காமராசர் விழா நிகழ்வில் அமைதியாக கடந்து சென்ற “சாமி ஊர்வலம்”
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர்
இரா. உமாபதி, வரவேற்புரையில் காமராசர் விழாவுக்கு பகுதி வாழ் வணிகர்கள் காட்டிய பேராதரவையும் விழாவுக்கு கடந்த 10 நாள்களாக ஒவ்வொரு பகுதியாக கடைகளில் துண்டறிக்கை வழங்கி, சிறு சிறு தொகையாக நன்கொடை திரட்டிய கழகத் தோழர்களின் களப் பணியையும் சுட்டிக் காட்டி உரையாற்றினார்.
“இந்த விழா இவ்வளவு சிறப்புடன் நடைபெறுவதற்கு இப்பகுதியில் உள்ள வணிகர்கள் நன்கொடைகளை வழங்கினர். எங்களுடைய பெரியார் படிப்பகம் அருகில் அடுத்தடுத்து, நாகாத்தம்மன், விநாயகன் கோயில்களும், இராமலிங்கசாமி கோயிலும் இருக்கின்றன. கோயில் நிர்வாகிகளும் கோயிலுக்கு வரும் பக்தர் களும் எங்களிடம் நட்பு பாராட்டுகின்றனர். இந்தக் கோயில்களுக்கிடையே படிப்பகக் கரும் பலகையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் எழுதும் பெரியார் சிந்தனைகளைப் படிக்கிறார்கள். ஒரு நாள் கோயிலுக்கு வந்த அம்மையார் ஒருவர், “இங்கே நீங்கள் எழுதும் கருத்துகளை ஒவ்வொரு நாளும் படிக்கிறேன். எனக்கு நியாயமாகவே தெரிகிறது. எனக்கு பெரியார் நூல்கள் வேண்டும்” என்று கேட்டார். “நாங்கள் நூல்களை விற்ப தில்லை; படிப்பகத்திலேயே அமர்ந்து படிக்கலாம்” என்று கூறினோம். உடனே ஆயிரம் ரூபாயைக் கொடுத்து “எனக்கு பெரியார் நூல்களை வாங்கித் தாருங்கள்” என்று கூறினார். அதற்குப் பிறகு கோயில் பக்கமே நாங்கள் அவரை பார்க்கவில்லை. இங்கே அருகிலுள்ள எல்லா கோயில் களிலும் பக்தர்களுக்காக தயாரிக்கும் உணவை எங்கள் தோழர்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இப்போது நாகாத்தம்மாள் கோயிலில் ஆடித் திருவிழா தொடங்கி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் ஒலிக்கும். இன்று நமது கழகக் கூட்டம் நடப்பதால் ஒலிபெருக்கியை நிறுத்தி விட்டோம் என்று கோயில் நிர்வாகிகள் கூறினார்கள். (பலத்த கைதட்டல்) கூட்டம் நடக்கும் இடம் வழியாக ‘சாமி’ ஊர்வலம் மட்டும் வரும் என்று கேட்டுக் கொண் டார்கள். தாராளமாக வரட்டும் என்று நாங்கள் கூறினோம். இந்தக் கோயில் களில் நிர்வாகிகளாக அர்ச்சகர்களாக இருப்போர் அனைவருமே நமது மக்கள் தான்; ‘சூத்திரர்’கள்தான். எங்களுக்கு கடவுள், மத நம்பிக்கையில்லை என்றாலும், நல்ல உறவைப் பேணி வருகிறோம்”
என்று கூறி, நன்றி தெரிவித்தபோது, கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
பழ. கருப்பையா பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தின் வழியாக சாமி ஊர்வலம் வந்தது. மேளம் வாசிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். கழகத் தோழர்களே சாமி ஊர்வலம் செல்ல ஏதுவாக வழியமைத்து உதவினார்கள்.
பெரியார் இயக்கம் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கட்டிக் காத்து வரும் சீரிய பண்பாடு இது. விவாதங்களும் உரையாடல் களாகவுமே – இங்கே கருத்து மோதல் களாக நடந்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் காவி பயங்கரவாத சக்திகள் ‘பகையை – வெறுப்பை’ உமிழ்ந்து மோதல் களமாக்கி தமிழகத்தின் தனித்துவத்தை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் இந்த வெறுப்பு அரசியலை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 20072017 இதழ்