தலையங்கம் பேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்?
பேரறிவாளன் உடல்நலமில்லாத தனது தந்தையுடன் இருப்பதற்காக பரோலில் விடுதலை செய்யுமாறு கேட்ட கோரிக்கையை தமிழகத்தில் பா.ஜ.க. பினாமி ஆட்சியான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மறுத்துள்ளது, வன்மையான கண்டனத்துக்கு உரியது. 30 நாள்கள் கழித்து வேலூர் சிறை அதிகாரி பரோல் அனுமதியை மறுத்துள்ளார். மத்திய அரசு கீழ் உள்ள சட்டத்தின்படி, பேரறிவாளன் தண்டிக்கப் பட்டுள்ளதால், மாநில அரசுக்குரிய பரோலில் விடுதலை செய்யும் உரிமை (தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்புக்கான விதிகள் 1982) தமிழக அரசுக்கு இல்லை என்று சிறை அதிகாரி காரணம் கூறியிருக்கிறார்.
தண்டனைக் குறைப்பு அதிகாரமே மாநில அரசுக்கு இல்லை என்று இதுவரை கூறி வந்தது தமிழக அரசு. இப்போது பரோலில் விடுதலை செய்யும் உரிமையும் இல்லை என்று கூறியிருப்பது தமிழக ஆட்சியாளர்கள் இறையாண்மையை நடுவண் அரசுக்கு விலைபேசி விற்று விட்டார்களா அல்லது அடகு வைத்து விட்டார்களா என்று கேட்கத் தோன்றுகிறது.
பரோல் மறுப்புக்கு தமிழ்நாடு அரசு கூறும் இந்த வாதம், அடிப்படையே இல்லாத வாதம்; அரசின் கோழைத்தனத்தையே இது காட்டுகிறது.
மத்திய அரசின் கீழ் உள்ள வெடிமருந்து சட்டம், ஆயுதச் சட்டம் போன்ற சட்டங்கள், மற்றொரு ஆயுள் கைதியான ரவி எனும் இரவிச்சந்திரன் மீதும் இருக்கிறது. ஆனாலும் அவர் ஏற்கனவே நான்கு முறை விடுமுறையில் செல்ல தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றமே முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி யதோடு, முதல்வர் ஜெயலலிதா, நடுவண் அரசுக்கு ‘கெடு’வும் நிர்ணயித்தார். அன்றைய காங்கிரஸ் ஆட்சி, உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கியது. அப்போது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன் வைத்த வாதம் தான் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “பேரறிவாளன் மீது தடா சட்டம் போட்டது பொருந்தாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பில் கூறி விட்டது. மத்திய அரசு உரிமைகளுக்குட்பட்ட சட்டப் பிரிவுகளான பாஸ்போர்ட் சட்டம், தகவல் தொடர்பு சட்டம் (ஒயர்லஸ் சட்டம்) ஆகிய சட்டங்களின் கீழ் தரப்படும் அதிகபட்ச தண்டனைக் காலத்தையும் அவர் சிறையில் கழித்து விட்டார். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தான் இப்போது சிறையில் உள்ளார். எனவே மாநில அரசுக்குரிய விடுதலை செய்யும் உரிமையைப் பயன்படுத்தலாம்” என்பதே தமிழக அரசு தாக்கல் செய்த மனு.
மத்திய சட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தை பேரறிவாளன் முடித்துவிட்டார் என்பதை உச்சநீதிமன்றமும் ஒப்புக் கொண்டது. இவ்வளவுக்குப் பிறகு தமிழக அரசுக்கு பரோலில் விடுதலை செய்யும் உரிமைகூட இல்லை என்று ‘சரணாகதி’ ஆட்சி கூறுகிறது என்றால், இதைக் கண்டிப்பதற்கு கடுமையான வார்த்தைகளை அகராதியில் தான் தேட வேண்டும்!
அதேபோல் மாடுகளை இறைச்சிக்கு விற்கக் கூடாது என்ற மத்திய அரசின் ‘கோமாளி’ சட்டத்தை நாடே எதிர்க்கிறது. தமிழ்நாட்டில் ‘சரணாகதி’ ஆட்சி தொடை நடுங்கிப் போய் நிற்கிறது. கேரளா, புதுவை, மேகாலயா சட்டமன்றங்கள், மத்திய அரசின் தாக்கீதை இரத்து செய்து, சட்டமன்றங் களில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டன.
பாரீக்கர் என்ற பா.ஜ.க.வைச் சார்ந்த பார்ப்பனர் முதல்வராக இருக்கும் கோவா மாநிலத்திலேயே இந்தச் சட்டத்துக்கு ஆதரவில்லை. பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு அண்மையில் மீண்டும் கோவாவின் முதல்வராக அமர்த்தப்பட்டுள்ளவர் பாரீக்கர். இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அவரே குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், தமிழக முதல்வர் என்று கூறப்படும் எடப்பாடி பழனிச்சாமி, “நீதிமன்றங்கள் தீர்ப்பை ஏற்றுத்தான் தமிழ்நாடு அரசு செயல்படும்; கேரளா, புதுவை, மேகாலயா மாநிலங்களைப் போல் சட்டங்கள் கொண்டு வர மாட்டோம்” என்று கூறிவிட்டார்.
இப்படி ‘சரணாகதிப் படலம்’ ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போது தமிழக ஆட்சி நிர்வாகத்தில் தாங்கள் தலையிடுவதே இல்லை என்று பா.ஜ.க. தலைவர்கள் ‘சத்தியம்’ செய்து கொண்டிருக் கிறார்கள்.
தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது?
பெரியார் முழக்கம் 29062017 இதழ்