஆத்திரத்தைக் கிளப்பியது அவரது நடிப்பு.
மழை இம்மண்ணிற்கு அவசியம்தான். பயிர்கள் வளரவும் இம்மண்ணின் வளத்தைக் காக்கவும் மழை தேவையாய் தான் இருக்கிறது. ஆனால் அதே மழை துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வை எத்தனை மோசமானதாக ஆக்குகிறது என்பதை ஒரு உண்மை நிகழ்வின் ஊடாக விவரிக்கிறது நாடகம். தலையில் மலக் கூடையைச் சுமந்து செல்லும் போது மழை வர, ஒதுங்க முயலும் இடங்களில் உள்ள“மனிதர்கள்“இவரைவிரட்ட, வேறு வழியின்றி மழையிலேயே நடந்து செல்ல, மழை நீர் பட்டு கூடையில் இருந்த மலம் கரைந்து அவர் முகம் உட்பட உடலெங்கும் வழிகிறது. “அந்த மலத்தை விட என்னைப் பார்த்து அருவருத்த மனிதர்களின் முகங்கள்தான் அசிங்கமாக இருந்தன“ என்ற வசனத்துடன் அந்தக் காட்சி முடிகிறது. இனி ஒவ்வொரு மழையின் போதும் இந்தக் காட்சி நம்மனக்கண் முன்னால் வந்து நம் மனதை அறுக்கும்.
இந்த நாடகத்தின் சிறப்பு என்பது மொத்த நாடகமும் பாதிக்கப்பட்டப் பெண்களின் பார்வையிலேயே சென்றதுதான். நேரடியாக அந்தப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள், அதற்கு எதிராக தலை நிமிர்த்தி நின்ற நாராயணம்மா போன்ற பெண்கள், அந்தப் பணிக்கு தங்கள் கணவர்களை பலி கொடுத்த பெண்கள் – என முழுவதும் அவர்களின் பார்வையில் அவர்களின் சொற்களிலேயே நாடகம் பயணிக்கிறது. தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அன்றைய தனது உரையில் மட்டுமல்ல தொடர்ந்து பல ஆண்டுகளாக குறிப்பிடுவதைப் போல, ஜாதிய சமூகத்தைப் புரிந்துகொள்ள ஜாதியப் படிநிலையில் இருப்பதிலேயே கீழாக வைக்கப்பட்டுள்ள ஓர் அருந்தததியராக நின்று பார்க்க வேண்டும். அதிலும் ஜாதியாலும் அதே அருந்ததிய ஆண்களாலும் அடிமைப்படுத்தப்பட்டுள்ள அருந்ததியப் பெண்ணாக நின்று பார்க்க வேண்டும். அப்போதுதான் ஜாதி ஒழிப்பின் தீவிரம் புரியும். இதனை இந்த நாடகம் சரியாக செய்துள்ளது.
கையால் மலம் அள்ளும் இழிவு ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கான அத்தனை வாதங்களையும் எதுவும் மிச்சம் வைக்காமல் மஞ்சள் நாடகம் இச்சமூகத்தின் முன்வைத்ததன் மூலம் தனது கடமையை அது செம்மையாக ஆற்றிவிட்டது. பாஷா சிங்கின் தவிர்க்கப் பட்டவர்கள் (unseen ) நூலை அடிப்படையாக வைத்து இந்த நாடகத்தை தோழர் ஜெயராணி எழுதியுள்ளார். அவரது எழுத்தின் வீச்சை தலித் முரசு இதழை தொடர்ந்து வாசித்தவர்கள் அனைவரும் அறிவார்கள். ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி ஒழிப்பை தனது முதன்மை இலக்காகக்கொண்டு தனது பேனாவை ஜாதி ஒழிப்பு ஆயுதமாக சுழற்றி வருபவர் ஜெயராணி. ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி தலித் முரசு இதழில் அவர் எழுதிய ஒவ்வொருக் கட்டுரையும் இந்தச் சமூகத்தின் அங்கமாக உள்ள அனைவரையும் தலைகுனிய வைத்தது. அல்லது ஜாதிக்கு எதிராக எழ வைத்தது. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு “ஜாதியற்றவளின் குரல்” என்றத் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு பொது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளையும் ஜாதி ஒழிப்பு கருத் தாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் தந்தை பெரியார் விருதை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தது திராவிடர் கழகம். தனது எழுத்தின் வலிமையால்அவர் பெற்ற பாராட்டுகளை விட சம்பாதித்த எதிரிகள் மிக அதிகம்.
நாடகத்திற்கான இசையை சத்ய சரத் மற்றும் விஷ்வ பரத் சகோதரர்கள் வழங்கினர். இசை அமைப்பை மஞ்சுளா பொன்னப்பள்ளியும், அஸ்வினி காசியும் சந்தான மேரி அம்மாவும் செய்துள்ளனர். சந்தான மேரி அம்மாவின் குரலில் ஒப்பாரி பாட்டைக் கேட்டவர்கள் கலங்காமல் இருக்க முடியாது. நாடகம் நெடுகிலும் மஞ்சுளா மற்றும் விஜய்யின் குரல்கள் பல் வேறு பாவங்களில் ஒலித்து காட்சிகளுக்கு வலு சேர்த்தன. இறுதிக் காட்சியில் மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரின் பாடலின் இசையை பயன்படுத்தி வரிகளை அரசியல் நய்யாண்டியாக மாற்றியிருந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது. பாடல் வரிகளையும் ஜெயராணியே எழுதியுள்ளார். வசனங்களைப் போலவே வரிகளிலும் அரசியலும் நய்யாண்டியும் கூர்மையாக ஒலித்தன.
ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான உடைகளை சங்கர் புகழும் உறுத்தாத இயைந்த ஒளி அமைப்பை விக்டரும் செய்திருந்தனர். ஒரு நாடகத்திற்கு நடிப்பவர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு திரைக்குப் பின் வேலை பார்ப்பவர்களும் முக்கியமானவர்கள். அப்படி மேடை வடிவமைப்பையும் பொருட்களையும் ஒருங்கிணைத்து எந்த பிசிறுமின்றி நாடகம் நடைபெற திரைக்குப்பின்னால்இயங்கிய ஜெய் கணேஷ், லோகேஷ் நாகராஜ், இளையராஜா, ஜோஷ்வா, கார்த்திக் மூர்த்தி, பிரசன்னா, விஜய் பிரியன், தேவன் ஆகியோருக்கும் பாராட்டுகள். நாடகத்தை வடிவமைத்து இயக்கியவர் ஸ்ரீஜித் சுந்தரம். 2008-இல் ஈழத்திற்காக நடந்த மாணவர் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்றவர். ஆனால் அவரது சமூகப்பயணம் ஈழத்துடன் தொடங்கவில்லை. இன்று தமிழகத்தில் திரு நங்கைகள் திரு நம்பிகள் பற்றிய புரிதல் ஓரளவேனும் உருவாகியுள்ளது. ஆனால் குறைந்தபட்ச புரிதல் கூட சமூகத்தில் நிலவாத காலக்கட்டத்தில் அவர்களின் மனித உரிமைகளுக்காக உழைத்தவர் அவர். அரங்கக் கலையில் நீடித்த அனுபவம் கொண்ட ஸ்ரீஜித், தனக்கென ஒரு நாடகக் குழுவை உருவாக்க முற்பட்ட போது அதில் முதன்மை நடிகர்களாக திரு நங்கைத் தோழர்களையே இணைத்துக் கொண்டார். அவர்களில் பலருக்கும் நாடகம் புதிது. ஆனால் அவர்களை அரங்கக் கலைஞர்களாக உருவாக்கி ஒரு சமூக அடையாளத்தைத் தந்தவர் அவர். அவர் இயக்கிய முதல் நாடகமான “மொளகாப்பொடி“ எழுத்தாளர் பாமாவின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. தலித் பெண்களின் வாழ்வையும் அவர்கள் தங்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் விதத்தையும் கொண்டாட்டமாக விவரித்த நாடகம் அது.
நாடக மேடையில்“மஞ்சள் எதிர்ப்புப் பாடல்“ என்ற தலைப்பில் ஜெயராணி எழுதி, நிரோ பிரபாகரன் இசையமைத்தப் பாடலும் வெளியிடப் பட்டது. தமிழ்ச் சமூகத்தில் மஞ்சளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அது ஒரு மங்கலகரமான நிறமாகப் பார்க்கப்படுகிறது. அக்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் மஞ்சள் உடை அணிந்து செல்வதான குறிப்புகள் உள்ளன. மஞ் சள் கிழங்கின் மருத்துவ குணத்தின் காரணமாக உணவாகவும் மருந்தாகவும் கிருமிநாசினியாகவும் பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த மஞ்சள், காலப் போக்கில் அந்த அடிப்படை மறைந்து வெறும் நிறமாக “புனிதப்” படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் புதிய உடைகளுக்கு மஞ்சள் தடவுவது, தாலியில் மஞ்சள் கிழங்கு, தாலிக்கயிற்றில் மஞ்சள் என பல சடங்குகளின் மூட நம்பிக்கைகளின் அடிப்படையாக மஞ் சள் நிறம் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது. ஆனால் இதே சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மஞ்சள் என்ற நிறமே, ஏன் அதன் நினைப்பே, வேதனையையும் இழிவையும் நினைவூட்டுவதாக உள்ளது. மஞ்சள் நிறத்தில் உள்ள மலத்தை கையால் அள்ளும் இழிவில் தள்ளப் பட்டுள்ள மக்கள்தான் அவர்கள். அவர்களின் எதிர்ப்புக் குரலாக இந்த “மஞ்சள் எதிர்ப்புப் பாடல்” எழுதப்பட்டுள்ளது. “நல்ல மஞ்சள் உனக்கு.. நாத்த மஞ்சள் மட்டும் எனக்கா” என்று அந்தப் பாடல் வரிகள் எழுப்பும் கேள்விக்கு ஏற்ப நய்யாண்டியும் கோபமும் தெறிக்கும் இசையை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிரோ பிரபாகரன். இந்தப் பிரச்சார இயக்கத்தின் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தோழர் பாரதியும் தோழர் சரவணனும். தோழர் பாரதி சிபிஎம் கட்சியின் உறுப்பினராக பல ஆண்டுகளாக செயலாற்றி வருபவர். அவருடன் பழகும் எவருக்கும் அவரது உற்சாகம் உடனே தொற்றிக் கொள்ளும். அத்தனை துடிப்பான தோழர். இந்தப் பிரச்சார இயக்கத்திற்கு ஆதரவாக குரலெழுப்ப முன் வரக்கூடிய ஆட்களை அடையாளம் கண்டு, அவர்களின் குரலை காணொளியாக பதிவு செய்து உலகெங்கும் பரப்பியதில் இவரது பங்கு மிகமுக்கியமானது. தோழர் சரவணன் ஒரு வழக்கறிஞர். கையால் மலம் அள்ளும் இழிவை நீக்கியே ஆக வேண்டும் என்று நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வருபவர்.
கையால் மலம் அள்ளும் இழிவு ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கான அத்தனை வாதங்களையும் எதுவும் மிச்சம் வைக்காமல் மஞ்சள் நாடகம் இச்சமூகத்தின் முன்வைத்ததன் மூலம் தனது கடமையை அது செம்மையாக ஆற்றிவிட்டது.
இந்தநாடகத்திற்கும் பிரச்சார இயக்கத்திற்கும் பொருளாதார உதவிக் கரம் நீட்டியவர் இயக்குநர் பா. இரஞ்சித். இப்படி ஒரு முயற்சிக்கு ஆதரவளிக்க முன் வந்ததற்காகவே அவரை பாராட்டலாம். ஆனால் அதையும் கடந்து அவரை பாராட்ட செய்தி ஒன்று உள்ளது. தோழர் இரஞ்சித் இன்று தமிழகத்தில் அதிகம் கவனம் ஈர்க்கும் ஒரு மனிதர். அவர் இந்த நாடகத்தின் பங்காக உள்ளார்என்றால், அவரும் ஓர்இயக்குநர்என்ற அளவில், இந்த நாடகத்தின் உருவாக்கத்தில் ஒரு கலைஞராக அவரது பங்கும் இருக்கும் என்பதே பொதுவான புரிதலாக இருக்கும். எனவே இந்த நாடகத்தில் ஏதேனும் தவறாக வந்துவிட்டால் அதற்கான விமர்சனத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டிவரும். அதை நன்கு உணர்ந்திருந்தும், ”இந்த நாடகத்தை எழுதிய ஜெயராணியிடம் ஒரு போதும் நாடக பிரதியை பார்க்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. நாடகம் அரங்கேறும் முன் தான் ஒரு முறை பார்க்கவேண்டும் என்றும் கேட்கவில்லை அவர். சொல்லப் போனால் மக்கள் முன் அரங்கேறிய போதுதான் அவரும் முதல் முறையாக நாடகத்தைப் பார்த்தார்” என்கிறார் ஸ்ரீஜித். “அவர் எங்கள் மீது வைத்த இந்த நம்பிக்கைதான் எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்ததோடு, எவ்வித சமரசமும் இல்லாமல் சொல்ல வேண்டிய செய்தியை அழுத்தமாக வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தவும் வைத்தது” என்று தொடர்கிறார் ஸ்ரீஜித்.
இப்படி சமூகத்தின் மீது ஆழமான அக்கறையும், சக மனிதர்கள் மீது குறைவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்ட அற்புத மனிதர்களின் ஒன்றரை ஆண்டுகால உழைப்பில் உருவானதுதான் மஞ்சள் நாடகமும் இந்தப் பிரச்சார இயக்கமும். பெசவாடா வில்சன் பல ஆண்டுகளாக எதற்காக போராடி வந்தாரோ, அதை பாஷா சிங் தனது எழுத்தால் ஒரு படி முன்னே நகர்த்தினார். தமிழ்நாட்டில் பலரும் பல காலக்கட்டத்தில் இதை பேசிவந்த போதும் பரவலாக பேச வைத்தது தோழர் திவ்யாவின் கக்கூஸ் ஆவணப்படம். அதனை இன்னும் பல படிகள் முன் நகர்த்தி இருக்கிறது மஞ்சள் நாடகமும் அதற்கு முன்னும் பின்னும் ஜெய் பீம் மன்றம் முன்னெடுத்தப் பிரச்சாரமும்.
ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், திரைத் துறையினர், சமூக செயற் பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இந்தப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த பெரும் முயற்சிக்கு பின் ஒரு பெருங்குழுவின் அயராத உழைப்பு உள்ளது. இது ஒரு குழு முயற்சி. குழுவின் அத்தனை உறுப்பினர்களுக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது. அவர்களை பாராட்டும் அதே நேரம் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய சமூக செயற்பாட்டாளர்களுக்கும், ஜாதி ஒழிப்பில் உறுதியானப் பிடிப்புக் கொண்டுள்ளவர்களுக்கும் இந்த நாடகத்தையும் பிரச்சாரத்தையும் அடுத்தக் கட்டத்திற்கு முன் நகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது என்பதையும் நினைவில் கொள்வோம்.
ஜாதியை ஒழிப்போம்! கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்!
“நீதி நம் பக்கம் இருக்கும்போது, நாம் எப்படித் தோற்போம் என்று எனக்குப் புரியவில்லை. இந்தப் போராட்டம், எனக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டுவதாக இருக்கிறது. இந்தப் போராட்டம் முழுமையாக உளப்பூர்வமானது. அதில் துளி அளவும் சுயநலம் இல்லை. அதுஎந்த வகையிலும் விரக்தியூட்டக் கூடியதும் அல்ல. ஏனெனில், நமது போராட்டம் -சொத்துக்கானதோ, அதிகாரத்திற்கானதோஅன்று.நமதுபோராட்டம் விடுதலைக்கானது. இந்து சமூக அமைப்பினால் ஒடுக்கவும் சிதைக்கவும்பட்ட மனித மாண்பை மீட்டெடுப்பதற்கானப் போராட்டமே நம்முடையது. இப்போராட்டத்தில் இந்துக்கள் வென்று நாம் தோற்றால், மனித மாண்பு தொடர்ந்து ஒடுக்கவும் சிதைக்கவும் படும். உங்களுக்கான எனது இறுதி அறிவுரை இதுவே : கற்பி, போராடு, ஒன்றுசேர்.” -புரட்சியாளர் அம்பேத்கர்
நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்