‘பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர்’ : அரசுஅறிவிப்பு!

பெங்களூருவிலுள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு, தந்தை பெரியாரின் பெயர் சூட்டப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமும் விரைவில் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியுள்ளார். தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா, தலித் சங்கர்ஷ சமிதியின் சார்பில் பெங்களூரு அரசு ஊழியர்கள் மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கலந்து கொண்டு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டதலைவர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினார்.

பின்னர் விழாவில் அவர் பேசினார். அப்போது ராமலிங்க ரெட்டி கூறியதாவது:“சமூக நீதிக்காகவும், திராவிடக் கலாச்சாரம் வளர வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தந்தை பெரியார்; அவர் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கான பலனை தற்போது நாம் அனுபவித்து வருகிறோம்; அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர்; அவரின் கொள்கைகளை இளைஞர்கள் தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும்; அவரின் போராட்டங்களால் நாட்டின் பெரும் புரட்சியே ஏற்பட்டது; எனவே, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பெங்களூருவில் ஒரு பேருந்து நிலையத்துக்குப் பெரியாரின் பெயர் சூட்டப்படும்;

அத்துடன், மூட நம்பிக்கையைத் தடுக்கும் வகையில் கர்நாடக அரசு சட்ட மசோதாவைக் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது; எனவே, மக்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து விலகி, புத்தர், பெரியார், அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி வாழ வேண்டும்”.இவ்வாறு ராமலிங்க ரெட்டி பேசினார்.நிகழ்ச்சியில், மூத்த சிந்தனையாளர் கே.எஸ்.பகவான், தலித் சங்கர்ஷ சமிதியின் தலைவர் எச்.மாரப்பா, காங்கிரஸ் பிரமுகர் உதயசங்கர், தம்மையா, எச்.விஸ்வநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 21092017 இதழ்

You may also like...