நீதிமன்றங்கள் கொசுக்களையும் ஒழிக்குமா?
நீதிமன்றத்தில் வந்த கொசு வழக்கு!உச்சநீதிமன்றம் என்றாலே ‘உச்சிக்குடுமி’ மன்றம் தான் என்று தமிழ்நாட்டில் பாமர மக்கள் கூட கூறுவது வழக்கம்.
அந்த உச்சநீதிமன்றம் தலையிடாத பிரச்சினையே இல்லை என்ற நிலை வந்து விட்டது. நாடாளுமன்றத்தையே கலைத்துவிட்டு நீதிபதிகளை மட்டும் தேர்தலில் போட்டியிட வைத்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்களே நீதிபதி களாகலாம் என்ற முறை வந்து தொலைந்தால்கூட வரவேற்கலாம் போலிருக்கிறது.
‘உச்சிக் குடுமி’ மன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தலித் நீதிபதிகூட இல்லை. ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டும் இருக்கிறார். அவரும் தமிழ்நாட்டிலிருந்து சென்ற பானுமதி என்பவர் தான், இப்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ஒரிசா பார்ப் பனர். அவரது குடும்பத்திலிருந்து வந்துள்ள மூன்றாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. ‘அவாளின்’ குடும்ப சொத்தாகி விட்டது.
அண்மையில் இந்த உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு வந்தது; நீதிபதிகளை கடும் ஆத்திர மடையச் செய்த அந்த வழக்கை எத்தனை பேர் ஏடுகளில் படித்திருப்பார்களோ எனக்கு தெரியாது.
தனேஷ் பெஷ்தான் என்பவர் உச்சநீதி மன்றத்தில் கடந்த செப்.22ஆம் தேதி ஒரு வழக்கைப் போட்டார். ‘கொசுக்களை முழுமையாக ஒழிக்க வேண்டும்; கொசுக்களால் நோய் பரவுகிறது; இது தொடர்பாக அரசுக்கு உத்தரவிடவேண்டும்” என்பது தான் வழக்கு.
நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா இருவருக்கும் கோபம் வந்துவிட்டது.
“ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கு கொசுக்கள் இருக்கிறதா அல்லது ஈக்கள் இருக்கிறதா என்று கண்காணித்து எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. நாட்டிலுள்ள கொசுக்களை எல்லாம் அழிக்க வேண்டு மானால், அது கடவுளால் மட்டுமே முடியும். அத்தகைய செயலை செய்து முடிக்கக நாங்கள் ஒன்றும் கடவுள் அல்ல” என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டார்களாம்.
“கொசுக்களே; ஏன் இப்படி மக்களை வாட்டி வதைத்து, நோய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று விளக்கம் கேட்டு, கொசுக் களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாத நிலையில் நீதிபதிகள் வேறு என்ன தான் செய்ய முடியும்?
அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு விசாரணையை மாற்றினாலும்கூட அவர்களுக்கும் ‘கொசு’ பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சட்டத்தில் இடமில்லை!
எனவேதான் நீதிபதிகள் ‘கொசுக்களை கடவுளால்தான் ஒழிக்க முடியும்’ என்ற ‘சட்ட பூர்வமான’ முடிவுக்கு வந்து விட்டார்கள். கொசுப் பிரச்சினை கடவுளிடம் போய்விட்ட நிலையில் அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்துவிட முடியும் என்று நினைப் பது நியாயம்தான். மிகவும் சிரமம்.
கடிக்கிற கொசு இந்துவா, முஸ்லீமா, கிறிஸ்துவமா என்று அரசாங்கத்தால் கண்டுபிடிக்கவும் முடியாது. முஸ்லீம் கொசு என்றால் பாகிஸ்தானிலிருந்து வந்ததுதான் என்று உறுதியாக முடிவுக்கு வரலாம்; இந்துவாக இருந்தால், ‘கொசு பாதுகாப்பு சட்டம்’ கொண்டு வந்து கொசுவை வதை செய்கிறவர் களுக்கு தண்டனை தரும் சட்டம் போடலாம், கொசு வதை செய்யும் இந்து விரோதிகளைக் கண்டிக்க கொசு பாதுகாப்புப் படையை உருவாக்கி – கொசுவை நசுக்கு கிறவர்களை ‘கொசுப் பாதுகாப்புப் படை’ அடித்து, உதைத்து, ‘துவேசம்’ செய்யலாம். ‘இந்து இராஜ்யத்தில்’ இந்த அடிப்படை உரிமைகளை விரும்புகிற எவரும் கையில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கொசுவை ஒழிக்க கடவுளால் மட்டுமே முடியும் என்ற நிலையில் அரசாங்கமும் வேறு என்னதான் செய்ய முடியும்? இவ்வளவு குழப்பங்களும் பிரச்சினைகளும் கொண்டிருக்கிறது ‘கொசு’ பிரச்சினை. ஆனாலும், நீதிபதிகள் மீது நமக்கு வருத்தம் உண்டு. கடவுளால் மட்டுமே கொசுக்களை ஒழிக்க முடியும் என்று கூறி ‘இந்து’க்களின் உணர்வைப் புண்படுத்தி விட்டார்களே என்ற வருத்தம்தான்.
“கொசுக்களை ஒழிக்கும் சக்தி இருந்தும், கடவுள் ஏன் இந்த கொசுக்களை ஒழிக்காமல் இருக்கிறார்? அல்லது இந்த ‘உயிர்வதை’ செய்யும் கொசுக்களை கடவுள் படைக்கா மலேயே இருந்திருக்கக் கூடாதா?” – என்று அறிவியலாளர்கள் கேள்வி கேட்கும் நிலையை நீதிபதிகள் உருவாக்கி விட்டார்களே என்பதுதான் நமது கவலை!
‘சங்பரிவார்’களின் மனம் எவ்வளவு ‘புண்படும்’?
சரி போகட்டும்! இனி நீதிபதிகள் இந்த தீர்ப்பை எவரும் எதிர்த்து கேள்விகள் கேட்கக் கூடாது; சட்டம் ஒழுங்கு பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடாலடியாக ஒரு உத்தரவைப் போட்டு விடுவதுதான் நாட்டுக்கு நல்லது; கொசுக்களுக்கும் நல்லது!
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 09112017 இதழ்